Showing posts with label Criminal type cases. Show all posts
Showing posts with label Criminal type cases. Show all posts

Tuesday, February 13, 2018

ஒருவரை கொலை செய்வதாக வெறும் வார்த்தைகளால் மிரட்டினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) & 506(2) ன் கீழ் வழக்கு தொடர முடியுமா?

***********************************************************************
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) ன் கீழான குற்றத்தை பொறுத்து மதுரை உயர்நீதிமன்றம் " சீனிவாசன் Vs சார்பு ஆய்வாளர் (2009-4-MLJ-CRL-1118)" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பத்தி 11 ல் பின்வருமாறு கூறியுள்ளது.

ஒருவருக்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கம் இருந்தால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ல் கூறப்பட்டுள்ளவை பொருந்தும். ஒருவருக்கு அபாயம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெறுமனே வெறும் வார்த்தைகளை பயன்படுத்துவது போதுமானதல்ல. ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு, புகழுக்கு அல்லது சொத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டார் என்பதை எடுத்துக் காட்டினால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச் செயல் நிகழ்ந்துள்ளதாக கருதப்படும்.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " இராஜன் Vs காவல்துறை ஆய்வாளர் (2008-2-MWN-CRL-258)" என்ற வழக்கில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பத்தி 10 - ல்

" இதே போன்ற சங்கதிகள் கொண்ட " உஷாபாலா Vs பஞ்சாப் மாநில அரசு (2002-2-CCC-320-P&H)" என்ற வழக்கில், பஞ்சாப் உயர்நீதிமன்றம் இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

வெறுமனே மிரட்டுவதால் இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் இந்த மனுதாரருக்கு எதிராக உள்ளதாக கருத முடியாது. எனவே இந்த மனுதாரருக்கு எதிராக எந்த வழக்கும் உருவாகவில்லை.

எனவே 15.7.1999 ஆம் தேதி இ. த. ச பிரிவுகள் 406 மற்றும் 498(A) ன் கீழ் பாட்டியாலா, சாதர் காவல் நிலையத்தில் குற்ற எண் 313 என்கிற எண்ணில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நிகழ்நிலை புகார்தாரரை மிரட்டியதாக மட்டுமே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது  அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையினரின் பாதுகாப்பு அவரால் கோரப்படவில்லை. எனவே இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்றச்சாட்டும் நிலைக்கதக்கதல்ல என்கிற முடிவிற்கு இந்த நீதிமன்றம் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " கிருஷ்யா டைல்ஸ் & போர்டடரிஸ் (மெட்ராஸ் பி. லிட்) Vs காவல்துறை ஆய்வாளர் (2006-2-CTC-642)" என்ற வழக்கில், 1 முதல் 3 வரையான எதிரிகள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டினார்கள் என்கிற குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக கூறப்படும் அந்த கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளது.

இதேபோன்றதொரு தீர்ப்பு " D. சுப்பிரமணியன் சுவாமி Vs C. புஷ்பராஜ் (1998-1-CTC-300)" என்ற வழக்கிலும் கூறப்பட்டுள்ளது.

எனவே ஒருவரை கொலை செய்து விடுவதாக வெறும் வார்த்தைகளால் மட்டும் திட்டியதற்காக அவர் மீது இ. த. ச பிரிவுகள் 506(i) மற்றும் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர முடியாது எனவும் அவ்வாறு தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 18665/2014, DT - 21.4.2015

S. Selvakumar Vs Inspector of police, AWPS, Keelakkarai, Ramanathapuram District

2015-2-MWN-CRL-195

Wednesday, January 10, 2018

குற்ற வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மின்னணு ஆவணங்களின் (Electronic Documents) நகல்களை (Copies) பெற அந்த வழக்கின் எதிரிக்கு எந்த பிரிவின் கீழ் உரிமை உள்ளது?

இராம் பிரசாத் என்பவர் மீது இ. த. ச பிரிவு 323 ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் இந்த வழக்கில் 5 ஆம் எதிரி ஆவார். மற்ற எதிரிகள் மீது இ. த. ச பிரிவுகள் 302 மற்றும் 34 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டது. அதில் ஒரு வீடியோவும், ஒரு குறுந்தகடும் சான்றாவணமாக குறியீடு செய்யப்பட்டது. இராம் பிரசாத் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அந்த குறுந்தகடின் நகலை தனக்கு தர வேண்டும் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவிற்கு பதிலுரை தாக்கல் செய்த காவல்துறையினர் இ. த. ச பிரிவு 29 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 3 ஆகியவற்றின்படி குறுந்தகட்டை ஒரு ஆவணமாக கருதக்கூடாது, எனவே இராம் பிரசாத்க்கு குறுந்தகட்டின் நகலை தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினர்.

காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட குற்றவியல் நடுவர் இராம் பிரசாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடஉத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து இராம் பிரசாத் இந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிபதி திரு. வைத்தியநாதன் விசாரித்தார்.

இந்திய சாட்சிய சட்டத்தில், 2000 ஆம் ஆண்டில் சட்டம் 21/2000 ன்படி புதிதாக 65(B) என்கிற சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டு அது 17.10.2000 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி மின்னணு நகல்களை சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு ஏதுவாக எதிரிக்கு வழங்க வேண்டும். அப்படி எதிரிக்கு வழங்காவிட்டால் அவரால் சாட்சிகளை முழுமையாக குறுக்கு விசாரணை செய்ய முடியாது.

இதுபோக இந்திய தண்டனைச் சட்டத்தில் 17.10.2000 ஆம் தேதியில் புதிதாக சட்டப் பிரிவு 29(A) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதில் மின்னணு ஆவணங்கள் என்ற சொற்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ல் பிரிவு 2 உட்பிரிவு 1 கூறு (2) ல் கூறப்பட்டுள்ள பொருளையே கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின்படி குறுந்தகட்டின் நகலை பெற எதிரிக்கு உரிமை உள்ளது என்று கூறி இராம் பிரசாத் மனுவை தள்ளுபடி செய்து குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதியரசர் உத்தரவிட்டார்.

CRL. OP. NO - 18495/2013 dt- 7.1.2014

 இராம் (எ) இராம் பிரசாத் Vs ஆய்வாளர், கண்டோன்மெண்ட் காவல் நிலையம், திருச்சி       2014-2-MLJ-CRL-83

Wednesday, December 20, 2017

நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது

 ஓர் எதிரிக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்வதற்கு முன்பாக, அந்த எதிரிக்கு அறிவிப்பு அனுப்பி, அவர் தரப்பு வாதத்தையும் நீதிமன்றம் கட்டாயம் கேட்க வேண்டும்.

 நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது. ஜாமீன் வழங்குவதற்கும், அதனை ரத்து செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அவை இரண்டும் வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்றாக எதிரி காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தாலும், எதிரி அவ்வாறு செய்யவில்லை என்ற காரணத்திற்காக அவரது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யக் கூடாது. எதிரி காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராகி கையெழுத்து போடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

எதிரியின் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கலாம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏழ்மை நிலையின் காரணமாகக் காவல் நிலையத்திற்கு செல்ல அவரிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் அல்லது புகார்தாரர் அவரைக் கையெழுத்து போடவிடாத படி தடுக்கலாம் அல்லது காவல் துறையினரே எதிரி கையெழுத்து போட விடாமல் தடுக்கலாம். எனவே ஜாமீன் மனுவை ரத்து செய்வதற்கு முன்பாக எதிரிக்கு அதுகுறித்து ஒரு அறிவிப்பை அனுப்பி அவர் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும்

ஜாமீன் உத்தரவை ரத்து செய்வது அபாயமான ஒன்றாகும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை திரும்பப் பெறுகிற ஒரு விஷயமாகும். இயற்கை நீதிமுறைகள் மிகவும் முக்கியமானதாகும். இயற்கை நீதிமுறைகள் குறித்து சட்டத்தில் கூறப்படவில்லை என்றாலும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் இருக்க வேண்டிய ஒன்றாகும். இதற்கு நீதிபதிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. உயர்ந்த நுட்பங்களைக் கொண்ட ஒரு கம்ப்யூட்டர் கூட ஒரு நீதிபதிக்கு மாற்றாகச் செயல்பட முடியாது.
 ஏனென்றால் கம்ப்யூட்டருக்கு எந்தவிதமான உணர்ச்சிகளோ, உணர்வுகளோ கிடையாது. எனவே ஜாமீன் வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யும்போது நீதிபதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

CRL. RC. NO – 253 & 254/2016, DT – 13.06.2016, Uma Maheshwari (253/2016)Vs Inspector of police, District Crime Branch, Madurai & R. Hariharan (254/2016) Vs Inspector of police, District Crime Branch, Madurai (2016-3-MWN-CRL-121)