Saturday, December 30, 2017

காசோலை மோசடி வழக்கு

உச்ச நீதிமன்றம் : N. பரமேஸ்வரன் Vs G.கண்ணன் 2017(2) Crimes 63 : 2017(4) Scale 90  N.I.Act 1881, பிரிவு 138 – இந்திய சாட்சிய சட்டம் 1872 – பிரிவு 114

காசோலை கொடுத்து, அது வசூலாகாமல், திரும்பி வந்து, புகார் மனுதார், காசோலை கொடுத்தவருக்கு சட்டப்படி வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்புகிறார். அது, "அவர் நோட்டீஸ் வாங்க மறுத்து விட்டார் / வீடு பூட்டி உள்ளது / வீட்டில் ஆள் இல்லை / கடை மூடி உள்ளது / ஆள் ஊரில் இல்லை" என்று திரும்பி வந்தால், சட்டப்படி அவருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்ப பட்டதாகவே, நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

N.I.Act 1881, பிரிவு 138 – முதல் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பி விட்டு, இரண்டாவதாக, காசோலை தொகையை கேட்டு ஞாபகப்படுத்தும் நோட்டீஸ் அனுப்பினால், முதலில் அனுப்பிய நோட்டீஸ், சார்பு செய்யப்படவில்லை என்று சொல்ல முடியாது.

N.I.Act 1881, பிரிவு 138 – காசோலை வசூலாகாமல் திரும்பி வந்து 15 நாட்களுக்குள் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பிய பிறகு, காசோலை மீண்டும் வசூலுக்கு போடப்பட்டு, வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பபடவில்லை. ஏற்கனவே முதலில் அனுப்பிய அறிவிப்பே போதுமானது.

புரோநோட்டினை நிரப்பிய தேதியிலிருந்து மூன்றாண்டுகள் வரை செல்லும்.ஆனால் மேற்படி கடன் பெற சிவில் வழக்கு தாக்கல் செய்தால் ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகம். காசோலையினை தற்போதைய தேதியில் நிரப்பி  காசோலை வழக்கு தாக்கல் செய்வதே சிறந்தது

 காசோலை  கொடுத்தவர் தேதியிட்டு  வழங்குகிறார்.

காசோலை வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் அதை  காசோலை பெற்றவர்  வங்கி  கணக்கில்   போட்டு பணத்தை வசூலிக்க வேண்டும்.

( முன்பு, காசோலை பெறபட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு செல்லும் )

 காசோலை பெற்றவர்  அதனை வங்கியில் போடுகிறார்.வங்கியில் காசோலை  கொடுத்தவர்  அக்கவுண்டில் பணம் இல்லை என்று அந்த காசோலை திருப்பித் தரப்பட்டு, வங்கியில் இருந்து அதற்கான மெமோ  காசோலை  பெற்றவரிடம்   வழங்கப்படுகிறது.

‪#சட்ட‬ ‪அறிவிப்பு‬ ‪ ‎வழங்க‬ ‪வேண்டும்‬ :
************************
காசோலை வழங்கியவர்  கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து, வங்கி அதற்கான மெமோ வழங்கும் வழங்கும் பட்சத்தில், அந்த மெமொ பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் காசோலை வழங்கியவருக்கு  ஒரு சட்டப்படியான அறிவிப்பை காசோலையை பெற்றவர்  வழங்க வேண்டும்.

இந்த அறிவிப்பு வழங்குவது மிக கட்டாயமானதாகும்.

 ‪‎என்ன‬ ‪செய்ய‬ வேண்டும் : 1
********************
 காசோலையை கொடுத்தவருக்கு  முறைப்படி சட்ட அறிவிப்பை காசோலையை பெற்றவர்   அனுப்புகிறார்.
.
அறிவிப்பு வழங்கிய பின்னர் காசோலை    கொடுத்தவர்  அறிவிப்பை  பெற்றுக்கொண்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள்  பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்.

15 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால்  காசோலை  கொடுத்தவர் பணம்   தரவில்லை.
காசோலை வழங்கியவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பான 15 நாட்கள் முடிந்ததும், அதன்பின்னர் 30 நாட்களுக்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குமார் மீது காசோலை மோசடி வழக்கை காசோலை பெற்றவர்  தாக்கல் செய்யலாம்.

இந்த கால அளவில் ஏதாவது தவறு ஏற்பட்டால், காசோலை மோசடி வழக்கு தொடரமுடியாது.

என்ன ‪செய்யக்‬கூடாது‬ :
*******************
காசோலையை 16.05.2015 அன்று வங்கியில் பணம் வசூலிக்க  காசோலை பெற்றவர் தாக்கல் செய்கின்றார். காசோலை  கொடுத்தவர்  கணக்கில் பணம் இல்லை என்று வங்கியாளர் காசோலையை  பெற்றவரிடம்  தெரியப்படுத்துகின்றார்.

காசோலை கொடுத்தவரை, காசோலை  பெற்றவர்   தொடர்பு கொண்டால், சற்று பொறுத்து கொள்ளுங்கள் இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுத்து விடுவேன் என்கின்றார்.
அவர் பேச்சை கேட்டு காசோலை  பெற்றவர்     சட்டப்படியான நோட்டிஸ் 30 நாட்களுக்குள் அனுப்பாமல் இருக்கிறார்.
ஒரு மாதம் கழிகின்றது.
பணம் தரவில்லை.
பணத்தை சங்கரன் கேட்டால், காசோலை கொடுத்தவர் பணம் கொடுக்க மறுக்கின்றார்.
30 நாட்களுக்குள் சட்டப்படியான அறிவிப்பு அனுப்பவில்லை என்பதால்.
இப்போது திரும்பி வந்த காசோலையை வைத்து வழக்கிடமுடியாது.

என்ன செய்ய வேண்டும் : 2
******************
காசோலையை தாக்கல் செய்வதற்கான கால அளவு  குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம்   வரை இருப்பதால், திரும்பவும் ஒரு முறை அந்த காசோலையை பெற்றவர்   வங்கியில் தாக்கல் செய்யவேண்டும்.
அது திரும்பி வந்த பிறகு, உடனடியாக  காசோலையை கொடுத்தவருக்கு  சட்ட அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
அனுப்புகின்ற அந்த சட்ட அறிவிப்பில் முதலாவதாக பணம் வசூலிக்க காசோலை வங்கியில் போட்ட விபரத்தையும், காசோலை திரும்பி வந்த விபரத்தையும், காசோலையை கொடுத்தவர்   பணத்தை ஒரு மாதத்துக்குள் தருவதாகக் கூறியதால் சட்டப்படியான அறிவிப்பு வழங்காமல் இருந்ததையும் தெளிவாக அதில் குறிப்பிடவேண்டும்.

பணத்தை வசூலிக்க குறிப்பிட்ட தேதியில் இருந்து மூன்று மாதம்   எத்தனை முறை வேண்டுமானாலும் வங்கியில் அந்தக் காசோலையை தாக்கல் செய்யலாம்.
காசோலை திரும்பி வந்ததும் சட்ட அறிவிப்பு வழங்கலாம்.
ஆனால், கடைசி 15 நாட்கள் இருக்கும் போது தாக்கல் செய்து, காசோலை திரும்பி வந்தால், காசோலையை வழங்கியவர் சொல்லும் கதைகளை (பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்) கேட்காமல் சட்ட அறிவிப்பு வழங்குவது நல்லது.
அல்லது காசோலை வழங்கியவர் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், புதிதாக ஒரு காசோலையை அவரிடம் பெற்ற பிறகே, அவர் நமக்கு பணத்தை கொடுக்க வாய்ப்பளிக்கலாம்.
காசோலை ‪‎அளித்தவர்‬ ‪இறந்துவிட்டால்‬?
************************
வாடிக்கையாளருக்கும் வங்கிக்கும் உள்ள உறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.
வாடிக்கையாளர் இறந்துவிட்டால், அதன் பின்னர் வங்கியானது வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை கழிக்க முடியாது.
வாடிக்கையாளர் இறந்துவிட்டார் என்று வங்கி காசோலையை திருப்பி அனுப்பினாலும் அதன் அடிப்படையில் காசோலை மோசடி வழக்கிடமுடியாது ஏனெனில் சட்டப்படியான அறிவிப்பை காசோலை வழங்கியவருக்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
மேலும் இறந்தவர் மீது குற்றவியல் வழக்கு தொடரமுடியாது.
ஆனால், காசோலை கொடுத்தவரின் வாரிசுதாரர்கள் மீது சிவில் வழக்கு போடலாம். இறந்தவர் ஏதாவது சொத்தை விட்டு சென்றால் அந்த சொத்தின் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிமை கோரலாம்.
இறந்தவருக்கு எந்தவித சொத்தும் இல்லையென்றால் இறந்தவர் கடனை அடைக்க அவரின் வாரிசுதாரர்கள் கடமைபட்டவர்கள் அல்ல.
வாரிசுதாரர்களின் கடமையானது இறந்தவரின் சொத்தில் அடையும் உரிமை அளவே ஆகும்.
காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்வது எப்படி?
--------------------------------------------
1. காசோலையை, கொடுத்த தேதியில் இருந்து (தேதி நிரப்பி இருந்தால்) மூன்று மாதத்திற்குள், வங்கியில் போட வேண்டும்.

2.காசோலை வசூலாகாமல் போனால், அந்த தேதியில் இருந்து முப்பது நாளில், காசோலை கொடுத்தவருக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்ப வேண்டும்.

3.நோட்டிஸ் அனுப்பிய தேதியில் இருந்து 15 நாளில் பணம் தராவிட்டால், அதிலிருந்து முப்பது நாளில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

4.பிரிவு 138 படி காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

5. புகார் மனுதாரரின் வங்கி இருக்கும் இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

6. 2 வருட சிறை தண்டனையோ அல்லது, காசோலை தொகை போல இரண்டு மடங்கு அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ, தண்டனை விதிக்கப்படலாம்.

Power of Attorney - பவர் ஆவணம் 2 வகைப்படும்.

1) பொது அதிகார ஆவணம் (General Power of Attorney)
==============================================
உங்கள் சொத்து இருக்கிறது. அந்த சொத்து சம்பந்தமாக எல்லாவற்றுக்குமான அதிகாரங்கள் கொடுத்தால் அது பொது அதிகார பத்திரம் ஆகும். அதாவது சொத்தை விற்க, வாங்க, பாதுகாக்க, கோர்ட்டுக்கு போக, வரி செலுத்த, பயன்படுத்த, வாடகைக்கு விட, பணம் வசூலிக்க என அந்த சொத்துக்கு முழுவதுமான அதிகாரம் வழங்கல் ஆகும். சுருக்கமாக "எல்லாவற்றையும் நீயே செய்து கொள், உன்னை நான் நம்புகிறேன் " என பத்திரத்தில் எழுதி பதிவு செய்து விட்டால் அது பொது அதிகார ஆவணம் ஆகும்.

2)சிறப்பு அதிகார பத்திரம் (Special Power of Attorney)
==============================================
இந்த பத்திரம் மூலம் ஒரு குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டும் அதிகாரம் வழங்கப்படும். அதாவது சொத்தை விற்க மட்டும் அல்லது மனைகளாக பிரிக்க மட்டும் அல்லது பாதுகாக்க மட்டும் என குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டும் பவர் தருவது சிறப்பு அதிகார பத்திரம் ஆகும்.

அடுத்ததாக உரிமையாளருக்கு தெரியாமல் சொத்தை விற்க முடியுமா?
---------------------------------------------------------------------
பவர் கொடுக்கப்பட்டவுடன் பவர் வாங்கியவர் சொத்தை பொறுத்து செயலுரிமையாளர் ஆகி விடுகிறார். அதனால் சொத்தை உரிமையாளருக்கு தெரியாமல் விற்க பவர் ஆப் அட்டார்னிக்கு உரிமை உண்டு. பவர் பெற்றவர் சொத்தை விற்று அது சம்மந்தப்பட்ட கணக்கை உரிமையாளர்களிடம் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும். இது குறித்த ஷரத்துகள் இந்திய ஒப்பந்த சட்டத்தில் உள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 213ன் படி உரிமையாளர் கேட்கும் போது பவர் ஆப் அட்டார்னி கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

மேலும் இந்த சட்டத்தின் பிரிவு 214 ன்படி சொத்து பற்றிய இக்கட்டான நிலையில் உரிமையாளரிடம் கருத்துக்களை பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது பவர் ஆப் அட்டார்னியின் கடமையாகும்.

பிரிவு 215ன் படி பவர் ஆப் அட்டார்னி முதல்வருக்கு தெரிவிக்காமல் தனக்காக தன் உறவினர்கள் பெயரில் சொத்தை வாங்குவது சட்ட விரோதமாகும். அவ்வாறான சூழ்நிலையில் உரிமையாளர் அந்த கிரையத்தை செல்லாது என அறிவிக்க கேட்டு நீதிமன்றத்தை நாடலாம்.

பிரிவு 216ன் படி உரிமையாளருக்கு தெரியாமல் பவர் ஆப் அட்டார்னி தன்னுடைய முதல்வருக்கு பதிலாக தானே உரிமையாளர் என்ற பெயரில் சொத்தில் தொழில் ஏதாவது செய்தால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தையும் உரிமையாளர் பெற தகுதியுடையவர் ஆவார்.

பிரிவு 217ன் படி பவர் ஆப் அட்டார்னி தனக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய செலவழித்த பணம், ஊதியம் ஆகியவற்றுக்காக சொத்திலிருந்து கிடைக்கும் பணத்தை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

பிரிவு 218 ன்படி பவர் ஆப் அட்டார்னி தனக்கு சேர வேண்டிய பணத்தை கழித்து கொண்டு பாக்கி தொகை அனைத்தையும் உரிமையாளரிடம் செலுத்த கடமை பட்டவராவார்.

பிரிவு 220 ன்படி அதிகார பத்திரத்திற்கு மாறாக முறைகேடாக நடத்தும் தொழிலுக்கு ஊதியம் பெற பவர் ஆப் அட்டார்னிக்கு உரிமை இல்லை.


புராமிசரி நோட் அல்லது புரோ நோட்

அவசரத்துக்கு கடன் வாங்குவதற்கு இந்த புரோ-நோட்டைத் தான் எழுதிக் கொடுக்க வேண்டும். Promise செய்து எழுதிக் கொடுத்த நோட்டை Promissory Note என்று சொல்வர்.

பழைய காலத்தில், "IOU" (or) 'I owe you'  அல்லது "நான்  உனக்கு கடன் பட்டிருக்கிறேன்" என்று சுருக்கமாக எழுதிக் கொடுப்பார்களாம். இன்றும் கிட்டத்தட்ட அதே நடைமுறைதான்  பின்பற்றப்படுகிறது.

அதாவது, "On Demand, I (name) promise to pay Mr. (name) Rs…  with interest" என்று எழுதப்பட்டிருக்கும். இது அச்சிடப்பட்ட காகிதமாக கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒருரூபாய்க்கு  ரெவின்யூ ஸ்டாம்பு ஒட்டி கையெழுத்துச் செய்து கொடுத்து கடன் வாங்கிக் கொள்வார்கள். அவசரத்துக்கு கடன் வாங்கிக் கொள்ள உதவுவதால், இதை ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கொள்ளத் தேவையில்லை என்பதால், வெள்ளை பேப்பரில் எழுதி அதில் ரெவின்யூ ஸ்டாம்ப் மட்டுமே ஒட்டிக் கொண்டால் போதும் என்ற சட்டம் உள்ளது. ஸ்டாம்ப் பேப்பரில் எழுதக் கூடாது. ஆனாலும், பலர் இதை ஸ்டாம்பு பேப்பரில் எழுதினால், நல்லது என்றும், மதிப்பு அதிகம் இருக்கும் என்றும் நினைத்து எழுதுகிறார்கள். இது தவறு.

இந்த புராமிசரி நோட்டில் மேற்சொன்ன உறுதிமொழியைத் தவிர வேறு வாசகங்கள் இடம்பெறக் கூடாது. அப்போதும் இந்த புராமிசரி நோட்டு சட்டப்படி செல்லாததாகிவிடும். வேறுசிலர், 'இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், சொத்தின்மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும், காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் 'என்றும் மிரட்டல்போல எழுதி வாங்கிக் கொள்வார்கள். அப்படி எழுதி இருந்தாலும் அது செல்லாது.

புரோநோட் கடனில், பணத்தை வாங்கியவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அவர்மீது சிவில் கோர்ட்டில் மட்டுமே வழக்குப் போடமுடியும். காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்க முடியாது. ஆனாலும் சிலர் போலீஸில் புகார் கொடுத்தால் சுலபமாக வசூல் செய்துவிடலாம் என்று கருதி புகார் கொடுக்கிறார்கள். அந்த புகாரை போலீஸ் விசாரிக்கவே அதிகாரம் கிடையாது.

இந்த புராமிசரி நோட்டில் உள்ள முதல் வாசகம் "On Demand" என்று இருக்கும். அதற்கு 'கேட்கும்போது' திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். எனவே அந்த புராமிசரி நோட்டில் 3 மாதத்தில் அல்லது 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் பணத்தை திருப்பித் தருகிறேன் என்றெல்லாம் எழுதக் கூடாது. ஆண்டிமாண்ட் என்ற வார்த்தையே போதுமானது.

ஒரு புராமிசரி நோட்டுக்கு அதிலுள்ள தேதியிலிருந்து மூன்று வருடத்திற்கு மட்டுமே மதிப்பு இருக்கும். அதற்குப்பின் அதுவே காலாவதி ஆகிவிடும். காலாவதியான புராமிசரி நோட்டை ஒன்றும் செய்ய முடியாது. அதைக் கொண்டு பணம் வசூல் செய்யவும் முடியாது. அதற்கு உயிர் உண்டாக்க வேண்டும் என்றால், பணம் வாங்கியவரே அதில் மறுபடியும் கையெழுத்துச் செய்து கொடுக்க வேண்டும்.

புராமிசரி நோட்டில் ஒருரூபாய்க்கான ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினாலே போதும். அதில் எவ்வளவு பணத்துக்கு வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். பணத்துக்கு ஏற்ப ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பணத்துக்கும் ஒரே ஒருரூபாய் ரெவின்யூ ஸ்டாம்புதான்.

புராமிசரி நோட்டுக்கு சாட்சி யாரும் தேவையில்லை. இருந்த போதிலும், அதில் சாட்சியும் வாங்கிக் கொள்கின்றனர். தவறில்லை. சாட்சிகள் அவசியம் இல்லை என அந்த சட்டம் கூறுகிறது.

திருப்பிக் கொடுக்கும் சக்தி இருப்பவருக்கு மட்டும் கடன் கொடுத்தால் திருப்பி வசூல் செய்து கொள்ளலாம். அந்த வசதி இல்லாதவருக்குக் கொடுத்தால், எந்த கோர்ட்டுக்குப் போனாலும் வசூல் செய்ய முடியாது. பணம் இருப்பவரிடம்தான் கோர்ட்டும் வசூலித்துக் கொடுக்கும். சொத்தோ, பணமோ இல்லாதவரிடம் எதை வசூலிப்பது? எனவே கடன் கொடுப்பவர்களும் இதை கருத்தில் கொள்ளவேண்டும்.

உயில் புரபேட் (Will Probate) செய்வது எப்படி ?

==========================================

ஒருவர், தன் வாழ்நாளுக்குப் பின்னர், அவரின் சொத்துக்களை, உயில் மூலம், அவர் விரும்பும் நபருக்கு கொடுக்கலாம்! அப்படி எந்த உயிலும் எழுதி வைக்காமல் அவரின் சொத்தை விட்டுவிட்டு இறந்து விட்டால், அவரின் சட்ட பூர்வ வாரிசுகளுக்குச் சென்று விடும்; உயில் எழுதி வைத்தால், அவர் விரும்பியவருக்கு கொடுத்து விடலாம்; உயில் எழுதாமல் இறந்தால், சட்டபூர்வ வாரிசுகளை அடையும்;

இந்து மதத்தைச் சார்ந்த ஒரு ஆண், அவரின் சொத்தை உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அவரின் வாரிசுகளான, அவரின் தாயார் (அப்போது உயிருடன் இருந்தால்), மனைவி, மகன்கள், மகள்கள் இவர்களுக்கு மட்டும் போய்ச் சேரும்; இவர்கள் அனைவருமே முதல்கட்ட வாரிசுகள் ஆவார்கள்; இறந்தவரின் தந்தைக்குப் போகாது; அவர் இரண்டாம் கட்ட வாரிசாக வருகிறார்; முதல் கட்ட வாரிசுகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே, இரண்டாம் கட்ட வாரிசாக, தந்தை, அவரின் இறந்த மகனின் சொத்து முழுவதையும் அடைவார்; முதல் கட்ட வாரிசுகள் யார் யார் அப்போது உயிருடன் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் தலைக்கு ஒரு பங்குவீதம் சொத்தை அடைவார்கள்;

இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர், தன் சொத்தை விட்டுவிட்டு, உயில் எழுதி வைக்காமல் இறந்து விட்டால், அந்தச் சொத்து, அவரின் கணவர், மகன்கள், மகள்கள் அடைவார்கள்; இந்துமதப் பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை என்றால், அந்தப் பெண்ணின் சொத்து வேறு மாதிரி வாரிசுகளை அடையும்; அதாவது, (1)அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லாமல் இறந்து விட்டால், இறந்த பெண்ணின் சொத்து சுய சம்பாத்திய சொத்தாக இருந்தால், அவளின் கணவருக்குப் போய்ச் சேரும்; கணவரும் இல்லையென்றால், கணவரின் வாரிசுகளுக்குப் போய் சேர்ந்துவிடும்; (2)இறந்த பெண்ணுக்கு, குழந்தையும் இல்லாமல், இருந்தால், அவளின் சொத்து, தன் பெற்றோரிடமிருந்து கிடைத்த சொத்தாக இருந்தால், அந்த சொத்து, திரும்பவும் அவளின் தந்தைக்கே போய்ச் சேர்ந்துவிடும்; (3) இறந்த பெண்ணின் சொத்து, கணவரின் தகப்பனாரான மாமனாரிடமிருந்து கிடைத்து இருந்தால், அது அவளின் மாமனாருக்கே போய்ச் சேர்ந்து விடும்; இப்படியாக, குழந்தை இல்லாமல் இறந்த இந்து பெண்ணின் சொத்து மூன்று வகைகளில் அந்தந்த வாரிசுகளை அடையும்;
உயில் எழுதி வைக்காத சொத்துக்கள், அந்தந்த மதச் சட்டப்படி இறந்தவரின் வாரிசைச் சென்று அடையும்; இந்துவுக்கு “இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956” உள்ளது; (இது 2005-ல் திருத்தம் செய்யப் பட்டது); அதுபோலவே, கிறிஸ்தவருக்கு வேறு ஒரு வாரிசு சட்டம் உள்ளது; அதன் பெயர் “இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925”; இதுபோலவே முகமதியர்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்) ஒரு வாரிசுரிமைச் சட்டம் உள்ளது; அதன் பெயர் “ஷரியத் சட்டம் 1937”;

கிறிஸ்தவர்களுக்கு உள்ள வாரிசுரிமைச்  சட்டமான, இந்திய வாரிசுரிமை சட்டம் 1925-த்தின் படி, கிறிஸ்தவ ஆணோ, பெண்ணோ, உயில் எழுதாமல், சொத்தை விட்டு விட்டு இறந்து விட்டால், அவரின் சொத்து அவரின் கணவர் அல்லது மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கும், அவரின் பிள்ளைகளுக்கு (மகன்கள், மகள்கள்) மீதியுள்ள மூன்றில் இரண்டு பங்கும் போய்ச் சேரும்; குழந்தைகள் இல்லையென்றால், அடுத்தடுத்த வாரிசுகளை போய் சேரும்;

முகமதியர்கள் வாரிசுரிமைச் சட்டமான ஷரியத் சட்டம் 1937-ன்படி, முகமதியர் ஒருவர், இறந்து விட்டால்,  அவரின் மகன்களுக்கு தலைக்கு இரண்டு பங்கும், அவரின் மகள்களுக்கு தலைக்கு ஒருபங்கும், இறந்தவரின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கிடைக்கும்; இதுபோக, மீதியுள்ள பங்குகள் மற்ற பங்காளிகளுக்குக் கிடைக்கும்; சற்று குழப்பமாக இருந்தாலும், அதற்கென்று அந்த சட்டத்தில் சில கணக்குகள் கொடுத்துள்ளனர்;
இந்து மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; கிறிஸ்தவ மதத்திலும் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது; ஆனால் முகமதிய சட்டத்தில் உயில் எழுத முடியாது; ஏனென்றால், முகமதியர்களின் புனித  நூலான குரானின் வாக்குப்படி, ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லாமல் செய்யும்படி உயில் எழுத முடியாது என்று சொல்லப் பட்டுள்ளது; ஆனாலும், சொத்தை வைத்திருப்பவர், அந்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம் என்று சலுகை கொடுக்கப் பட்டுள்ளது; அந்த உயிலை எழுத வேண்டுமானால், அவரின் வாரிசுகள் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும் என்று கன்டிஷனும் போடப் பட்டுள்ளது; எனவேதான், முகமதியர் உயில் எழுத முடியாது என்று பொதுவாகச் சொல்லி விடுவர்;

இந்து, கிறிஸ்தவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை; உயிலை எழுதி அவரின் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும், கொடுத்து விடலாம்; உயில் எப்போதும், அதை எழுதி வைத்தவரின் ஆயுட்காலத்துக்கு பின்னர்தான் அமலுக்கு வரும்; உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் நடைமுறைக்கு வரவே வராது; அவர் இறந்த பின்னர்தான் நடைமுறைக்கு வரும்;

ஒருவர் ஒரு உயிலைத்தான் எழுதி வைக்க முடியும்; அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், கடைசி உயில்தான் செல்லும்; மற்ற உயில்கள் செல்லாமல் போய்விடும்; ஆனாலும், சிலர், தன்னிடம் உள்ள பல சொத்துக்களை, வேறு வேறு உயில்கள் மூலம் எழுதி, தன் வேறு வேறு பிள்ளைகளுக்கு தனித்தனியே கொடுத்து விடும் வழக்கம் உள்ளது: இது தவறு என்று சொல்வதற்கு ஆட்கள் இல்லை;

உயில் என்றாலே, “அவரின் கடைசி ஆசை” என்றுதான் அதற்குப் பொருள்; உயில் என்பதற்கு ஆங்கிலத்தில் Will என்றே சொல்கின்றனர்; அப்படிப் பார்த்தாலும், அவரின் விருப்பம் என்றுதான் பொருள் வருகிறது; எனவே ஒரு மனிதனுக்கு  ஆசை என்பது கடைசி ஆசை மட்டுமே தன் கடைசி விருப்பமாக இருக்க முடியும்; எனவே ஒருவர் ஒரு உயில் மட்டும்தான் எழுதி நடைமுறைப் படுத்த முடியும்; ஏற்கனவே எழுதிய உயிலை மாற்றி எழுத வேண்டும் என்றால், அந்த உயிலை ரத்து செய்து விட்டு, வேறு ஒரு புதிய உயிலை எழுத வேண்டும்; அல்லது பழைய உயிலை திருத்தம் செய்து மட்டும் வைத்துக் கொள்ளலாம்; இப்படிப் பார்த்தால், ஒரு உயிருக்கு ஒரு உயில்தான் இருக்க முடியும் என்பதே உண்மை;

உயில் எழுதும்போது தனியே தனக்கு மட்டுமே உயில் எழுதிக் கொள்வதே சிறந்தது; கூட்டாக இரண்டு பேர் எழுதும் உயிலில் நிறைய சட்டசிக்கல்கள் வருகின்றன; கணவர் சொத்தை கணவரும், மனைவி சொத்தை மனைவியும் தனித்தனி உயில்கள் மூலம் எழுதிக் கொள்ளலாம்; அதைவிட்டு விட்டு, இருவரும் ஒரே உயிலில் எழுதுவார்கள்; அதில் எழுதும் வாசகங்கள் அந்த கூட்டு உயிலை நடைமுறைப் படுத்துவதில் சட்ட சிக்கலை உண்டாக்கிவிடும்;

இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக எழுதும் உயிலுக்கு ஜாயிண்ட் உயில் (Joint Will) என்று பெயர்; அதில், கணவர் முதலில் இறந்து விட்டால், கணவரின் சொத்து மனைவிக்குப் போய்ச் சேரும் என்றும், மனைவி முதலில் இறந்து விட்டால், மனைவியின் சொத்து கணவருக்கு போய்ச் சேரும் என்றும் எழுதுவார்கள்; இப்படிப்பட்ட உயிலை கூட்டு உயில் என்று சொன்னாலும், அது உண்மையில் மியூச்சுவல் உயில் (Mutual Will) என்னும் வகையைச் சேர்ந்ததாகும்;

கணவனும் மனைவியும் கூட்டாக வாங்கிய சொத்தை, கூட்டாக ஒரே உயில் எழுதி அந்த சொத்தை தன் வாரிசுகளில் யாருக்காவது கொடுப்பர்: இப்படிப்பட்ட உயிலில், கணவர் முதலில் இறந்தால், அந்த உயில் நடைமுறைக்கு வராது; மனைவி நினைத்தால் அந்த உயிலை ரத்து செய்து விடலாம் என்று சில சட்டத் தீர்ப்புகளும் உள்ளன என்பதால், அந்த குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு தெளிவாக உயிலை எழுதி வைக்க வேண்டும்;

உயில்களில் எக்சிகியூட்டார்கள் என்னும் நிறைவேற்றாளர்களை நியமித்து இருப்பர்: உயிலை எழுதியவர் இறந்த பின்னர், இந்த உயிலில் சொல்லப் பட்டுள்ள விஷயங்களை எப்படி பிரித்துக் கொடுப்பது என்று ஒரு பொதுவான நபரை அந்த உயிலிலேயே அதை எழுதி வைத்தவர் நியமித்து வைத்து விட்டு போய் இருப்பார்; அவரைத்தான் எக்சிகியூட்டர் (Executor) என்பர்; சொத்துக்காரர் இறந்த பின்னர், அவரின் உயில்படி, அந்த எக்சிகியூட்டர் வந்து, அவரின் சொத்துக்களை கணக்கெடுத்து, அந்த உயிலில் சொல்லி கடன்கள், உயில் எழுதியவரின் இறப்புச் செலவு, உயில் எழுதியவர் யாருக்காவது பணம் கொடுக்கச் சொல்லி இருந்தால் அதைக் கொடுப்பது, அவரின் சொத்துக்களை, அந்த உயிலில் சொல்லி உள்ளபடி பிரித்துக் கொடுப்பது போன்ற பல வேலைகளைச் செய்வார்; அவரே அந்த உயிலுக்கு அதிகாரி; இறந்தவரின் வாரிசுகள் அதில் தலையிட முடியாது;

ஒரு உயிலில் ஒரு எக்சிகியூட்டர் மட்டும் நியமித்திருப்பர்; பொதுவாக இது போதும்; ஆனால் செய்ய வேண்டிய வேலையைப் பொறுத்து இரண்டுக்கு மேற்பட்ட பல எக்சிகியூட்டர்களையும் நியமித்திருப்பார்; அது உயிலை எழுதி வைப்பவரின் விருப்பத்தையும், நம்பிக்கையையும் பொருத்தது: ஒரு எக்சிகியூட்டர் அந்த வேலையை செய்ய விரும்பம் இல்லாமல் இருந்தாலும், மறுத்து விட்டாலும், இறந்து விட்டாலும், மற்ற எக்சிகியூட்டர்கள் இருந்து அந்த வேலையைச் செய்வர்; கூட்டாகவும் செய்வர், தனித்தனியாகவும் செய்வர்; அதை அந்த உயிலில் தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும் அவ்வளவே!

எல்லா உயிலிலிலும் எக்சிகியூட்டர் நியமித்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அது உயில் எழுதி வைப்பவரின் விருப்பத்தைப் பொறுத்தது; அப்படி எந்த எக்சிகியூட்டார்களும் நியமிக்கவில்லை என்றால், வாரிசுகளில் யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்து கொள்ளலாம், தவறில்லை; எனவே உயிலில் இரண்டு வகை; ஒன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயில்; மற்றொன்று எக்சிகியூட்டார் நியமிக்கப்படாத உயில் அவ்வளவே; கோர்ட்டில் ஒரு உயிலை புரபேட் செய்ய மனுச் செய்யும் போது, எக்சிகியூட்டார் நியமிக்கப்பட்ட உயிலில், அவரே மனுச் செய்ய வேண்டும்; எக்சிகியூட்டர் நியமிக்கப்படாத உயிலில், இறந்தவரின் வாரிசுகளில் யாராவது மனுச் செய்ய வேண்டும்;

உயிலை எழுதி வைத்தால் மட்டும் போதாது; அதை சட்டபூர்வமாக ஏற்படுத்தி வைக்க வேண்டும்; உயிலை கையாலும் எழுதி வைக்கலாம்; தட்டச்சு, கம்யூட்டர் பிரிண்ட் மூலமும் ஏற்படுத்தலாம்; எப்படி இருந்தாலும், அது ஒரு பேப்பரில் இருந்தால் போதும்; அதற்கு முத்திரை தீர்வை என்னும் ஸ்டாம்ப் பேப்பர் தேவையே இல்லை! வெறும் வெள்ளைப் பேப்பரில் எழுதி வைக்கலாம்; அதில் ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய அவசியமும் இல்லை; அதை ரிஜிஸ்டர் என்னும் பதிவும் செய்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆனாலும், அந்த உயிலைப் பதிவு செய்து வைத்தால் (ரிஜிஸ்டர் ஆபீஸூக்குச் சென்று அந்த உயில் பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்து வைத்தால்) நல்லது; பின்நாளில் அது மிகுந்த நம்பிக்கைக்கு உரிய பத்திரமாக இருக்கும்; யாரும் ஒரு போலி உயில் என்று குற்றம் சொல்லி விட முடியாது; அதற்காக அந்த உயிலை பதிவு செய்து வைப்பது நல்லது;

ஆனாலும், உயில் எழுதியவர், அந்த உயிலில் உள்ள எல்லாப் பேப்பரின் பக்கங்களிலிலும் அவரின் கையெழுத்தைச் செய்து வைக்க வேண்டும்; கடைசி பக்கத்தில் அவரின் கையெழுத்துக்குக் கீழே கண்டிப்பாக இரண்டு சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்று இருக்க வேண்டும்; ஒரு உயில் செல்லும் என்று சொல்வதற்கு மிக முக்கியமானதே இந்த இரண்டு சாட்சிகளின் கையெழுத்துத்தான்! உயிலுக்கு சாட்சிகளின் கையெழுத்து அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது; சிலர் வெகு அஜாக்கிரதையாக சாட்சிகள் கையெழுத்தை வாங்காமல் வைத்திருப்பர்; அப்படி இருந்தால், அந்த உயிலே செல்லாமல் போய்விடும்;

இந்த இரண்டு சாட்சிகளும், அந்த உயிலை எழுதியவர் போடும் அவரின் கையெழுத்தை நேரில் பார்த்தவர்களாக இருக்க வேண்டும்; ஒரே நேரத்தில் உயிலை எழுதியவரும், சாட்களும் அந்த உயிலில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும்; இதை சட்டம் கட்டாயப் படுத்திகிறது; இரண்டு சாட்சிகளும் உயில் எழுதியவரின் கையெழுத்து போடுவதை நேரில் பார்க்கவில்லை என்றாலும், அதில் ஒரு சாட்சியாவது கண்டிப்பாக பார்த்திருக்க வேண்டும் என்றும், மற்றொரு சாட்சி, உயில் எழுதியவரின் கையெழுத்தை அறிந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது; இப்படி இருக்கும்போது, பொதுவாக இரண்டு சாட்சிகளுமே நேரில் பார்த்த சாட்சிகளாக இருப்பது மிக நல்லது;

எனென்றால், உயிலை எழுதியவர் இறந்தபின்னர், இந்த சாட்சிகள் இருவர்தான் அந்த உயிலை உண்மையாக எழுதிய உயில் என்று நிரூபிக்க இருக்கும் சாட்சிகள் ஆகும்; வேறு யாருக்கும் தெரியாது, அந்த உயிலை, அதை எழுதியவர்தான் எழுதி வைத்தாரா என்பது; எனவேதான் உயிலுக்கு சாட்சிகள் முக்கியம், முக்கியம் என்று சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது;

அப்படிப்பட்ட சாட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? நியாயமானவராக இருக்க வேண்டும்; குழப்பவாதியாக இருக்க கூடாது: எதிரியின் பக்கம் சாய்ந்து, பிறழ்ந்து சாட்சி சொல்பவராக இருக்க கூடாது; என்ன நடந்தது என்பதை உண்மையாகச் சொல்பவராக இருக்க வேண்டும்; அப்படியென்றால், சாட்சிகள், பொதுவானவராக இருப்பதுதானே நல்லது!

மேலும், சாட்சிகள் இருவரும் நிரந்தர விலாசத்தில் வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும்; சாட்சி போட்டவுடன் கண்காணாத இடத்துக்கு போய் சேருபவராக இருந்து விடக் கூடாது; வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விடுபவராக இருந்து விடக் கூடாது;

மேலும், குறிப்பாக வயதானவராக இருக்கக் கூடாது; உயிலை எழுதியவர் இறப்பதற்கு முன்னரே, அதில் கையெழுத்துப் போட்ட சாட்சி இறந்து விட்டால், யாரை வைத்து அந்த உயிலை நிரூபிப்பது? சிக்கல் வந்துவிடும் அல்லவா? அல்லது உயிலை நிரூபிப்பதற்கு முன்னரே சாட்சி இறந்தாலும் கஷ்டமே! எனவேதான், குறிப்பாக உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், இளையவராகவே இருக்க வேண்டும்; (ஒவ்வொருவரின் ஆயுளின் விதி என்பது வேறு!); முடிந்தவரை சிறு வயதினராக இருப்பது நல்லது;

மேலும், சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்கள், அந்த உயிலின்படி பலனை (சொத்தை) அடைபவராக கண்டிப்பாக இருக்கக் கூடாது; அப்படி, அந்த உயிலில் பங்கு வாங்குபவரே சாட்சியாகவும் இருந்தால், அந்த உயிலும் செல்லாது ஆகிவிடும்; எனவே இதில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்;

மேலும், உயிலில் சாட்சிக் கையெழுத்துப் போடுபவர், நெருங்கிய உறவினராக இருந்தால் வேறு ஒரு சிக்கல் வரும்; உதாரணமாக, உயிலில் ஒரு மகளுக்குச் சொத்தை கொடுத்திருப்பார்; அதில் சாட்சி போட்டவர், ஒரு மகனாக இருப்பார்; முதலில் அப்பாவுக்காக அரை மனதுடன் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருப்பார்; அப்பா இறந்தவுடன், அந்த சொத்தில் மகனுக்கும் ஆசை வந்துவிடும்; அப்போது, சொத்தைப் பெறும் மகள், அந்த சாட்சி போட்ட மகனின் சாட்சியத்தை (வாக்குமூலத்தை) பெற வேண்டும்; அப்போது அந்த மகன் உதவுவதற்கு வர மாட்டார்; சாக்குப்போக்கு சொல்வார்; தேவையில்லாமல் திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல ஆகிவிடும்; எனவே நெருக்கமான, அல்லது பின்நாளில் வில்லத்தனத்துடன் நடந்து கொள்ளும் நபரின் சாட்சியை இப்போதே பெறாமல் இருப்பது நல்லது!

புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவது எப்படி?

அதற்கு எங்கு பதிவுசெய்ய வேண்டும்? ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள் இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா?

பதில்:
------
’’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட்.

தனியார் டிரஸ்ட்:
------------------
டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பொது டிரஸ்ட்:
----------------
பொதுமக்கள் அனைவரும் அல்லது பொதுமக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் வகையில் ஏற்படுத்தப்படுவது பொது டிரஸ்ட். உதாரணமாக கோயில், மசூதி, தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கான சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு பொது டிரஸ்ட்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

1). சட்டப்படியான நோக்கங்களுக்காக மட்டுமே டிரஸ்ட்டை உருவாக்க முடியும். டிரஸ்ட்டின் நோக்கமானது சட்டவிரோதமாகவோ மோசடியானதாகவே இருக்கக்கூடாது.

2). பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும், நெறியற்றதாகவும்கூட இருக்கக்கூடாது.

3). ஒரு டிரஸ்ட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் அவசியம். அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கலாம். ஆனாலும் கூட இரண்டு பேருக்கு மேல் தேவையான எண்ணிக்கையில் மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்தம்.

4). எந்தவொரு டிரஸ்ட்டாக இருந்தாலும் அதில்

a) நிர்வாக அறங்காவலர் (Managing Trustee) ஒருவர் இருக்க வேண்டும்.
b) பொருளாளர் ஒருவர் இருப்பார்.
c) மற்ற உறுப்பினர்கள் டிரஸ்ட்டிகளாக இருப்பார்கள்.
d) டிரஸ்ட் உருவாக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

5). டிரஸ்ட்டினுடைய நோக்கம், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,சொத்து மதிப்பு,சொத்து குறித்த விளக்கம் மற்றும் பிரிவுகள், உரிமைகள், கடமைகள், விதிமுறைகள் போன்ற விவரங்களை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

6). ஆவணத்தில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும். பொறுப்பாளர்கள் அனைவரும் ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.
--------------------
இவ்வாறு டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்ட பிறகு அதற்கு ஒரு பெயரிட்டு பதிவாளர் அலுவலகத்தில் (Registrar office) பதிவு செய்ய வேண்டும். டிரஸ்ட் செயல்படும் அலவலகம் அமைந்துள்ள பகுதியின் எல்லைக்குட்பட்ட பதிவாளர் அலவலகத்தில் டிரஸ்ட்டை பதிவு செய்யலாம்.

Monday, December 25, 2017

காசோலை வழக்குகளை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்ற அறிவுரைகள் !

========================================
1. வழக்கு தாக்கல் செய்த அன்றே,கட்டை சரி பார்த்து, சரியாக இருந்தால், அன்றே, எதிரிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடலாம்.

2. எதிரிக்கு சம்மன் அனுப்புவதில் உரிய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.

3.நீதிமன்ற சம்மனில், எதிரி சமாதானத்திற்கு சம்மதம் என்று மனு செய்தால், அதை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று, நீதிபதி குறிப்பெழுத வேண்டும்.

4. மூன்று மாதங்களில் சாட்சி விசாரணையை முடிக்க வேண்டும்.

தன்னுடைய பதிவு செய்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்திருந்தால் எந்தச் சூழ்நிலையில் அந்தத் திருமணத்தை ரத்து நீதிமன்றம் உத்தரவிட முடியும்?

நடிகர் பிரசாந்த் விவாகரத்து வழக்கு

இந்த வழக்கின் மேல்முறையீட்டாளரான கிரகலட்சுமிக்கும், எதிர்மனுதாரான நடிகர் பிரசாந்த்க்கும் 1.9.2005 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சிறிது காலம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்கள். கிரகலட்சுமி கர்ப்பம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் 2.1.2006 ஆம் தேதி மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. அவர் அன்றைய தினமே குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கிரகலட்சுமி அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்  அதன்பிறகு 31.7.2006 ஆம் தேதி அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

கிரகலட்சுமி தாய் வீட்டுக்கு சென்றபிறகு இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினைகள் அதிகமானது. பிரசாந்த்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி, குழந்தை பிறந்தது மற்றும் குழந்தைக்கு பெயர் வைத்த நிகழ்ச்சி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிரசாந்த் எவ்வளவோ முயற்சி செய்தும் கிரகலட்சுமியுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அதனால் பிரசாந்த் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் O. P. No - 2721/2006 என்ற எண்ணில் தன்னோடு தன் மனைவியை சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், கிரகலட்சுமி, பிரசாந்த் மீது இ. த. ச பிரிவு 498(A) மற்றும் வரதட்சணை தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு புகாரை அளித்தார். அதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை அதிகமானது.

இந்நிலையில் பிரசாந்த் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையும் வகையில் ஒரு தகவல் அவருக்கு 11.6.2007 ஆம் தேதி கிடைத்தது. அது என்னவென்றால் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே நாராயணன் வேணு பிரசாத் என்பவருடன் 30.11.1998 ஆம் தேதி திருமணம் நடைபெற்று அந்த திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதும் ஆகும். உடனே பிரசாந்த் அதனை உறுதிப்படுத்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த திருமணச் சான்றிதழ் நகலை பெற்றார்.

அதன்பிறகு முதல் திருமணத்தை மறைத்து தன்னை கிரகலட்சுமி இரண்டாவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என காவல்நிலையத்தில் ஒரு புகாரை அளித்தார். அதன்பிறகு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி தன்னுடைய திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவிற்கு கிரகலட்சுமி எதிருரை தாக்கல் செய்தார். அதில் தான் கர்ப்பம் அடைந்த உடன் தன்னுடைய கணவரின் குடும்பத்தினர் தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டனர். மேலும் தன்னுடைய கருவை கலைக்கும்படி வற்புறுத்தியதோடு தனக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தினார்கள் என்றும், 2.1.2006 ஆம் தேதி தன்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் சேர்ந்து வாழ தன் கணவர் மனு போட்ட மனு நிலுவையில் இருக்கும் போது அவரும், அவரது குடும்பத்தினரும் சொத்தில் பங்கு வாங்கி வரச் சொல்லி மிரட்டியதால்தான் அவர்கள் மீது இ. த. ச பிரிவு 498(A) மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் பிரசாந்த்ம், நாராயணன் வேணு பிரசாத் என்பவரும் சேர்ந்து பொய்யான ஆவணத்தை உருவாக்கி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளதாகவும், அவ்வாறு தனக்கு எந்த திருமணமும் நடைபெறவில்லை என்றும் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த குடும்பநல நீதிபதி பிரசாந்த் கேட்டபடி திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிபதி திரு. G. M. அக்பர் அலி விசாரித்தார்.

கிரகலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்புடையதல்ல என்றும், கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்று குறிப்பிட்டு தாக்கல் செய்திருக்கும் சான்றிதழை சட்டப்படியான ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த ஆவணத்தை பொது ஆவணமாக கருத முடியாது என்றும், அதிலுள்ள சங்கதிகளை நிரூபிக்க திருமண பதிவாளர் உட்பட யாரையும் பிரசாந்த் தரப்பில் விசாரிக்கவில்லை என்றும் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே நடைபெற்றதாக கூறப்படும் திருமணம் நிரூபிக்கப்படாத நிலையில் விசாரணை நீதிமன்றம் பிரசாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது தவறு என்றும், பிரசாந்த்க்கும், நாராயணன் வேணு பிரசாத்க்கும் தொடர்பு உள்ளது என்றும், இருவரும் சேர்ந்து சதி செய்துள்ளனர் என்றும் கிரகலட்சுமி தனது முதல் திருமணத்தை மறுத்துள்ளதால் அதனை பிரசாந்த் தான் தகுந்த ஆதாரங்களுடன் மெய்பிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர்

தஸ்தேன் Vs தஸ்தேன் (AIR-1973-SC-1534)

ரோசம்மாள் இரத்தினம்மாள் Vs ஜூசா மரியான் (CDJ-2000-SC-355)

தனியாகார் Vs டாக்டர் அபிஜிதராய்

மதன் மோகன் சிங் Vs ரஜினிகணி (2010-9-SCC-2009)

நீலம்குமார் Vs தயாராணி (2010-13-SCC-298)

சித்திக் Vs இராமலிங்கம் (2011-4-LW-805)

ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

நடிகர் பிரசாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், பிரசாந்த் இந்து திருமணச் சட்டம் பிரிவு 11 ன் கீழ் மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே கிரகலட்சுமிக்கு நடைபெற்ற முதல் திருமணத்தை பிரசாந்த் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணத்திற்காக பிரசாந்தின் சம்மதத்தை கிரகலட்சுமி மறைத்து பெற்றுள்ளதால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க கோரி பிரசாந்த் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் வழக்கை கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்  என்றும் மேலும் கிரகலட்சுமி சம்பந்தப்பட்ட முதல் திருமணத்தின் சார்பதிவக அலுவலக சான்றிதழ் பொது ஆவணம் என்றும் அதன் மூலம் கிரகலட்சுமி மோசடி செய்ததை பிரசாந்த் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார் என்றும் கூறினார். மேலும் அவர்

மஞ்சுளா Vs மணி (1998-C.R.L.J-1476)

திருமதி. தயாமதி பாய் Vs K. M. ஷாப் (2004-7-SCC-107)

ஆய்வாளர் Vs நரசிம்மாச்சாரி (2005-8-SCC-364)

 ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கீழ்கண்ட கேள்விகளை எழுப்பினார்.

1. திருமணத்தை பதிவு செய்திருப்பதால் அந்த திருமணம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகுமா?

2.  திருமணச் சான்றிதழை பொது ஆவணமாக கருத முடியுமா? அதனடிப்படையில் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c) ன்படி ஒரு அனுமானத்திற்கு நீதிமன்றம் வர முடியுமா?

3. அவ்வாறு முதல் திருமணத்தை மறைத்ததால் அதனை இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் மோசடி எனக் கருதி இரண்டாவது திருமணத்தை சட்டப்படியான திருமணம் அல்ல என்று அறிவிக்க முடியுமா?

4. பிரசாந்த் கோரியபடி அவருக்கு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்ய முடியுமா?

நடிகர் பிரசாந்தின் ஒப்புதலை கிரகலட்சுமி தனக்கு ஏற்கனவே நடைபெற்ற திருமணத்தை மறைத்து மோசடியாக பெற்றுள்ளதை அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்துள்ளார்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி திருமணத்திற்கான ஒப்புதலை மனுதாரர் அல்லது அவருடைய காப்பாளரின் ஒப்புதலை ஏமாற்றி மோசடி செய்து அல்லது வன்முறையை பயன்படுத்தி பெற்றிருந்தால் அந்த திருமணம் சட்டப்படியான ஏற்கத்தக்க திருமணமாக கருத முடியாது.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 7 திருமணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சடங்குகளை பற்றி கூறுகிறது. பிரிவு 7-A சுய மரியாதை திருமணம் மற்றும் சீர்திருத்த திருமணம் பற்றி கூறுகிறது. பிரிவு 8 இந்து திருமணங்களை பதிவு செய்வது பற்றி கூறுகிறது. பிரிவு 8(1) இந்து திருமணங்களை ஏன் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை பற்றி கூறுகிறது.

மேலே சொன்ன சட்டப் பிரிவுகளில் ஒரு இந்து திருமணமானது பிரிவு 7 ன் கீழ் அல்லது 7-A ன் கீழ் சுயமரியாதை திருமணமாக வெறும் மாலை, மோதிரம், தாலி கட்டுதல் ஆகியவை மட்டும் நடைபெற்றிருந்தாலும் அத்தகைய திருமணங்களும் செல்லும். பிரிவு 8 ன் கீழ் திருமணங்களை பதிவு செய்வது அந்த திருமணத்திற்கு ஒரு ஆதாரமாக இருக்கும். அதற்காக இந்து திருமண பதிவாளர் மூலம் பதிவு செய்து இந்து திருமண பதிவேட்டில் அந்த திருமணங்கள் பதிவு செய்யப்படும். பிரிவு 8(1) ல் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதன் அவசியம் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்து திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை.

எனவே இந்து திருமணச் சட்டம் பிரிவு 7 அல்லது 7-A ன் கீழ் நடைபெறும் திருமணத்தை பதிவு செய்து தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த பதிவை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c) ன்படி திருமணச் சான்றிதழை ஒரு பொது ஆவணமாக கருதி அதனடிப்படையில் அந்த திருமணம் நடைபெற்றிருப்பதை தீர்மானிக்க முடியுமா? என்பதை பார்க்கும் பொழுது தமிழ்நாடு இந்து திருமண பதிவு விதி 9 ன்படி முறையாக விண்ணப்பம் செய்து 3 நபர்கள் சாட்சிக் கையொப்பமிட்டு ஒரு திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு 3 சாட்சிகள் ஒரு திருமணத்தை பதிவு செய்து கையெழுத்து செய்துள்ள நிலையில் நடிகர் பிரசாந்த் எந்த ஒரு சாட்சியையும் விசாரிக்காமல் அந்த சான்றிதழை பொது ஆவணமாக தாக்கல் செய்துள்ளார். 22.10.2007 க்கு பிறகுதான் விண்ணப்பங்களில் புகைப்படம் ஒட்டும் முறை அமலுக்கு வந்தது. அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டுள்ள ராஜேஷ், சங்கர் மற்றும் சந்திரசேகர் என யாரையும் பிரசாந்த் விசாரிக்கவில்லை. எனவே அந்த திருமணச் சான்றிதழை ஆவணமாக ஏற்க முடியாது. ஆனால் பிரிவு 8(4) ன்படி இந்துத் திருமண பதிவேடு சாட்சிய சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆவணமாகும். அதிலிருந்து எடுக்கப்படும் குறிப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் சான்றிதழை ஆதாரமாக நீதிமன்றம் ஏற்க முடியும்.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c)  ஒரு சங்கதியை அனுமானிப்பது குறித்து கூறுகிறது. அந்த வகையில் பொது ஊழியரால் ஒரு பதிவேட்டில் எழுதப்பட்டு அதனடிப்படையில் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட ஆவணமாக கருதி ஏற்றதில் தவறில்லை.

கிரகலட்சுமியின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், 3 சாட்சிகள் திருமணத்தை பதிவு செய்யும் பொழுது கையெழுத்திட்டுள்ளதால் அந்த சான்றிதழை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ன் கீழ் சாட்சிகளை விசாரித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்து திருமணச் சட்டம் பிரிவு 8(4) ன்படி ஒரு பொது ஊழியர் தன்னுடைய அலுவலக வேலையாக திருமண பதிவேட்டில் ஒரு திருமணம் குறித்த பதிவை எழுதுகிறார். அந்த வகையில் அது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 74 ன்படி ஒரு பொது ஆவணமாக கருதப்படும். எனவே கிரகலட்சுமியின் முதல் திருமணச் சான்றிதழை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 65(1) ன் கீழ் இரண்டாம் வகை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் " பிரகாஷ் சிங் தாகூர் Vs பாரதி" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பாரத்தால் முதல் திருமணத்தை மறைத்தது என்பது முக்கியமான விஷயமாக கருத வேண்டும். அந்த வகையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி மோசடியாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. அவ்வாறு இந்த வழக்கில் கிரகலட்சுமி தனக்கு நடைபெற்ற முதல் திருமணத்தை மறைத்தது சட்டப்படி ஒரு முக்கியமான சங்கதியாகும். அதனால் பிரசாந்தின் ஒப்புதலை கிரகலட்சுமி மோசடியாகவே பெற்றுள்ளதாக இந்த நீதிமன்றம் தீர்மானிப்பதாக கூறி கிரகலட்சுமியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

C. C. A. NO - 1305/2009
V.D.கிரகலட்சுமி Vs T. பிரசாந்த்
2011-5-LW-CIVIL-948