Showing posts with label LAW NOTES. Show all posts
Showing posts with label LAW NOTES. Show all posts

Tuesday, March 13, 2018

தவறை செய்யும் வழக்கறிஞர்களுக்கு சட்டம் உதவி செய்யாது

வாதிகள் விளம்புகை மற்றும் செயலுறுத்துக் கட்டளை பரிகாரம் கோரி திருப்பூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் இடைக்காலமாக ஒரு மனுவை தாக்கல் செய்து, சொத்தை நில அளவையர் உதவியுடன் அளக்க ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அந்த மனுவை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரதிவாதிகளின் வழக்கறிஞர் ஒரு மேற்குறிப்பை செய்து கொடுத்தார். அதனால் நீதிமன்றம் வாதிகள் கோரியபடி வழக்கு சொத்துக்களை நில அளவையருடன் ஆய்வு செய்து, அளந்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து பிரதிவாதிகள் இந்த சீராய்வு மனுவை செ‌ன்னை உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்தனர்.

பிரதிவாதிகள் / மேல்முறையீட்டாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், ஆட்சேபனை இல்லை என்று மேற்குறிப்பு செய்து கொடுக்குமாறு பிரதிவாதிகள் அவர்களது வழக்கறிஞருக்கு எந்த அறிவுறுத்தலையும் கொடுக்கவில்லை, ஆனால் வழக்கறிஞர் பிரதிவாதிகளை கேட்காமல் அப்படி ஒரு மேற்குறிப்பை செய்து கொடுத்துள்ளார் என்பதை முக்கிய காரணமாக கூறினார்.

வாதிகள் / எதிர்மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், ஒரு வழக்கறிஞரின் நேர்மை குறித்து வினா எழுப்பி மிகவும், தரக்குறைவான காரணத்தை பிரதிவாதிகள் / மேல்முறையீட்டாளர்கள் முன் வைத்துள்ளதாகவும், தங்களுடைய வழக்கறிஞரின் முதுகில் குத்துகிற ஒரு செயலில் பிரதிவாதிகள் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வழக்கறிஞருக்கு தொழில் ரீதியாக உள்ள கடமை குறித்து வினா எழுப்பியுள்ளதாகவும் கூறி பிரதிவாதிகளின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கூறினார்.

இருதர‌ப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திரு. P. தேவதாஸ் அவர்கள்

உரிமையியல் வழக்குகளில் ஒரு வக்காலத்தை அளிப்பதன் மூலம் ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். வக்காலத்தை ஒரு வழக்கறிஞருக்கு அளிப்பது என்பது அவருக்கு அதிகாரத்தை வழங்குவது போன்ற ஒரு செயலாகும். கட்சிக்காரர் முதல்வராகவும், வழக்கறிஞர் அவருடைய முகவராகவும் செயல்படுகிறார். அவர்களுக்கிடையே முதல்வர், முகவர் என்ற நெறிமுறை உருவாகிறது. முகவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு ஒரு முகவர் செயல்படக்கூடாது என்பது முகவருக்கான அடிப்படை நெறிமுறையாகும். ஆனால் அந்த நெறிமுறை வழக்கறிஞர்களுக்கு பொருந்தாது. வழக்கறிஞர்களுக்கென்று சில சிறப்பு இயல்புகளும், சிறப்பு தகுதிகளும் உள்ளது. ( பார்க்க :- இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளைகள் 22(1),39-A மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 303, 304) அந்த சிறப்பு தகுதியானது வழக்கறிஞர்களின் தனித்தன்மை மற்றும் அச்சமில்லாமல் செயல்படுவதை பாதுகாப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கை நடத்துவதும் அதற்கான எதிர்ப்பு வாதத்தை முன் வைப்பதும் ஒரு வழக்கறிஞரின் அடிப்படை கடமையாகும். அவருக்குள்ள தொழில் ரீதியான கடமை அல்லது ஆளுமையை அவருடைய கட்சிக்காரர் உட்பட எந்தவொரு நபருக்காகவும் அவற்றை அடகு வைத்துவிட முடியாது. ஒரு வழக்கறிஞர் தன்னுடைய தொழில் ரீதியிலான கடமையை மேற்கொள்ளும் போது அதுகுறித்து கட்சிக்காரர், எதிரி, அரசு தரப்பு, நிர்வாகம் அல்லது சட்டம் இயற்றுபவர்கள் என யாராலும் கருத்து தெரிவிக்கவோ, அதிகாரம் செலுத்தவோ முடியாது. ஒரு வழக்கறிஞர் தொழில் ரீதியான கடமையை மேற்கொள்ளும் போது அவரை யாரும் தடுக்க முடியாது.

ஒரு வழக்கை நடத்துவது என்பது அந்த வழக்கறிஞரின் தொழில் சார்ந்த திறமையை பொறுத்தது. ஒரு குற்றவியல் வழக்கில் ஒரு வழக்கறிஞர் சற்று சறுக்கினால் அவருடைய கட்சிக்காரர் சிறையில் இருக்க வேண்டியது வரும். அதேபோல் ஒரு உரிமையியல் வழக்கில் ஒரு வழக்கறிஞர் சற்று சறுக்கினால் கட்சிக்காரரின் மதிப்பு வாய்ந்த சொத்து, பணம், கவுரவம் ஆகியவற்றை இழக்க நேரிடுவதோடு தெருவில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுவிடும். ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் வழக்கறிஞரின் மீது சுமத்தப்படும்.

ஒரு வழக்கு சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் தன்னுடைய தொழில்முறைக் கடமையை ஆற்றும் விதமாக முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். அவர் ஒரு விண்ணப்பத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கிற நிலைப்பாட்டினை எடுக்கலாம். சில நேரங்களில் அந்த வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் மறு தரப்பினர் செயல்படுவதை தவிர்க்கும் விதமாக ஒரு விண்ணப்பத்தை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிற மேற்குறிப்பை செய்யலாம். வழக்கறிஞர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருடைய கட்சிக்காரரின் நலத்தை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கும். எனவே அத்தகைய ஒரு முடிவை எடுத்ததற்காக வழக்கறிஞரை குறை சொல்லக்கூடாது.

ஒரு வழக்கறிஞருக்கு கட்சிக்காரர் ஊதியம் அளிக்கிறார் என்பதற்காக அவரை எஜமானராக கருத முடியாது. ஒரு வழக்கறிஞர் யாருக்கும் ஊழியராக செயல்படக்கூடியவர் அல்ல. அவருடைய மனசாட்சி, சட்டம் மற்றும் கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளுக்கும் கீழ்படிந்து நடக்கக்கூடிய நபராவார். அவர் பணிபுரிந்து வரும் மூத்த வழக்கறிஞரும் அவருக்கு எஜமானராக இருக்க முடியாது. அவர் ஒரு குருவாகத்தான் இருக்க முடியும்.

ஒரு வக்காலத்தை படித்து பார்த்தால் ஒரு வழக்கறிஞருக்கு அந்த வக்காலத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். ஒரு வழக்கை நடத்துகிற போது அவருடைய தொழில் சார்ந்த கடமையின் அடிப்படையில் அவர் உடனுக்குடன் சில முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. ஒவ்வொரு வழக்கறிஞரும் நீதிமன்றத்தின் அலுவலராக கருதப்படுகிறார்கள். அது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதியாகும். நீதி நிர்வாகத்தின் தனித்தன்மையை காப்பாற்றுவதில் வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு வழக்கறிஞர் யாரையும் சாரந்திருக்காமல் சுதந்திரமாக செயல்பட கூடியவராக இருக்க வேண்டும்.

தொழில்முறைக் கடமையை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு ஒரு வழக்கறிஞர் அவருடைய தொழிலில் தவறாக நடந்து கொள்வது, ஏமாற்றுவது, உடந்தையாக இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அதுபோன்ற தவறை செய்யும் வழக்கறிஞர்களுக்கு சட்டம் உதவி செய்யாது.

எனவே ஒரு வழக்கறிஞர் தனது தொழில்முறைக் கடமையை செய்யும் பொழுது ஒரு மனுவை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினால் அது தவறு கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO. - 3630/2013, DT - 4.4.2017

D. Jeganathan and S. Gopinath Vs V. Duraisamy and V. Somu

2017-2-MWN-CIVIL-279
2017-3-MLJ-837"