Tuesday, March 13, 2018

பிக்சட் டெபாசிட் மீது கடன் வாங்குவது எப்படி?

                                                                     கடன்

வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் போது நாம் பொதுவாக நம் பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால் சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. அதனை நாம் குறுகிய காலத்தில் திரும்பி செலுத்தவும் முடியும். இத்தகைய அவசர காலங்களில் நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகிய கால கடனை பெற முடியும். அவ்வாறு நீங்கள் முயற்சி செய்யும் பொழுது வங்கிகள், உங்களுடைய வைப்புத் தொகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. இதற்கு பதிலாக நீங்கள் தனி நபர் கடன் பெறலாம். நிலையான வைப்புத் தொகையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தனி நபர் கடனை விட வைப்புத் தொகை மீது கடன் பெறுவதே சிறந்தது. அவ்வாறு கடன் பெற, நீங்கள் ஒரு வங்கி கிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தை நிரப்பித் தர வேண்டும்.

                                                            வட்டி விகிதம்

கடனுக்கான வட்டி விகிதங்கள், பொதுவாக உங்கள் வங்கி வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை விட சுமார் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். எனினும், அது வங்கிக்கு வங்கி மாறுபடும். உதாரணமாக, உங்களுடைய வைப்புத் தொகைக்கு நீங்கள் சுமார் 9 சதவீத வட்டி பெறுகிறீர்கள் எனில், உங்களுடைய கடனுக்கான வட்டி சுமார் 11 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். எனவே, நீங்கள் அதிகமாக சுமார் 2 முதல் 3 சதவீத வட்டியை செலுத்துகிறீர்கள்.

                                                                    கால அளவு

கடனுக்கான கால அளவு, உங்களுடைய வைப்புத் தொகையின் முதிர்வை பொறுத்தது. உங்களுடைய வைப்புத் தொகை முதிர்வடையும் வரை நீங்கள் உங்களுடைய கடனுக்கான தொகையை செலுத்தவில்லை எனில் உங்களுடைய கடன் தொகை வைப்புத் தொகையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.

                                                                    கட்டணங்கள்

இத்தைகைய கடன்களில், எந்தவித ஆபத்தும் இல்லை. எனவே, வங்கிகள் பொதுவாக பிராசஸிங் கட்டணம் வசூலிப்பதில்லை. எனினும், ஒரு சில வங்கிகள் ஒரு சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.

தனி நபர் கடனை விட இது எந்த வகையில் சிறந்தது?

பொதுவாக வங்கிகள், கடன் அளவை பொறுத்து தனி நபர் கடனுக்கு 16 முதல் 20 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மேலும், தனி நபர் கடனுக்கு பிராசஸிங் கட்டணம் வேறு செலுத்த வேண்டும். ஆனால் வைப்புத் தொகை மீதான கடனுக்கான வட்டி சுமார் 11 முதல் 12 சதவீதம் மட்டுமே. எனவே, குறுகிய கால அவசரத் தேவைக்கு வைப்புத் தொகை மீது கடன் பெறுவதே மிகவும் சிறந்தது.

No comments:

Post a Comment