Tuesday, March 13, 2018

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை

அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..?
அந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும். பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும். குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும். எனவே, இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.
இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.

அதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.
எந்த வங்கிக்குப் பணம் மாற்றப் பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப்  பெற்றுத் தரவும் வங்கி உதவும்.
அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும். அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.

சிலநேரம் தனது அக்கவுன்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.  அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை, அந்த அக்கவுன்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும். உடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது. அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, காலதாமதம் ஆகலாம்.

உதாரணமாக, ஒருவரின் அக்கவுன்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறுதலாக வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த அக்கவுன்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து, அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின், மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும்வரை காத்திருக்க வேண்டும். இன்னும் இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடுவெல்லாம் விதிக்க முடியாது.

அதேபோல, அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஏனெனில் முதல் தவறு, பணப் பரிமாற்றம் செய்தவருடையது. எனவே, கடுமை காட்டாமல் பக்குவமாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும். இதில், பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்
.
இதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். நேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது.

பணம் தவறுதலாக இன்னொரு அக்கவுன்டுக்குச் செல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம். முதலில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும்முன்பு, எந்த அக்கவுன்டிற்கு பரிமாற்றம் செய்கிறோமோ, அந்த அக்கவுன்ட் விவரங்களை ஆன்லைனில் ஏற்றி சேமித்துவிட வேண்டும்.

இப்படிச் சேமித்துவிடுவதால், தவறான எண்ணுக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படாது. அதேபோல, இணைய மையங்களிலிருக்கும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கணினிகளில் வைரஸ் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் ஹேக்கர்கள் சிக்கல் இருக்காது” என்றார் அவர்.

ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது இன்றைக்கு எல்லோரும் பின்பற்றும் வழிமுறையாக மாறிவிட்டது. பணத்தை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப இதுதான் மிகச் சிறந்த வழி. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இதைச் செய்தால், பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பி, நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்

ATM / BANK சம்பந்தமான Online புகார்

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான்  சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.

அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10-ம் தேதி,மே 10-ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28-ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக

https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.

பின்னர் ஜூன் 18-ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும். இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html.


ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்படி மீட்பது?

======================================
 தான் சம்பாதித்த‍ பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு சொத்தை வாங்குகிறோம். அப்படி வாங்கும் சொத்தை விற்பவர் இன்னொருவ ருக்கும் போலியான ஆவணம் தயார் செய்து விற்றிருந்தால் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.

அப்படித ஒரே சொத்தை (#One_Property) இருவருக்கு விற்பது (Two Buyers) சட்டப்படி குற்றம் (#CriminalOffence)ஆகும். அவ்வாறு ஒருவர் விற்பனை செய்திருந்தால் இரண்டாவதாக செய்த விற்பனை செல்லாது. இ ருந்தாலும், அந்த சொத்தை முதலாவதாக வாங்கியவர் சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
1. கிரிமினல் வழக்கு :
--------------------------------
நேரடியாக, போலிஸ் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வைக்கலாம். அப்போது, மோசடி செய்தவர், முன் ஜாமீன் அல்லது ஜாமீன் போடும்போது, போலிஸ் உதவியுடன், அவர் எந்த நீதிமன்றத்தில் மனு போட்டுல்லாரோ, அங்கு, ஒரு வழக்கறிஞர் வைத்து, intervene மனு செய்யலாம். அப்படி செய்யும்போது, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய வலியுறுத்தலாம். அப்போது, பிணை கிடைக்க, மோசடி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் ஆணையிடும்போது, அங்கேயே அலைச்சல் இல்லாமல், பிரச்சினை முடிய வாய்ப்பு உள்ளது.

2. பத்திரத்துறையில், மாவட்ட பதிவாளர் மூலம் ரத்து செய்ய மனு கொடுப்பது.
அந்த இரண்டாவது பத்திரத்தை முறைப்படி ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்?
============================================
இரண்டாவதாக பதிவுசெய்யப்பட்டுள்ள பத்திரத்தின் பதிவுகளை ரத்துசெய்யக்கோரி, பதிவுச்சட்டம் 1908பிரிவு 82ன்கீழ் பதிவுத்துறை த் தலைவர் அவர்களுக்கு முதலில் உரிய ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவின்படி தங்களின் விண்ணப்பமானது தங்களது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அனுப்பப்படும்.

மாவட்டப் பதிவாளர் அவர்கள், சமபந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு ஆவணங்களை ஆய்வுசெய்வார்

உங்களது புகாரில் உண்மை இருப்பது மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களுக்கு தெரியவந்தால், இரண்டாவதாக பதிவு செய்யப்பட்ட பத்தி ரஙளை ரத்துசெய்ய சார்பதிவாளர் அவர்களுக்கு உத்தரவிடுவார்.

பதிவுச்சட்டம், 1908-பிரிவு 83ன்கீழ் சட்டத்திற்கு புறம்பாக இரண்டு நபர்களுக்கு ஒரே சொத்தை விற்பனை செய்த நபர் மீது, காவல்நி லையத்தில் புகார் அளித்து சட்டப்ப டியான நடவடிக்கை எடுக்கவும் சார்பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

3. சிவில் வழக்கு :
--------------------------
இது போக, இரண்டாவது பத்திரம் பதிந்து மூன்று வருடத்திற்குள் இருந்தால், சிவில் வழக்கு போடலாம். நீதிமன்ற கட்டணம் நூறு ரூபாய்க்குள்தான் வரும். சம்பந்தம் இல்லாமல், நம் சொத்தை, வேறு நபர்கள் விற்கும்போது, மார்க்கெட் மதிப்புக்கு, நீதிமன்ற கட்டணம் செலுத்த தேவை இல்லை. மோசடி கிரைய பத்திரம் செல்லாது என்று விளம்புகை பரிகாரம் கேட்கலாம்.


நில அளவுகள் அறிவோம்.


♓1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
♓1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
♓1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
♓1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
♓1 ஏக்கர் – 100 சென்ட்
♓1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
♓1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
♓1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
♓1 மீட்டர் – 3.281 அடி
♓1 குழி – 44 சென்ட்
♓1 மா – 100 குழி
♓1 காணி – 132 சென்ட் (3 குழி)
♓1 காணி – 1.32 ஏக்கர்
♓1 காணி – 57,499 சதுர அடி
♓1 டிசிமல் – 1 1/2 சென்ட்
♓1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
♓1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
♓1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
♓1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
♓1 கிலோ மீட்டர் – 3280 அடி
♓1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
♓1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
♓1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
♓1 செயின் – 66 அடி (100 லிங்க்)
♓1 லிங்க் – 0.66 அடி
♓1 கெஜம் – 3 அடி
♓8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
♓1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
♓22 கெஜம் – 1 செயின் (66 அடி)
♓10 செயின் – 1 பர்லாங்கு
♓1 இன்ச் – 2.54 செ.மீ
♓1 செ.மீ – 0.3937 செ.மீ
♓1 கெஜம் – 0.9144 மீட்டர்
♓1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
♓1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
♓1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
♓30 சதுர மைல் – 1 டவுன்சிப்
♓640 ஏக்கர் – 1 சதுர மைல்..

நண்பர்களும் அறிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்....

SUPREME COURT- LEGAL AID FOR MIDDLE INCOME GROUP - நடுத்தர வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித்திட்டம்.

  • திட்டச் செயல்பாடுகள்
நடுத்தர வருமானமுள்ளவர்களுக்குச், சட்ட உதவிகளைச் செய்யும் நோக்கத்துடன் நடுத்தர  வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தின் மொத்த வருமானம் ரூ.20.000/- அல்லது ஆண்டு வருமானம் 2,40,000/- க்கு மிகாமலும் இருக்கும் குடிமக்கள் நடுத்தர வருமானமுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்; தகுதியுடைய சிலருக்கு மாதவருமானம் ரூ.25,000/- அல்லது ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- இருப்பினும் அவர்களும் நடுத்தர வருமானமுடையவர்களாகவே கருதப்படுகின்றனர். சுய சார்புடைய இத்திட்டத்தின் ஆரம்ப முதலீடு முதல் நிர்வாகக் குழுவினரால் (First Executive Committee) தரப்படும்.

இத்திட்டத்தின் கீழ்வரும் வழக்குகள்
---------------------------------------------------------
•    உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட இருக்கும் வழக்குகள்.
•    உச்சநீதிமன்றத்தின் சட்ட எல்லைக்குள் பின்வரும் வழக்குகள் வராது.

a)    சுங்கச்சட்டம் 1962 (custom act 1962) பிரிவு 130A இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.

b)    மத்திய மற்றும் தீர்வை மற்றும் உப்புச்சட்டம் 1944 (Central and Excise and Salt Act, 1944) பிரிவு 35  இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்

c)    தங்க (கட்டுபாடு) சட்டம் 1968, பிரிவு 82C இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்

d)    தனியுரிமை வர்த்தக நடைமுறைக்கட்டுப்பாடு ( M.R.T.P. Act) 1969 பிரிவு 7(2) இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.

e)    வருமான வரி சட்டம் 1961 (Income Tax Act, 1961) பிரிவு 25 J இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.

f)    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 317 (1) இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.

g)    குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் சட்டம் 1952 பகுதி 3 இன் தேர்தல் குறித்த வழக்குகள்.

h)    பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் குறித்த வழக்குகள்.

i)    தனியுரிமை வர்த்தக நடைமுறைக்கட்டுப்பாடு சட்டம் 1969 (M.R.T.P. Act, 1969) இன் கீழ் வரும் மேல் முறையீடு.

j)    சுங்கச் சட்டம் 1962 பிரிவு 130 E, உட்பிரிவு (b) இன் கீழ் வரும் மேல் முறையீடு.

k)    மத்திய தீர்வை மற்றும் உப்பு 1944 சட்டத்தின் பிரிவு 35 L இன் கீழ்வரும் மேல் முறையீடு.

l)    செய்திகளை மறு ஆய்வு செய்தல்

உதவிபெற அணுகும் சமயம் (When to approach for aid)
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடுக்கவோ, எதிர்த்து வழக்காடவோ நேரிடும் சூழல்களில், மத்தியதர வருமான சமுதாயத்தை வழக்காடுபவர் அணுகலாம்; அச்சூழல்கள் பின்வருவனவற்றையும் தன்னுள் கொண்டிருக்கும்;

a)    மேல் முறையீடு/சிறப்பு விடுமுறை மனுக்கள், உரிமையியல் அல்லது குற்றவியல், உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிரான வழக்கு,

b)    நீதிப்பேராணை மனு (Writ Petition)/ஆட்கொணர்வு மனு (Habeas Corpus)

c)    உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கு ஒரு மாநிலத்தில் தேங்கி இருக்குமானால் அதனை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரும் மனு மற்றும்

d)    உச்சநீதிமன்ற சட்டச்செயல்பாடுகள் குறித்த சட்ட ஆலோசனை.

செயல்படும் முறை (How it works)
==============================
•    உச்சநீதிமன்ற நடுத்தர வருமானத்தினரின் சமுதாயம், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரையும் உறுப்பினராகக் கொண்ட வழக்கறிஞர் குழுவினை (panel of Advocates) கொண்டுள்ளது. இக்குழுவினை உருவாக்கும்போது ஒரு வழக்கறிஞரை, ஆனால் இரண்டுக்கு மேற்படாத வழக்கு நடைபெறும் நீதிமன்ற மாநிலத்தின் வட்டாரமொழி தெரிந்த வழக்கறிஞரை உறுப்பினராகக் கொள்ள வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படுகிறது.

•    வழக்கறிஞர்கள் குழு, ஒரு வழக்கில் பங்குபெறும்போது இத்திட்டத்தின், சட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலம் உறுதியளிக்கிறது.

•    ஆணையத்திலுள்ள (Committee) 3 வழக்கறிஞர்கள், விருப்ப அடிப்படையில் குழுவிற்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர், வழக்குரைப்பவர் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் அல்லது வழக்காடும் ஆலோசகர் (arguing counsel) அல்லது உயர் ஆலோசகர் (Senior Counsel)  இவர்களில் யாராவது மூவரைச் சுட்டிக்காட்டலாம். விண்ணப்பதாரரின் தேர்வினை குழு மதிக்க முயலும்.

•    பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர் மற்றும் உயர் ஆலோசகர் இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் வழக்கினை அளிக்க குழுவினருக்கு உரிமையுண்டு. விண்ணப்பதாரரின் மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர், வழக்காடும் ஆலோசகர், உயர் ஆலோசகர் இவர்களின் யாருக்கு வேண்டுமானாலும் தரும் உரிமை உச்சநீதிமன்ற (நடுத்தர வருமானக்குழு) சட்ட உதவி சமுதாயத்திடம் (Supreme Court (Middle Income Group) உள்ளது.

சட்ட உதவிக்காக அணுக வேண்டிய இடம். (Where to approach for legal aid)
==============================================
•    விருப்பமுள்ள வழக்குரைப்போர் உச்சநீதிமன்ற நடுத்தர வருமான குழுவினரின் சட்ட உதவி மையத்தின் செயலரை அணுகும் முன் மையத்தால் அளிக்கப்படும் ஒரு படிவத்தினை நிரப்பி அதற்குரிய ஆவணங்களோடு குழுவின் செயலரை அணுக வேண்டும். (விலாசம்:- Supreme Court Middle Income Group Legal Aid Society, 109- Lawyers Chambers, Post Office Wing, Supreme Court Compound, New Delhi-110001)

•    மனுதாரரின் மனுவை வாங்கியப் பின் சட்ட உதவிக்குழுவானது (legal aid society) அம்மனுவினை பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞரிடம் கொடுத்து, அவ்வழக்கு மேற்கொண்டு ஆவன செய்வதற்கு ஏதுவானதா என்பதை ஆய்ந்தறிந்த பின்னரே, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

•    மனுதாரர் இத்திட்டத்தின் பயன்களை அனுபவிக்கலாம் என்று கற்றறிந்த, பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் என்று கூறினால், மட்டுமே இத்திட்டத்தின் பயன்களை மனுதாரர் அனுபவிக்க முடியும். அவ்வாறு மனுதாரரின் விண்ணப்பத்தில்/ வழக்குத் தாள்களில் பதிவு செய்த வழக்கறிஞர் மேலொப்பமிட்ட பின், (endorsement) உச்சநீதிமன்ற நடுத்தர வருமான சட்ட உதவிக்குழு, (Supreme Court Middle Income Group Legal Aid Society) மனுதாரரின் மனுவினை மனுதாரரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு சேவை வரியாக ரூ.350/- மட்டுமே வசூலிக்கும்.

சட்ட உதவிக்கான கட்டணம் (Fee for legal aid)
=========================================
இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வழக்கிற்கேற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டணத்தை செயலர் சுட்டிக்காட்ட, அத்தொகையை மனுதாரர் செலுத்த வேண்டும்.
அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே செயலர், வழக்கினை, நடுத்தர வருமானக்குழுவின் சட்ட உதவித்திட்டத்தின் (MIG Legal Aid Scheme) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர் / வாதாடும் ஆலோசகர் / குழுவின் மூத்த ஆலோசகரிடம் வழக்கின் தன்மை குறித்து கேட்பார்.

•    ஏற்படக்கூடிய செலவுகளின் அடிப்படையில் செயலரால் கூறப்படும் தொகையை, விண்ணப்பதாரர் ரொக்கமாகவோ, காசோலையாகவோ செலுத்த வேண்டும்.

•    விண்ணப்பங்களை அச்சிடுதல் மற்றும் இதர அலுவலகச் செலவுகளை இத்திட்டத்தின் ஆரம்பத்தொகை ஏற்றுக்கொள்ளும்.
பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்/வழக்கறிஞரின் கட்டணம் குறித்த செய்திகள்.(Schedule of fee for advocate on record /advocates)

மனுதாரரின் சார்பாகத் தோன்றுதல் (Appearing On Behalf Of Petitioner)
========================================
வ.எண் (S. No)

சேவைகள் (Services)

கட்டணம் (Fees)

  •  சிறப்பு விடுமுறை மனு/நீதிப்பேராணை/மாறுதல் வேண்டும் மனு, தேதிகள் குறித்த மனுக்கள், வழக்கைத் தள்ளிப்போடுதல், ஜாமீன், குற்ற மன்னிப்புத் தாமத  நோட்டீஸ் கொடுப்பதற்கு முன் மனுதாரரின் கோரிக்கையை கேட்பதற்காக செய்யப்படும் மனு போன்றனவற்றிற்காக எழுதப்படும் மனுக்களுக்கான கட்டணம் Rs 2200/ 
  • மறுப்பு உறுதிமொழி ஆவணம் (rejoinder affidavit) மற்றும் / அல்லது நீதிமன்ற ஆணைக்குப் பின் ஏற்படக்கூடிய இறுதிவரையிலான, ஒத்திவைப்பு பதிலாகச் செயல்படுதல் (நீதிமன்ற ஆணை விலக்கப்படும் இறுதி நிலை தவிர்த்து) போன்றன குறித்த மனுக்கள் எழுதுவதற்கான கட்டணம் Rs 1100/-
  • இறுதி நிலையில் வழக்கு குறித்த விசாரணை - (ஒரு நாளுக்கு ரூ.1650/- முதல் அதிகபட்சமாக ரூ.3,300/- வரை) ஒத்திவைத்தல் (adjournment, if any, and / மேல்முறையீட்டு நிலை அதிகபட்சம்  Rs.3300/-

மனுதாரரின் சார்பாகத் தோன்றுதல் (Appearing On Behalf Of Petitioner)
============================================================
  • இறுதிகட்ட விசாரணை தவிர்த்து பதில் அல்லது மறுப்பு உறுதிமொழி ஆவணம் (counter affidavit) மறுப்பு தெரிவிக்கும் மனு மற்றும் ஒத்திவைத்தலை (stay) விலக்குதல் அனுமதிக்கப்படும் வரை அனைத்து கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளுதல் போன்ற அனைத்து வகை மனுக்களும் எழுதுவதற்கு.     Rs 2200/-
  • மேல் முறையீடு அல்லது ஒத்தி வைத்தலுக்கு இறுதிகட்ட நிலையில் மற்றும்/அல்லது ஆரம்பநிலையில் ஒருநாளைக்கு ரூ.1650 என்ற நிலையில் விசாரணை மேற்கொள்ள அதிகபட்சம்  Rs.3300/-

மூத்த வழக்கறிஞர்களுக்கான கட்டணம் (Fee For Senior Advocates)

  • சிறப்பு விடுப்பு மனு, (settlement of SLP), பேராணை மனு (Writ Petition), மாற்றம் வேண்டும் மனு (Transfer petition), பதில் பிரமாணம் (Counter affidavit), மறுப்பு உறுதிமொழி ஆவணம் (Rejoinder Affidavit) கலந்தாலோசனை உள்ளிட்ட மறுப்பு அறிக்கை முதலியன குறித்த மனு எழுதுதல் Rs.1000/-
  • வழக்கின் ஆரம்ப நிலையில் தோன்றுதல் / விசாரணைக்குப் பின் தோன்றுதல், ஒவ்வொரு முறை தோன்றுவதற்கும் ரூ.1,650/- கட்டணம் பெறுதல் அதிகபட்சம் Rs.3300/-
  • இறுதி நிலையில் தோன்றுதற்கான கட்டணம்/மேல் முறையீட்டுநிலை ஒவ்வொரு முறை தோன்றுதற்கும் ரூ.2,500/- பெறுதல் அதிகபட்சம் Rs 5000/-

 கைச்செலவு கட்டணப்பட்டியல் குறித்த அட்டவணை  (Schedule of Rates for out of pocket expenses)

வ.எண் (S. No)

சேவைகள் (Services)

கட்டணம் (Charges) 
  • கணினி தட்டச்சு ஒருபக்கத்திற்கு ரூ.10.00
  •  நகலெடுத்தல் - ஒவ்வொரு அதிகப்படியான படிவத்திற்கும்
  • ஒருபக்கத்திற்கு 50 பைசா
  • தட்டெழுத்தர் கட்டணம் (Steno charges)
  • ஒருபக்கத்திற்கு ரூ.8.00
  • புத்தகக்கட்டுமானம் (Paper Book Binding)
  • ஒவ்வொன்றிகும் ரூ.5.00

 வழக்குத் தொடுப்பவர்களிடமிருந்துத் தேவைப்படும் ஆவணங்கள் (Documents required from the litigants)

மனுதாரர்கள் தங்கள் மனுவை நடுத்தர வருமான குழுவினுக்கு (MIG Society) சமர்ப்பிக்கும்போது முழுமையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவர் அல்லது ஒரு பெண்மனி உயர்நீதி மன்றத்தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடுக்க விரும்பினால், அவர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகல், அவர் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த மனுவின் நகல், கீழ் கோர்ட்டில் தரப்பட்ட தீர்ப்பின்/ஆணையின் நகல் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தையும் தனது மனுவுடன் சமர்ப்பிக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலமில்லாத வேறு ஒரு மொழியில் இருக்குமானால் அவைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
•    செயலரால் கணிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்ட கட்டணமும் இதர செலவுகளுக்கான பணமும்,
•    இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு (Supreme Court Middle Income Group Legal Aid Society)

பிக்சட் டெபாசிட் மீது கடன் வாங்குவது எப்படி?

                                                                     கடன்

வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் போது நாம் பொதுவாக நம் பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால் சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. அதனை நாம் குறுகிய காலத்தில் திரும்பி செலுத்தவும் முடியும். இத்தகைய அவசர காலங்களில் நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகிய கால கடனை பெற முடியும். அவ்வாறு நீங்கள் முயற்சி செய்யும் பொழுது வங்கிகள், உங்களுடைய வைப்புத் தொகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. இதற்கு பதிலாக நீங்கள் தனி நபர் கடன் பெறலாம். நிலையான வைப்புத் தொகையை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தனி நபர் கடனை விட வைப்புத் தொகை மீது கடன் பெறுவதே சிறந்தது. அவ்வாறு கடன் பெற, நீங்கள் ஒரு வங்கி கிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தை நிரப்பித் தர வேண்டும்.

                                                            வட்டி விகிதம்

கடனுக்கான வட்டி விகிதங்கள், பொதுவாக உங்கள் வங்கி வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை விட சுமார் 2 முதல் 3 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். எனினும், அது வங்கிக்கு வங்கி மாறுபடும். உதாரணமாக, உங்களுடைய வைப்புத் தொகைக்கு நீங்கள் சுமார் 9 சதவீத வட்டி பெறுகிறீர்கள் எனில், உங்களுடைய கடனுக்கான வட்டி சுமார் 11 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். எனவே, நீங்கள் அதிகமாக சுமார் 2 முதல் 3 சதவீத வட்டியை செலுத்துகிறீர்கள்.

                                                                    கால அளவு

கடனுக்கான கால அளவு, உங்களுடைய வைப்புத் தொகையின் முதிர்வை பொறுத்தது. உங்களுடைய வைப்புத் தொகை முதிர்வடையும் வரை நீங்கள் உங்களுடைய கடனுக்கான தொகையை செலுத்தவில்லை எனில் உங்களுடைய கடன் தொகை வைப்புத் தொகையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.

                                                                    கட்டணங்கள்

இத்தைகைய கடன்களில், எந்தவித ஆபத்தும் இல்லை. எனவே, வங்கிகள் பொதுவாக பிராசஸிங் கட்டணம் வசூலிப்பதில்லை. எனினும், ஒரு சில வங்கிகள் ஒரு சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கின்றன.

தனி நபர் கடனை விட இது எந்த வகையில் சிறந்தது?

பொதுவாக வங்கிகள், கடன் அளவை பொறுத்து தனி நபர் கடனுக்கு 16 முதல் 20 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மேலும், தனி நபர் கடனுக்கு பிராசஸிங் கட்டணம் வேறு செலுத்த வேண்டும். ஆனால் வைப்புத் தொகை மீதான கடனுக்கான வட்டி சுமார் 11 முதல் 12 சதவீதம் மட்டுமே. எனவே, குறுகிய கால அவசரத் தேவைக்கு வைப்புத் தொகை மீது கடன் பெறுவதே மிகவும் சிறந்தது.

தவறை செய்யும் வழக்கறிஞர்களுக்கு சட்டம் உதவி செய்யாது

வாதிகள் விளம்புகை மற்றும் செயலுறுத்துக் கட்டளை பரிகாரம் கோரி திருப்பூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் இடைக்காலமாக ஒரு மனுவை தாக்கல் செய்து, சொத்தை நில அளவையர் உதவியுடன் அளக்க ஒரு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அந்த மனுவை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரதிவாதிகளின் வழக்கறிஞர் ஒரு மேற்குறிப்பை செய்து கொடுத்தார். அதனால் நீதிமன்றம் வாதிகள் கோரியபடி வழக்கு சொத்துக்களை நில அளவையருடன் ஆய்வு செய்து, அளந்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து பிரதிவாதிகள் இந்த சீராய்வு மனுவை செ‌ன்னை உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தாக்கல் செய்தனர்.

பிரதிவாதிகள் / மேல்முறையீட்டாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், ஆட்சேபனை இல்லை என்று மேற்குறிப்பு செய்து கொடுக்குமாறு பிரதிவாதிகள் அவர்களது வழக்கறிஞருக்கு எந்த அறிவுறுத்தலையும் கொடுக்கவில்லை, ஆனால் வழக்கறிஞர் பிரதிவாதிகளை கேட்காமல் அப்படி ஒரு மேற்குறிப்பை செய்து கொடுத்துள்ளார் என்பதை முக்கிய காரணமாக கூறினார்.

வாதிகள் / எதிர்மனுதார்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், ஒரு வழக்கறிஞரின் நேர்மை குறித்து வினா எழுப்பி மிகவும், தரக்குறைவான காரணத்தை பிரதிவாதிகள் / மேல்முறையீட்டாளர்கள் முன் வைத்துள்ளதாகவும், தங்களுடைய வழக்கறிஞரின் முதுகில் குத்துகிற ஒரு செயலில் பிரதிவாதிகள் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வழக்கறிஞருக்கு தொழில் ரீதியாக உள்ள கடமை குறித்து வினா எழுப்பியுள்ளதாகவும் கூறி பிரதிவாதிகளின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கூறினார்.

இருதர‌ப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திரு. P. தேவதாஸ் அவர்கள்

உரிமையியல் வழக்குகளில் ஒரு வக்காலத்தை அளிப்பதன் மூலம் ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். வக்காலத்தை ஒரு வழக்கறிஞருக்கு அளிப்பது என்பது அவருக்கு அதிகாரத்தை வழங்குவது போன்ற ஒரு செயலாகும். கட்சிக்காரர் முதல்வராகவும், வழக்கறிஞர் அவருடைய முகவராகவும் செயல்படுகிறார். அவர்களுக்கிடையே முதல்வர், முகவர் என்ற நெறிமுறை உருவாகிறது. முகவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு ஒரு முகவர் செயல்படக்கூடாது என்பது முகவருக்கான அடிப்படை நெறிமுறையாகும். ஆனால் அந்த நெறிமுறை வழக்கறிஞர்களுக்கு பொருந்தாது. வழக்கறிஞர்களுக்கென்று சில சிறப்பு இயல்புகளும், சிறப்பு தகுதிகளும் உள்ளது. ( பார்க்க :- இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளைகள் 22(1),39-A மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 303, 304) அந்த சிறப்பு தகுதியானது வழக்கறிஞர்களின் தனித்தன்மை மற்றும் அச்சமில்லாமல் செயல்படுவதை பாதுகாப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கை நடத்துவதும் அதற்கான எதிர்ப்பு வாதத்தை முன் வைப்பதும் ஒரு வழக்கறிஞரின் அடிப்படை கடமையாகும். அவருக்குள்ள தொழில் ரீதியான கடமை அல்லது ஆளுமையை அவருடைய கட்சிக்காரர் உட்பட எந்தவொரு நபருக்காகவும் அவற்றை அடகு வைத்துவிட முடியாது. ஒரு வழக்கறிஞர் தன்னுடைய தொழில் ரீதியிலான கடமையை மேற்கொள்ளும் போது அதுகுறித்து கட்சிக்காரர், எதிரி, அரசு தரப்பு, நிர்வாகம் அல்லது சட்டம் இயற்றுபவர்கள் என யாராலும் கருத்து தெரிவிக்கவோ, அதிகாரம் செலுத்தவோ முடியாது. ஒரு வழக்கறிஞர் தொழில் ரீதியான கடமையை மேற்கொள்ளும் போது அவரை யாரும் தடுக்க முடியாது.

ஒரு வழக்கை நடத்துவது என்பது அந்த வழக்கறிஞரின் தொழில் சார்ந்த திறமையை பொறுத்தது. ஒரு குற்றவியல் வழக்கில் ஒரு வழக்கறிஞர் சற்று சறுக்கினால் அவருடைய கட்சிக்காரர் சிறையில் இருக்க வேண்டியது வரும். அதேபோல் ஒரு உரிமையியல் வழக்கில் ஒரு வழக்கறிஞர் சற்று சறுக்கினால் கட்சிக்காரரின் மதிப்பு வாய்ந்த சொத்து, பணம், கவுரவம் ஆகியவற்றை இழக்க நேரிடுவதோடு தெருவில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுவிடும். ஒட்டுமொத்த குற்றச்சாட்டும் வழக்கறிஞரின் மீது சுமத்தப்படும்.

ஒரு வழக்கு சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் தன்னுடைய தொழில்முறைக் கடமையை ஆற்றும் விதமாக முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும். அவர் ஒரு விண்ணப்பத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கிற நிலைப்பாட்டினை எடுக்கலாம். சில நேரங்களில் அந்த வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் மறு தரப்பினர் செயல்படுவதை தவிர்க்கும் விதமாக ஒரு விண்ணப்பத்தை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்கிற மேற்குறிப்பை செய்யலாம். வழக்கறிஞர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருடைய கட்சிக்காரரின் நலத்தை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கும். எனவே அத்தகைய ஒரு முடிவை எடுத்ததற்காக வழக்கறிஞரை குறை சொல்லக்கூடாது.

ஒரு வழக்கறிஞருக்கு கட்சிக்காரர் ஊதியம் அளிக்கிறார் என்பதற்காக அவரை எஜமானராக கருத முடியாது. ஒரு வழக்கறிஞர் யாருக்கும் ஊழியராக செயல்படக்கூடியவர் அல்ல. அவருடைய மனசாட்சி, சட்டம் மற்றும் கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளுக்கும் கீழ்படிந்து நடக்கக்கூடிய நபராவார். அவர் பணிபுரிந்து வரும் மூத்த வழக்கறிஞரும் அவருக்கு எஜமானராக இருக்க முடியாது. அவர் ஒரு குருவாகத்தான் இருக்க முடியும்.

ஒரு வக்காலத்தை படித்து பார்த்தால் ஒரு வழக்கறிஞருக்கு அந்த வக்காலத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும். ஒரு வழக்கை நடத்துகிற போது அவருடைய தொழில் சார்ந்த கடமையின் அடிப்படையில் அவர் உடனுக்குடன் சில முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. ஒவ்வொரு வழக்கறிஞரும் நீதிமன்றத்தின் அலுவலராக கருதப்படுகிறார்கள். அது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதியாகும். நீதி நிர்வாகத்தின் தனித்தன்மையை காப்பாற்றுவதில் வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு வழக்கறிஞர் யாரையும் சாரந்திருக்காமல் சுதந்திரமாக செயல்பட கூடியவராக இருக்க வேண்டும்.

தொழில்முறைக் கடமையை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு ஒரு வழக்கறிஞர் அவருடைய தொழிலில் தவறாக நடந்து கொள்வது, ஏமாற்றுவது, உடந்தையாக இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அதுபோன்ற தவறை செய்யும் வழக்கறிஞர்களுக்கு சட்டம் உதவி செய்யாது.

எனவே ஒரு வழக்கறிஞர் தனது தொழில்முறைக் கடமையை செய்யும் பொழுது ஒரு மனுவை அனுமதிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினால் அது தவறு கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO. - 3630/2013, DT - 4.4.2017

D. Jeganathan and S. Gopinath Vs V. Duraisamy and V. Somu

2017-2-MWN-CIVIL-279
2017-3-MLJ-837"

ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், வாதிக்கு ஆதரவாக Injunction அல்லது stay வழங்கும்போது, அதற்கான காரணத்தை நீதிமன்றம் கூறாமல் உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா?

     உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் பிரதிவாதிக்கு எந்தவிதமான அறிவிப்பும் அனுப்பாமல் உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க விரும்பினால், அவ்வாறு வழங்கப்படுவதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் "சிவகுமார் சதா Vs டெல்லி மாநகராட்சி (1999-3-SCC-161" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

        மேலும் "Dr. V. தேவசகாயம் Vs சத்தியதாஸ் (2002-2-LW-672)" என்ற வழக்கில், ஒரு வழக்கில் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு அனுப்பாமல் அவருக்கு எதிராக நீதிமன்றம் ஏதேனும் தடை உத்தரவை பிறப்பிக்கும் பொழுது அதற்கான காரணத்தை அந்த உத்தரவில் குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு காரணங்களை குறிப்பிடாமல் அளிக்கப்பட்ட உத்தரவு ஒரு நிமிடம் கூட நடைமுறையில் இருக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

       மேலும் உச்சநீதிமன்றம் இதே கருத்தை வலியுறுத்தி "1994-4-SCC-225" என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது.

   உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 39 விதி 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அந்த முறையில் தான் அந்த விஷயம் நடைபெற வேண்டும். கீழமை நீதிமன்றங்கள் அந்த விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டு ஒரு உத்தரவை வழங்கினால் அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

   எனவே ஒரு உரிமையியல் வழக்கில் பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாமல், விரிவான காரணங்களை கூறாமல் வாதிக்கு ஆதரவாக உறுத்துக் கட்டளை உத்தரவு வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRP. NO - 2073/2012

M/s சண்முகம் பவுண்டேஷன் Vs சிவகாமி மற்றும் பலர்

2012-4-LW-CIVIL-670

மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

இந்த வழக்கில் கண்ட எதிர்மனுதாரான ராதாபாய் என்பவர் முதல் மனைவி ஆவார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் கணவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த இரண்டாம் தார மனைவிக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் டாக்டர். மற்றொருவர் இன்ஜினியர். இவர்களின் தந்தை இறந்து போனார். இறக்கும் போது சில சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த சொத்துக்களை இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகளே அனுபவித்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால் முதல் மனைவியான ராதாபாய் அனாதை ஆகிப் போனார். எனவே தன் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாபாய்க்கு மாதம்தோறும் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகள் இந்த மேல்முறையீட்டு மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இரண்டாம் தார பிள்ளைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மாற்றாந்தாய் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி பாம்பே உயர்நீதிமன்றம் "ரமாபாய் Vs தினேஷ்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம், ஒரு மாற்றாந்தாய்க்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை குறித்து விவாதித்திருந்தது. மேலும் கு. வி. மு. ச பிரிவு 125 ல் கூறப்பட்டுள்ள தாய் என்கிற விளக்கத்திற்குள் மாற்றாந்தாய் வருவதில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

முதல் மனைவியும், மாற்றாந்தாயுமான ராதாபாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "D. வடோடரியா Vs குஜராத் மாநில அரசு (1996-4-SCC-497)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அதில் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மாற்றாந்தாய்க்கு ஜீவனாம்சம் கோருவதில் உள்ள உரிமைகள் குறித்து விவரிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

" குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ஐ, அந்த பிரிவு இயற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எளிமையாக பயன்படுத்த வேண்டும். குழந்தை இல்லாத மாற்றாந்தாய் தன்னுடைய கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம், தான் ஒரு விதவை அல்லது கணவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஜீவனாம்சம் கோரலாம் என்று கூறியுள்ளது.

மேலே சொல்லப்பட்ட தீர்ப்பை பாம்பே உயர்நீதிமன்றம் "சரோஜ் கோவிந்த் முக்கவார் Vs சந்திரகலா பாய் (2009-ALLMR-CRL-1139)" என்ற வழக்கில் மேற்கோள் காட்டி தீர்ப்பு கூறியுள்ளதாகவும் கூறி வாதிட்டார்.

எனவே மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற எவ்வித தடையும் இல்லை என்று பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Criminal Appeal No - 1486/2001

Dr.Ravi Kumar and others Vs Radha Bai and Others

2013-1-DMC-509

சுதந்திர உரிமை (சரத்து 19 - 22) - இது 6 வகையான சுதந்திரங்களை அளிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19-ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது அதன்படி...

1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ய) இந்த சுதந்திரம் இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பொது அமைதியின் நலனுக்குட்பட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும். பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்.

2. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (சரத்து -19 (1) (b) இது அரசின் பாதுகாப்பு , அண்டை நாட்டுடன் நட்புறவு பொது அமைதி ஒழுக்கம்,நீதிமன்ற அவமதிப்பு அவதூறு குற்றம் செய்யதூண்டுதல், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்ற நலன்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

3. கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம் ( சரத்து -19 (1 ) (உ) இது பொது அமைதி அல்லது அறநெறியின் நலனுக்குட்பட்டும் ,இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும் கட்டுப்பாடு விதிக்கலாம்.

4. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம் (சரத்து -19 (1) (ன) இது பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

5. இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ந) இது பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். 6. தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம் ( சரத்த -19 (1) (ப) இதன் மீது நியாயமான தடையாகவும், பொதுமக்களின் நலனிற்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும். இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமைகள்(சரத்து -20) · இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 20 -ன் படி ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது. · குற்றஞ்சாட்டப்பட்ட செயல் ,செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட கூடாது.(னுடிரடெந துநடியீயசனல) · குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது.(சுபைhவ யபயiளேவ ளநடக inஉசiஅiயேவiடிn) யாரையும் சுயவிருப்பமின்றி சாட்சியாக்க கட்டாயப்படுத்தக் கூடாது.

வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு (சரத்து -21)

· தனி மனித வாழ்வு மற்றும் தனி மனித சுதந்திரத்தை உறுதி செய்கிறது. தனது சுதந்திரத்தினை, மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அனுபவிக்க வேண்டும். · ஒரு நபரின் வாழ்க்கையும்,தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது. · ஹ.மு. கோபாலன் ஏ சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21 ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. · மேனகா காந்தி ஏ இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளுள் இயற்கை நிதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. · வாழும் உரிமை,தனிமனித உரிமை மற்றும் பல அடங்கும். வாழ்வுரிமை என்பது மாண்புடனும் மரியாதையுடனும் வாழ்வது. பிழைப்புத் தொழில் , சுகாதார மற்றும் மாசற்ற சூழலில் வாழும் உரிமையும் அடங்கும். · தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும். · வாழும் உரிமை சாவதற்கான உரிமையை உள்ளடக்காது.

கல்வி உரிமை (சரத்து 21 -அ)

2002 86 வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது. · 2009 இல் இலவச கட்டாயக் கல்வி ஆறு வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்தல் (ம) சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து2 2

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 22 -ன் படி எவரையும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது. · மேலும் மக்களை விசாரணையின்றி கைது செய்யப்படும் போது , பாதுகாப்பு அளிப்பதோடல்லமால் கைது செய்வதற்கான காரணத்தைக் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது. · சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும் ,கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர் படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது. · ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும், மேலும் வழக்கரைஞரை அமர்த்துவதற்கும் உரிமை உண்டு. · தடுப்புக் காவல் சட்டத்தின் படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14 ,19,21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக் கூடாது. · தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978 ம் ஆண்டின் 44 வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது

Notary Public (நோட்டரி பப்ளிக்)

இது குறித்து "The Notaries Act, 1952(53 of 1952)"  ல் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.

நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது

5. வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

7. நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

நோட்டரி பப்ளிக்காக பணி செய்ய விரும்புபவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, இந்த சட்டத்தின் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி அரசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள பிரிவு 5(a) ன்படி உரிமை உடையவர்கள் ஆவார்கள். அதேபோல் பிரிவு 5(b) ன்படி குறிப்பிட்ட காலத்திற்கு ( சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள்) பணியாற்ற அரசிடமிருந்து சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விதி எண் 8 ன்படி மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழை, குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க கொடுக்கப்படும் விண்ணப்பம், முதலில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரிவு 9 ன்படி மேற்படி சான்றிதழ் இல்லாமல் யாரும் நோட்டரி பப்ளிக்காக பணியாற்ற முடியாது.

நோட்டரி பப்ளிக்கின் பணிகள் பற்றி இந்த சட்டத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில பணிகளை கீழே கூறியுள்ளேன்.

1. எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்

2. எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit)

3. ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்

4. நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்

5. தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்

நோட்டரி பப்ளிக் தனது பணிகளை செய்யும் போது அவருக்குரிய முத்திரையை பயன்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும். "சான்றுறுதி அலுவலர் விதிகள் 1956" ன் விதி 12 ல் அந்த முத்திரை எந்த அளவில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அந்த முத்திரை 5 செ. மீ விட்டமுள்ள சாதாரணமான வட்டவடிவில் இருக்க வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக்கின் பெயர், பணியாற்றும் பகுதி, பதிவு எண், அவரை நியமனம் செய்த அரசு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 139 ல் நோட்டரி பப்ளிக்கால் சரிபார்த்து கையெழுத்து செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலம், நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297 லிலும் கூறப்பட்டுள்ளது.