Showing posts with label Advocate act. Show all posts
Showing posts with label Advocate act. Show all posts

Tuesday, March 13, 2018

Notary Public (நோட்டரி பப்ளிக்)

இது குறித்து "The Notaries Act, 1952(53 of 1952)"  ல் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.

நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது

5. வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

7. நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

நோட்டரி பப்ளிக்காக பணி செய்ய விரும்புபவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, இந்த சட்டத்தின் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி அரசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள பிரிவு 5(a) ன்படி உரிமை உடையவர்கள் ஆவார்கள். அதேபோல் பிரிவு 5(b) ன்படி குறிப்பிட்ட காலத்திற்கு ( சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள்) பணியாற்ற அரசிடமிருந்து சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விதி எண் 8 ன்படி மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழை, குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க கொடுக்கப்படும் விண்ணப்பம், முதலில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரிவு 9 ன்படி மேற்படி சான்றிதழ் இல்லாமல் யாரும் நோட்டரி பப்ளிக்காக பணியாற்ற முடியாது.

நோட்டரி பப்ளிக்கின் பணிகள் பற்றி இந்த சட்டத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில பணிகளை கீழே கூறியுள்ளேன்.

1. எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்

2. எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit)

3. ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்

4. நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்

5. தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்

நோட்டரி பப்ளிக் தனது பணிகளை செய்யும் போது அவருக்குரிய முத்திரையை பயன்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும். "சான்றுறுதி அலுவலர் விதிகள் 1956" ன் விதி 12 ல் அந்த முத்திரை எந்த அளவில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அந்த முத்திரை 5 செ. மீ விட்டமுள்ள சாதாரணமான வட்டவடிவில் இருக்க வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக்கின் பெயர், பணியாற்றும் பகுதி, பதிவு எண், அவரை நியமனம் செய்த அரசு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 139 ல் நோட்டரி பப்ளிக்கால் சரிபார்த்து கையெழுத்து செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலம், நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297 லிலும் கூறப்பட்டுள்ளது.

Wednesday, November 29, 2017

வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்

வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம்


                 ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் கோரிக்கையான, வழக்கறிஞர் சட்டம், 1961ஐ, முழுவதுமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்த எந்தவொரு வழக்கறிஞரும், நாட்டின் எந்த மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளிலும் எந்த வகையான வழக்கிற்கும் ஆஜராகலாம்.

                         இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், பிற மாநிலங்களில் உள்ள கோர்ட்டுகளுக்கு சென்று, வழக்குகளில் வாதாட முடியாத நிலை உள்ளது. அதனால், வழக்கறிஞர் தொழிலை நெறிபடுத்துவதற்கும், சட்டக் கல்வியை மேம்படுத்துவதற்கும், "வழக்கறிஞர் சட்டம் 1961' ஐ மத்திய அரசு உருவாக்கியது. இந்த சட்டப்பிரிவு, 30ன் படி, எந்தவொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் சென்று, வழக்கு விசாரணைகளில் ஆஜராகலாம்.

                             1961, மே 19ம் தேதியன்றே இந்த சட்டம் இயற்றப்பட்டாலும், இதற்கான அரசாணையை பிறப்பிக்காமல், பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் தரப்பிலும், இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. அகில இந்திய பார் கவுன்சில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பார் கவுன்சில்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்கறிஞர்கள், நாடு முழுவதும் பல விதங்களில் போராடியும் வந்தனர்.

                                     நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த இதை, மத்திய அரசு கடந்த வாரம் ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சகம் சார்பில், இதற்கான உத்தரவு, கடந்த 15ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில், வழக்கறிஞர் சட்டம், 1961ஐ, உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், எந்த கோர்ட்டுகளிலும் எந்தவகையான வழக்குகளிலும் தடையின்றி ஆஜராகி வாதாட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. வழக்கறிஞர்கள், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது.

                       ஓரிரு தினங்களுக்குள் படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களும், இந்த சட்ட நடைமுறையை ஏற்று அதன்படி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கறிஞர் சட்டத்தை அமல்படுத்தியதற்காக, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு அகில இந்திய பார் கவுன்சில் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.,யும் தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் உறுப்பினருமான கார்வேந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.

                                கார்வேந்தன் கூறுகையில், "வழக்கறிஞர் தொழிலில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய உத்தரவு இது. வழக்குத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்த உத்தரவு இருக்கும். நீதித்துறையில், புதிய மாற்றங்களையும் நல்லவிதமான விளைவுகளையும் உருவாக்கும் வகையில் அரசின் இந்த உத்தரவு உள்ளது. "வழக்கறிஞர் தொழிலில் இதுவரை இருந்து வந்த முக்கியமான தடைக்கல் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் இதை வரவேற்கின்றனர்' என்றார்.