Saturday, December 16, 2017

மனைவி சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா?

மனைவி சொத்தில் கணவனுக்கு உரிமை உண்டா?


ஒரு சொத்துக்கு வாரிசுதாரர்கள் எந்த வகையில் உரிமை கோர முடியும் என்பது அந்தச் சொத்து எந்த வகையில் வந்தது என்பதைப் பொறுத்து இருக்கிறது. பூர்வீகச் சொத்தாக இருந்தால் அதில் உடைமையாளரின் மகனுக்கும் பின் அவருடைய பேரனுக்கும் உரிமை உண்டு.
அதே சமயத்தில் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தாக இருந்தால் அந்தச் சொத்துக்கான உரிமை அவருக்கு மட்டுமே உரித்தானது. அந்தச் சொத்தில் மற்ற எவரும் உரிமை கோர முடியாது. அவருடைய காலத்திற்குப் பிறகு அந்தச் சொத்தை தன் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கும் உரிமை அவருக்கு உண்டு. அது எவருடைய தலையீடுக்கும் அப்பாற்பட்டது.
அவரது வாரிசோ, உறவினரோ யாரும் அந்தச் சொத்தின் மீது உரிமை கொண்டாடவும் முடியாது. இன்னொரு முறையில் பார்த்தால் மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா என்னும் ஒரு கேள்வி வருகிறது. மேற்சொன்ன முறையில் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும், அது அந்தப் பெண்ணுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்து.
அதாவது பெற்றோர் தன் பெண்ணில் நலத்திற்காக அவருக்கு ஒரு சொத்தை எழுதிவைக்கிறார் என்றால், அந்தச் சொத்து அவளுக்கு மட்டுமானதுதான். ஒரு கணவன் தன் சுய சம்பாத்தியம் மூலம் தன் மனைவி பெயருக்கு ஒரு சொத்தை வாங்குகிறார் என வைத்துக்கொண்டால் அந்தச் சொத்திலும் கணவன் உரிமை கொண்டாட முடியாது.
எந்த வகையில் ஒரு பெண்ணின் பெயரில் சொத்துப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அதற்கு அந்தப் பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அவருக்கு மட்டுமே உரிமை உடைய தனிபட்ட சொத்து என்கிறது. இதன்படி கணவன், மனைவி பெயரில் இருக்கும் சொத்தில் தனக்கும் உரிமை உண்டு எனச் சொந்தம் கொண்டாட முடியாது என்பது தெளிவாகிறது. ஒரு பெண் தனக்கு உரிமைப்பட்ட சொத்தைத் தன் காலத்திற்குப் பிறகு யாருக்கும் எழுதி வைக்க முடியும்.
கணவன் தன் வருமானத்தின் மூலம் வாங்கிய சொத்தை மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்திருந்தாலும் அந்தச் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை. அதே சமயம் சட்டப்படி அந்தச் சொத்தைப் பெற ஒரு வழி இருக்கிறது. அந்தச் சொத்து வாங்கியதற்காகச் செலுத்தப்பட்ட பணம் தன்னால் மட்டுமே அளிக்கப்பட்டது என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூப்பிக்கும்பட்சத்தில் இது சாத்தியம்.




பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு...சட்டத்தில் ஒரு தெளிவு .

பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு...சட்டத்தில் ஒரு தெளிவு .



பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு:2005-ல் வந்த புதிய சட்டத் திருத்தம்:இதுவரை குழப்பமாகவே இருந்துவந்த சட்டத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது.


சொத்துக்களில் 2 வகைகள்;

1)தனிச் சொத்து. (தானே கிரயம் வாங்கியது போன்றவை).

2)பூர்வீகச் சொத்து (அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா சொத்துக்கள்).

தனிசொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரிசமமான உரிமை உண்டு என 1956ல் வந்த இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டத்தில், பூர்வீக சொத்துக்களில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும், மகள், பேத்திகளுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இதை ஒருவாறு சரிசெய்து, 1989-ல் தமிழ்நாடு அரசு தனியே ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதன்படி, இந்த சட்டம் வந்த நாளான 1989-வரை திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை மட்டும் கூட்டுகுடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பூர்வீக சொத்தில் மகனைப்போலவே மகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்ற மகளுக்கு, தந்தையின் பூர்வீக சொத்தில் பங்கு கிடையாது என்றும் சட்டத் திருத்தம் வந்தது.


பின்னர், மத்திய அரசு, 2005 ல் இந்தியா முழுமைக்கும் உள்ள அந்த 1956ம்வருட இந்து வாரிசு உரிமைசட்டத்தை திருத்தி, அதன்படி மகள்கள் திருமணம் ஆகி இருந்தாலும், ஆகாமல் இருந்தாலும் எல்லோருமே கூட்டுக்குடும்ப உறுப்பினர்கள்தான் என்றும் எனவே மகனைப் போலவே, மகளுக்கும் பூர்வீக சொத்தில் சரிசம பங்கு உண்டு என்றும் புதிய சட்டத்தை இயற்றியது.


இந்த 2005 புதிய மத்திய திருத்தச் சட்டத்தின்படி கீழ்கண்ட புதிய விளக்கம் உள்ளது.இந்த திருத்தல் சட்டம் 9.9.2005 முதல் அமலுக்கு வந்தது.அதற்குபின் எல்லா மகள்களும், மகன்களைப் போலவே  பூர்வீக சொத்தில் சரிசமமான சொத்துரிமை பெறலாம்.மகள்கள் பிறந்தவுடனேயே, மகன்களைப்போலவே, பூர்வீக சொத்தில் பங்கு ஏற்கனவே வந்துவிட்டது என்றும், எனவே அவர்கள் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருந்தாலும், இந்த உரிமை உண்டு.

ஆனால், 20.12.2004 க்கு முன், அவர்களின் பூர்வீகச் சொத்தை பழைய சட்டப்படி பாகப்பிரிவினை செய்து பிரித்துக் கொண்டிருந்தால், அல்லது வெளிநபர்களுக்கு விற்று விட்டிருந்தால் அவ்வாறு பத்திரம் எழுதிப் பதிவு செய்து கொண்ட சொத்தில் மகள்கள் பங்கு கேட்கமுடியாது.20.12.2004 வரை பூர்வீக சொத்தானது அந்த குடும்பத்தில் இருந்தால், அந்த சொத்தில் மகள் சரிசம பங்கு கோரலாம்.பொதுவாக ஒரு சட்டமானது, அது அமலுக்கு வந்த தேதியிலிருந்துதான் உரிமைகள் வரும், (Prospective). ஆனால் இந்த சட்டம் (Retrospective) அதாவது, மகள் பிறந்த தேதியிலிருந்தே அவருக்கு உரிமை கொடுத்துவிட்டது.

அதுதான் இந்த சட்டத் திருத்ததின் சிறப்பம்சம் என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.

Bombay High Court, Nagpur Bench, in a Second Appeal.Leelabai vs Bhikabai Shriram Pakhare, 2014(4) MHLJ 312 Bom.

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்
Compulsory Registrable Documents

கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள்

இந்திய பதிவுச் சட்டம் 1908 (The Indian Registration Act 1908) என்பது பிரிட்டீஸ் அரசு கொண்டு வந்து, இந்திய அரசு ஏற்றுக் கொண்ட ஒரு சட்டம்; இதில் இந்தியஎன்ற வார்த்தையை 1969ல் இருந்து நீக்கி விட்டார்கள்; (இந்தியாவில் இருக்கும் சட்டங்கள் எல்லாமே இந்தியச் சட்டங்கள்தானே!); இந்த பதிவுச் சட்டத்தில்தான், பத்திரங்களை பதிவு செய்யவதைப் பற்றிய சட்ட விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன;
இந்த பதிவுச் சட்டத்தின் பிரிவு 17(1)ன்படி சில பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது; அவ்வாறு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்என்று சொல்லி உள்ள பத்திரங்களை, பதிவு செய்யாமல் விட்டுவிட்டால், அவைகள் சட்டப்படி செல்லாது; அந்த பத்திரங்களைக் கொண்டு உரிமை கோர முடியாது; கோர்ட்டில் அந்த பத்திரங்களை ஒரு சாட்சியமாக (Documentary evidence) எடுத்துக் கொள்ள முடியாது;
பொதுவாக அசையாச் சொத்துக்களை (Immovable properties) பதிவு செய்து கொள்ள வேண்டும்; ஆனால் அதிலும் குறிப்பாக சில பத்திரங்களை கட்டாயப் பதிவில் சேர்த்துள்ளார்கள்;
கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய பத்திரங்களின் விபரம்;
(1)     அசையாச் சொத்தின் தானப் பத்திரம்” (Gift deed) எழுதிக் கொடுத்தால், அதை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(2)     அசையாச் சொத்தில் உள்ள சொத்துரிமையை மாற்றிக் கொடுத்தாலும், விற்பனை செய்தாலும், விட்டுக் கொடுத்தாலும், விடுதலை செய்தாலும், அந்தப் பத்திரங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் உரிமை அன்றே இருந்தாலும், பின்ஒருநாளில், அதாவது இனிமேல் தருகிறேன் என்று சொல்லி இருந்தாலும் அதையும் கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(3)     அசையாச் சொத்தில் உள்ள உரிமையை விட்டுக்கொடுப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டால், அந்தப் பத்திரங்களை கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(4)     வருடக் குத்தகைப் பத்திரங்கள் (Yearly Leases) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்; வருடக் குத்தகை என்பது ஒரு வருடம் அல்லது அதற்குமேல் உள்ள காலத்துக்கு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வது; (நகரங்களில் உள்ள வீட்டு வாடகைகள், பொதுவாக மாத வாடகையாக 11 மாதங்களுக்கே செய்து கொள்ளப்படும்; எனவே வீட்டு வாடகை பத்திரங்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது;)
(5)     அசையாச் சொத்துக்களைப் பொறுத்துப் பெறப்பட்ட கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள், அவார்டுகள் இவைகளை அல்லது அந்த டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைன்மெண்ட் பத்திரங்களை (Assignment of Decree, Order or Award) கட்டாயமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்;
(6)     அடுக்குமாடிக் கட்டிடங்களை தனி ப்ளாட்டுகளாக கட்டிக் கொடுக்கச் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை (Agreement relating to construction of multiunit house building on land) கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்:

மேற்சொன்னவை அல்லாமல் மற்ற பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை;
 அதைப்பற்றிய விபரம் கீழே;
(1)     சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் பத்திரங்கள்;
(2)     கம்பெனிகளின் ஷேர்களின் பத்திரங்கள் (Shares relating to Joint Stock Company);
(3)     கம்பெனிகள் கொடுக்கும் டிபன்சர் பத்திரங்கள் (Debenture issued by company);
(4)     கம்பெனி டிபசன்பர் பத்திரங்களை மாற்றிக் கொடுக்கும் பத்திரங்கள்;
(5)     அசையாச் சொத்தின் எந்த உரிமையையும் மாற்றிக் கொடுக்காத பத்திரங்கள்:
(6)     கோர்ட் டிகிரிகள், கோர்ட் உத்தரவுகள்; any Decree or Order of a Court; இவைகளை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (ஆனால், அந்த வழக்கில் சம்மந்தப்படாத அசையாச் சொத்தைப் பொறுத்த அந்த கோர்ட் ஒரு டிகிரி கொடுத்திருந்தால், அதை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்; அதாவது, வழக்கில் அந்த அசையாச் சொத்து சம்மந்தப்பட்டிருந்தால், அந்த டிகிரியை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; வழக்குக்கு சம்மந்தமில்லாத வேறு ஒரு அசையாச் சொத்தைப் பொறுத்து, பார்ட்டிகளுக்குள் சமாதான டிகிரியை கோர்ட் மூலம் பெற்றிருந்தால், அந்த கோர்ட் டிகிரியை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்);
(7)     அரசாங்கம் எழுதிக் கொடுக்கும் அசையாச் சொத்துக்களின் கிராண்ட் பத்திரங்களை (Government Grant) பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; (அரசாங்கம் விற்கும் அல்லது இலவசமாக கொடுக்கும் அசையாச் சொத்தின் பத்திரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;
(8)      நில மேம்பாட்டுச் சட்டம் 1871ன்படி கொடுக்கும் கொலேட்டிரல் செக்யூரிட்டி கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;
(9)     விவசாய கடன் சட்டம் 1884ன்படி கொடுக்கும் கடன் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை;
(10)  அறக்கட்டளை சட்டம் 1890ன்படி அதில் உள்ள ஒரு டிரஸ்டி, அந்த டிரஸ்ட்டின் சொத்தை வேறு ஒரு டிரஸ்டிக்கு பொறுப்பு ஒப்படைக்கும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை;
(11)  ஒரு அடமானப் பத்திரத்தில் பெற்ற அடமானக் கடனை, திருப்பி கொடுக்கும் ரசீது பத்திரத்தை, பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும் அதை பதிவு செய்து கொண்டால், சொத்தின் வில்லங்க சான்றிதழிலேயே தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்);
(12)  கோர்ட் ஏலம் மூலம் விற்பனை செய்து, ஏலம் எடுத்தவருக்கு வழக்கும் கிரய சர்டிபிகேட் (Sale Certificate) என்னும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை; (ஆனாலும், வழக்கில் உள்ள பார்ட்டிகள் அந்த சொத்தை ஏலத்தில் விடுவதற்கு மனுச் செய்து அதன் மூலம் கோர்ட் ஏலம் கொண்டுவந்து விற்பனை செய்தால், அந்த விற்பனை பத்திரத்தை கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும்: ஏனென்றால், அது கோர்ட்டே விற்பனை செய்த பத்திரம் அல்ல);


Friday, December 15, 2017

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை  உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டு உள்ளது (G.O Ms.No 360, Health and Family Welfare Department,  Dt: 12.10.2017).

பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் இலவசமாக பதிவு செய்ய வேண்டும்.

1, பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் பதிவு செய்தால் ரூ.2 தாமதக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கட்டணம் ரூ.100 ஆக  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2, அதேபோல 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய வசூலிக்கப்பட்டு வந்த தாமதக்கட்டணம் ரூ.5,  தற்போது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

3, ஓராண்டுக்கு மேல் ஆகும் தாமத பதிவுகளுக்கு  ரூ.10 வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் ரூ.500 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

4, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க ஓராண்டுக்கு மேல் விண்ணப்பித்தால் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் தற்போது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

5, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்தால்,  ஒவ்வொரு நகலுக்கும் தேடுதல் கட்டணமாக முதல் ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

6, ஒவ்வொரு கூடுதல் ஆண்டுக்கும் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.2 என்பது ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

7, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்  வழங்க, கட்டணம் ரூ.5 என்பது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

8, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் கூடுதல் நகல் பெற  கட்டணம் ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

9, பிறப்பு மற்றும் இறப்பு பதியப்படவில்லை (Form 10 - NAC) என்ற சான்றிதழ் பெற இதுவரை ரூ.2 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம் ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Thursday, December 14, 2017

கேவியட் மனு தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைகள்

மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றம் வரையில் (Caveat Petition) கேவியட் மனு படிவம் ஒரே மாதியானதாகவே இருக்கும்.

நபர் ஒருவருக்கு எதிராக, மற்றொரு நபர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலோ ( District Munisif Court), மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் மன்றத்திலோ ( District Munisif Cum Magistrate Court), சார்பு நீதிமன்றத்திலோ (Sub Court) , மாவட்ட நீதிமன்றத்திலோ (District Court), உயர்நீதிமன்றத்திலோ(High Court), தடையாணை (Stay Order) அல்லது உறுத்துக்கட்டளை (Injection Order) யை அவசரத்தன்மையுடன் (Emergent Petition) அறிவிப்புக் கொடுக்காமல் பெற்றிடுவத்ற்கு வாய்ப்புண்டு என்று கருதிடும் சூழ்நிலையில் நபர் ஒருவர் கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம்.

மேல்முறையீட்டுக் காலங்களிலும் கேவியட் மனுவை தாக்கல் செய்யலாம். அதற்கான படிவமும் இதே மாதிரியானதாகும்.

கேவியட் மனுவை அவசரத்தன்மையுடனோ அல்லது சாதாரண நிலையிலோ தாக்கல் செய்யலாம்.

அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவை, அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டுடன் இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும். சாதாரணமாக தாக்கல் செய்யப்படும் கேவியட் மனுவுக்கு அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டை இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

கேவியட் மனுவை அவசரத்தன்மை மனுவுடன் கொடுத்தால் மனு சரியாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அன்றைய தினமே எண் கொடுத்து விடுவார்கள்.

கேவியட் மனுவை சாதாரணமாக தாக்கல் செய்தால், அடுத்தடுத்த நாட்களில்தான் எண் கொடுப்பார்கள்.

கேவியட் மனுசாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும்போது, அந்த மனுவில் எண் கொடுப்பதற்கு முன்னர், நபர்கள் எவரும் தமது வழக்கை அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்து தடையாணை அல்லது உறுத்துக் கட்டளையைப் பெற்றிட முடியும்.

கேவியட் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர், அசல் மனுவில் மனுதாரரிடம் கையொப்பத்தைப் பெறுதல் வேண்டும். நகலின் மனுதாரரின் மையொப்பத்தைப் பெறுதல் கூடாது. நகலில் உண்மை நகல் அல்லது T.C (True Copy) என்று குறிப்பிட்டு மனுதாரரின் வழக்கறிஞர் மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானதாகும். ஆனல், அசல் கேவியட் மனுவில் மனுதாரரும், வழக்கறிஞரும் கையொப்பம் இடுதல் வேண்டும். நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை ஒட்டப்படுதல் வேண்டும்.

கேவியட் மனுவின் நகல் ஒன்றை எதிர் மனுதாரருக்கு மனுதாரரின் வழக்கறிஞர் பதிவு அஞ்சலில் ஒப்புகை அட்டை இணைப்புடன் அனுப்பி வைத்தல் வேண்டும். பதிவு அஞ்சல் உறை மற்றும் ஒப்புகை அட்டையின் பெறுநர் முகவரியில் எதிர்மனுதாரரின் முகவரியையும், அனுப்புனர் முகவரியில் மனுதாரரின் வழக்கறிஞரின் முகவரியையும் குறிப்பிடுதல் வேண்டும்.

கேவியட் மனுவின் நகலை எதிர்மனுதாரருக்கு அனுப்பி வைத்த பின்பே கேவியட் அசல் மனுவை நீதிமன்றத்தில் தக்கல் செய்ய வேண்டும்.

கேவியட் மனு, அவசரத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும்போது, அதில்

1) கேவியட் அசல் மனு (Caveat Original Petition),

2) எதிர்மனுதாரருக்குப் பதிவுத்தபாலில் கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச் சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு (Postal Receipt),

3) வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat),

4) அவசரத்தன்மை மனு (Emergent Petition) ,

5) அபிடவிட் (Affidavit)
ஆகியவற்றைத் திறந்த நீதிமன்றத்தில் (Open Court) நீதிபதியிடம் கொடுத்தல் வேண்டும்.

கேவியட் மனுவை சாதாரண முறையில் தாக்கல் செய்திடும்போது, அதில்

1) கேவியட் அசல் மனு (Caveat Original Petition),

2) வழக்குரைக்கும் அதிகார ஆவணம் (Vakalat),

3) எதிர் மனுதாரருக்கு கேவியட் மனுவின் நகலை அனுப்பியதற்குச் சான்றாதாரமாக உள்ள அஞ்சல் பற்றுச் சீட்டு (Postal Receipt)
ஆகியவற்றை தலைமை எழுத்தர் (Head Clerk) அல்லது செரஸ்தாரிடம் (Sheristadar ) கொடுத்தால் போதுமானதாகும்.

மனுக்கள், அபிடவிட், வழக்குரைக்கும் ஆவணம் ஆகியவற்றின் மேலுரையில் வழக்கறிஞர் பெயர், ஊர், நீதிமன்றம், மனு விபரம் ஆகியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும்.

அஞ்சல் பற்றுச் சீட்டை தனியே ஒரு வெள்ளைத்தாளில் இணைத்து, அந்த வெள்ளைத்தாளில் மேல்குறிப்பை (Docket) எழுதுதல் வேண்டும்.

கேவியட் அசல் மனுவில் வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில் வழக்கறிஞர் நல நிதி முத்திரை வில்லையுடன், அவசரத்தன்மை மனுவில் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை ஒட்டுதல் வேண்டும். அபிடவிட்டில் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையை ஒட்ட வேண்டிய அவசியமில்லை.

கேவியட் மனுவில் வாத-பிரதிவாதங்கள் கேட்கப்பட மாட்டாது. அதனால், அதில் எதிர்மனுதாரர் கட்சியாடுகின்ற வகையில் எதிர்வுரையோ, பதிலறிவிப்போ செய்ய வேண்டியதில்லை.

ஒருமுறை தாக்கல் செய்யப்படுகின்ற கேவியட் மனு மூன்று மாதங்கள் வரையில் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு புதிதாகத்தால் கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

கேவியட் மனு இரண்டாவது முறையாக அல்லது அடுத்தடுத்து எத்தனை முறை தாக்கல் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் பின்பற்றப்படும் அதே நடைமுறையையே பின்பற்றுதல் வேண்டும்.

செத்து தொலை என்று கணவன் கூறியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால், கணவன் மனைவியை தற்கொலை செய்ய தூண்டினார் என்று குறிப்பிட்டு கணவனுக்கு தண்டனை அளிக்க முடியுமா?

கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு சண்டைகள் வருவது சாதாரண விஷயமாகும். ஒரு சாதாரண சண்டையில் "செத்து தொலை" என்கிற வார்த்தையை கோபத்தில் கணவன் கூறியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால் அந்த கணவருக்கு மனைவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உள் நோக்கம் இருந்தது என்று கருத முடியாது.

உச்சநீதிமன்றம் "சுவாமி பிரகலதாஸ் Vs மத்திய பிரதேசம் (1995-SCC-CRL-943)" என்ற வழக்கில், கணவன் கோபத்தில் செத்து தொலை என்று கூறும் வார்த்தையை மனைவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கூறிய வார்த்தையாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் " ருக்மணி Vs தமிழ்நாடு அரசு (2008-2-LW-CRL-1776)" என்ற வழக்கில், ஒரு சாதாரண சண்டையில் கூறிய "செத்து தொலை" என்கிற வார்த்தையைக் கொண்டு ஒருவர் தற்கொலைக்கு உடந்தையாக இருந்தார் என அனுமானிக்க முடியாது என தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் "சந்துல் ராமகிருஷ்ணர் Vs சோந்தி சாந்தி மற்றும் பலர் (AIR-2009-SC-923)" என்ற வழக்கில், "செத்து தொலை" என்கிற வார்த்தையைக் ஒருவர் கூறியதால் மட்டுமே தற்கொலை செய்து கொள்ள உடந்தையாக இருந்தார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. எதிரிக்கு ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் உள்நோக்கம் இருந்தது என்பதை வழக்கின் சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே சாதாரணமாக ஒரு குடும்பச் சண்டையில் கோபத்தில் செத்து தொலை என்று கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால் அதற்கு கணவர் தான் காரணம் என்று கூறி, அவர் தற்கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்று கருதி தண்டனை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. A. NO - 1055/2004

சேகர் Vs மாநில அரசுக்காக, ஆய்வாளர், திருச்செங்கோடு காவல் நிலையம்

2012-2-LW-CRL-87

Wednesday, December 13, 2017

அரசு அலுவலகங்களில் புகார்/மனுவை கையளித்ததிற்கான ஒப்புதல் சான்று


அரசு அலுவலகங்களில் புகார்/மனுவை கையளித்ததிற்கான ஒப்புதல் சான்று

ஒவ்வொரு மனு / புகாரினை அரசு அலுவலகத்தில் வழங்கும்போது, அதற்குரிய ஒப்புதல் சான்று வழங்கும் நடைமுறையினை பெரும்பாலான அரசு அலுவலகங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை.

அவ்வாறு நாம் வழங்கிய ஆதாரங்களுடன் கூடிய புகார் மற்றும்  மனுக்களுக்கு அரசாணை எண் 99 & 114 ன் படி ஒப்புதல் ரசீது பெறவில்லையெனில் அல்லது அவர் வழங்க மறுத்தாரெனில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலக அதிகாரி அந்த புகாரின் / மனுக்களின் மீதோ நடவடிக்கை எடுத்து தீர்வு காணாதிருக்கும் பட்சத்தில் அந்த அதிகாரி மீது சட்ட நடவடிக்கை அல்லது மேலதிகாரியிடம் அந்த கீழ்நிலை அதிகாரி குறித்து ஆதாரத்துடன் புகார் அளிக்க வழிவகை இல்லாமல் போயிவிடும்.

மேலும் இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார் / மனு குறித்த நிலை பற்றிய கேள்வி கேட்க எழாத சூழல் உருவாகக்கூடும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க...

1) ஒவ்வொரு புகாரின் / மனுக்களில் இறுதி பக்கத்தில் கீழ்கண்ட வார்த்தைகளை இணைத்து அந்த புகார்/மனுக்களை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

...........................................
...........................................
 மதிப்பிற்குரிய அய்யா / அம்மா இம்மனுவினை பெற்று ஏற்றுக்கொண்டு இம்மனுவிற்கு
1. அரசு ஆணை எண் : 114 நாள் -02-08-2006
2. அரசு ஆணை எண் : 66 நாள் - 23-02-1983
3. அரசு ஆணை எண் : 80 நாள்- 13-05-1999
4. மத்திய அரசு ஆணை எண் : 13013/1/2006 (05.05.2006)
5. அரசு ஆணை எண் : 99 நாள்: 21-09-2015    மற்றும்
மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எண் : W .P. NO.20527 OF 2014, dated 01-08-2014 ன் படி, ஒப்புதல் சான்று வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
...........................................
...........................................

2) புகார் / மனுக்களை வழங்கிய பின்னர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலக அதிகாரியிடம் துறை சார்ந்த ஒப்புதல் சான்று கேளுங்கள். அவர் வழங்க மறுத்தாரெனில், புகாரின் / மனுவின் நகலினை அவரிடம் காட்டி, இறுதி பக்கத்தில் "இப்புகாரினை / மனுவினை பெற்றுக்கொண்டேன்" என கைப்பட எழுதி அதில் அவரின் கையொப்பம் / தேதி  மற்றும் அலுவலக முத்திரை இட்டு தருமாறு வலியுறுத்தி அதனை கைவசம் வைத்து கொள்ளுங்கள். மற்றும் அந்த கையொப்பம் / முத்திரையிடப்பட்ட புகார் / மனுவினை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

அல்லது,

கீழ்கண்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையினரின் ஆணை (G.O 89) பக்கத்தினை நகல் எடுத்து வைத்துக்கொண்டு, அதில் ஒப்புதல் சான்றினை கேட்டு பெறுங்கள்.

மேற்கண்ட ஒப்புதல் பெறப்பட்ட மனுவின் / புகாரின் மீது 30-45 நாட்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி தகுந்த நடவடிக்கை எடுக்காதிருக்கும் பட்சத்தில், நீங்கள் மேலதிகாரிகளிடம் முறையிட அல்லது சட்ட நடவடிக்கை எடுக்க மேற்கண்ட ஆதாரம் பக்கபலமாக பலனளிக்கும் விதத்தில் இருக்கும்.

*மேலதிக விபரங்களுக்கு இணைக்கப்பட்ட கோப்பினை பார்க்க*