Tuesday, March 13, 2018

மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?

இந்த வழக்கில் கண்ட எதிர்மனுதாரான ராதாபாய் என்பவர் முதல் மனைவி ஆவார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் கணவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த இரண்டாம் தார மனைவிக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் டாக்டர். மற்றொருவர் இன்ஜினியர். இவர்களின் தந்தை இறந்து போனார். இறக்கும் போது சில சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த சொத்துக்களை இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகளே அனுபவித்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால் முதல் மனைவியான ராதாபாய் அனாதை ஆகிப் போனார். எனவே தன் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாபாய்க்கு மாதம்தோறும் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகள் இந்த மேல்முறையீட்டு மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இரண்டாம் தார பிள்ளைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மாற்றாந்தாய் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி பாம்பே உயர்நீதிமன்றம் "ரமாபாய் Vs தினேஷ்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம், ஒரு மாற்றாந்தாய்க்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை குறித்து விவாதித்திருந்தது. மேலும் கு. வி. மு. ச பிரிவு 125 ல் கூறப்பட்டுள்ள தாய் என்கிற விளக்கத்திற்குள் மாற்றாந்தாய் வருவதில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.

முதல் மனைவியும், மாற்றாந்தாயுமான ராதாபாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "D. வடோடரியா Vs குஜராத் மாநில அரசு (1996-4-SCC-497)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அதில் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மாற்றாந்தாய்க்கு ஜீவனாம்சம் கோருவதில் உள்ள உரிமைகள் குறித்து விவரிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

" குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ஐ, அந்த பிரிவு இயற்றப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எளிமையாக பயன்படுத்த வேண்டும். குழந்தை இல்லாத மாற்றாந்தாய் தன்னுடைய கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம், தான் ஒரு விதவை அல்லது கணவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஜீவனாம்சம் கோரலாம் என்று கூறியுள்ளது.

மேலே சொல்லப்பட்ட தீர்ப்பை பாம்பே உயர்நீதிமன்றம் "சரோஜ் கோவிந்த் முக்கவார் Vs சந்திரகலா பாய் (2009-ALLMR-CRL-1139)" என்ற வழக்கில் மேற்கோள் காட்டி தீர்ப்பு கூறியுள்ளதாகவும் கூறி வாதிட்டார்.

எனவே மாற்றாந்தாய் ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற எவ்வித தடையும் இல்லை என்று பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Criminal Appeal No - 1486/2001

Dr.Ravi Kumar and others Vs Radha Bai and Others

2013-1-DMC-509

சுதந்திர உரிமை (சரத்து 19 - 22) - இது 6 வகையான சுதந்திரங்களை அளிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டபிரிவு 19-ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது அதன்படி...

1. பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ய) இந்த சுதந்திரம் இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பொது அமைதியின் நலனுக்குட்பட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும். பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்.

2. ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் (சரத்து -19 (1) (b) இது அரசின் பாதுகாப்பு , அண்டை நாட்டுடன் நட்புறவு பொது அமைதி ஒழுக்கம்,நீதிமன்ற அவமதிப்பு அவதூறு குற்றம் செய்யதூண்டுதல், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்ற நலன்களுக்காக கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

3. கழகங்கள் /சங்கங்கள் அமைக்க சுதந்திரம் ( சரத்து -19 (1 ) (உ) இது பொது அமைதி அல்லது அறநெறியின் நலனுக்குட்பட்டும் ,இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும் கட்டுப்பாடு விதிக்கலாம்.

4. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம் (சரத்து -19 (1) (ன) இது பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

5. இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் (சரத்து -19 (1) (ந) இது பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். 6. தொழில், பணி மற்றும் வணிகங்கள் செய்யும் சுதந்திரம் ( சரத்த -19 (1) (ப) இதன் மீது நியாயமான தடையாகவும், பொதுமக்களின் நலனிற்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும். இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமைகள்(சரத்து -20) · இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 20 -ன் படி ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது. · குற்றஞ்சாட்டப்பட்ட செயல் ,செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட கூடாது.(னுடிரடெந துநடியீயசனல) · குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது.(சுபைhவ யபயiளேவ ளநடக inஉசiஅiயேவiடிn) யாரையும் சுயவிருப்பமின்றி சாட்சியாக்க கட்டாயப்படுத்தக் கூடாது.

வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு (சரத்து -21)

· தனி மனித வாழ்வு மற்றும் தனி மனித சுதந்திரத்தை உறுதி செய்கிறது. தனது சுதந்திரத்தினை, மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அனுபவிக்க வேண்டும். · ஒரு நபரின் வாழ்க்கையும்,தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது. · ஹ.மு. கோபாலன் ஏ சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21 ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. · மேனகா காந்தி ஏ இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளுள் இயற்கை நிதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. · வாழும் உரிமை,தனிமனித உரிமை மற்றும் பல அடங்கும். வாழ்வுரிமை என்பது மாண்புடனும் மரியாதையுடனும் வாழ்வது. பிழைப்புத் தொழில் , சுகாதார மற்றும் மாசற்ற சூழலில் வாழும் உரிமையும் அடங்கும். · தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும். · வாழும் உரிமை சாவதற்கான உரிமையை உள்ளடக்காது.

கல்வி உரிமை (சரத்து 21 -அ)

2002 86 வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது. · 2009 இல் இலவச கட்டாயக் கல்வி ஆறு வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்தல் (ம) சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு (சரத்து2 2

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 22 -ன் படி எவரையும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது. · மேலும் மக்களை விசாரணையின்றி கைது செய்யப்படும் போது , பாதுகாப்பு அளிப்பதோடல்லமால் கைது செய்வதற்கான காரணத்தைக் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது. · சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும் ,கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர் படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது. · ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும், மேலும் வழக்கரைஞரை அமர்த்துவதற்கும் உரிமை உண்டு. · தடுப்புக் காவல் சட்டத்தின் படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14 ,19,21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக் கூடாது. · தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978 ம் ஆண்டின் 44 வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது

Notary Public (நோட்டரி பப்ளிக்)

இது குறித்து "The Notaries Act, 1952(53 of 1952)"  ல் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் பிரிவு 3 ன்படி மத்திய அரசு, இந்தியா முழுமைக்குமோ, அல்லது இந்தியாவின் ஒரு பகுதிக்கோ, அதேபோல் மாநில அரசுகள், மாநிலம் முழுமைக்குமோ அல்லது மாநிலத்தின் ஒரு பகுதிக்கோ வழக்கறிஞராக பணியாற்றுபவரையோ அல்லது அரசு நிர்ணயிக்கும் தகுதி உடையவரையோ நோட்டரி பப்ளிக்காக நியமிக்கலாம்.

நோட்டரி பப்ளிக் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

1. வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

2. தாழ்த்தப்பட்ட வகுப்பு அல்லது மலை ஜாதியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவராக இருந்தால், வழக்கறிஞராக குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

3. பெண் வழக்கறிஞர்கள் என்றால் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது

4. மத்திய அரசின் சட்டத்துறை பணிகளில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும் அல்லது

5. வழக்கறிஞராக பதிவு செய்தபிறகு, மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ சட்ட அறிவு தேவைப்படும் பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

6. நீதித்துறை பதவிகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும் அல்லது

7. நீதிபதி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அல்லது இராணுவ இலாகாவின் சட்டத்துறை இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.

நோட்டரி பப்ளிக்காக பணி செய்ய விரும்புபவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பிறகு, இந்த சட்டத்தின் பிரிவு 4 ல் கூறப்பட்டுள்ளபடி அரசால் பராமரிக்கப்படும் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள பிரிவு 5(a) ன்படி உரிமை உடையவர்கள் ஆவார்கள். அதேபோல் பிரிவு 5(b) ன்படி குறிப்பிட்ட காலத்திற்கு ( சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள்) பணியாற்ற அரசிடமிருந்து சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

விதி எண் 8 ன்படி மேலே கூறப்பட்டுள்ள சான்றிதழை, குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ளலாம். அவ்வாறு புதுப்பிக்க கொடுக்கப்படும் விண்ணப்பம், முதலில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரிவு 9 ன்படி மேற்படி சான்றிதழ் இல்லாமல் யாரும் நோட்டரி பப்ளிக்காக பணியாற்ற முடியாது.

நோட்டரி பப்ளிக்கின் பணிகள் பற்றி இந்த சட்டத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில பணிகளை கீழே கூறியுள்ளேன்.

1. எழுதப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, அதாவது அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்பதை பார்த்து, அதை எழுதிய நபர்தான் கையொப்பம் இட்டுள்ளாரா என்பதை எல்லாம் சரிபார்த்து சான்று செய்தல்

2. எந்தவொரு நபருக்கும் சத்திய பிரமாணம் என்ற உறுதிமொழி செய்வித்தல் (Administer Oath) அல்லது அவர்களிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குதல் (Affidavit)

3. ஒரு ஆவணத்தை ஒரு மொழியிலிருந்து வேறு ஒரு மொழிக்கு மொழி பெயர்த்தல். அவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட ஆவணங்கள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்

4. நீதிமன்றமோ அல்லது அதைப்போல அதிகார மையமோ கட்டளையிட்டால், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆணையராக இருந்து சாட்சியங்களை பதிவு செய்தல்

5. தேவைப்படும் போது பஞ்சாயத்தாரராகவோ அல்லது மத்தியஸ்தம் செய்பவராகவோ செயல்படுதல்

நோட்டரி பப்ளிக் தனது பணிகளை செய்யும் போது அவருக்குரிய முத்திரையை பயன்படுத்த வேண்டியது கட்டாய தேவையாகும். "சான்றுறுதி அலுவலர் விதிகள் 1956" ன் விதி 12 ல் அந்த முத்திரை எந்த அளவில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அந்த முத்திரை 5 செ. மீ விட்டமுள்ள சாதாரணமான வட்டவடிவில் இருக்க வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக்கின் பெயர், பணியாற்றும் பகுதி, பதிவு எண், அவரை நியமனம் செய்த அரசு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 139 ல் நோட்டரி பப்ளிக்கால் சரிபார்த்து கையெழுத்து செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலம், நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 297 லிலும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, February 13, 2018

இந்திய ஊழல் தடுப்புச் சட்டம், 1988

இந்தியக் குடியரசில் ஊழலைத் தடுக்க 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

வரையறை

இச்சட்டத்தின்படி லஞ்சத்தின் வரையறை:

பொது ஊழியர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்கு சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தை தவிர கைகூலி பெறுவது.பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களை தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரிடம் வாங்குவது.

இதன்படி லஞ்சம் வாங்குவது குற்றம் என கருதப்பட கீழ்கண்ட அம்சங்கள் தேவை:

அதில் சம்பந்தப்பட்டவர் பொது ஊழியராக இருத்தல் வேண்டும்.அவர் செய்யும் வேலை அதிகாரப் பூர்வமாக இருக்க வேண்டும்.பொது ஊழியர் தான் செய்ய வேண்டிய வேலையை செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்க்கோ சட்டத்திற்குப் புறம்பாக பணம் கோருதல் அல்லது பெறுதல்.பொது ஊழியரின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகித்துப் பண மதிப்புள்ள அனுகூலம் பெறத் தகாத சலுகை அளித்தல்.ஒரு குடிமகனிடமிருந்து பொது ஊழியர் அதிகாரப் பூர்வமான கடமையைச் செய்வதற்காக மறுபயனின்றி விலை மதிப்புள்ள பொருளைப் பெறுவதும் லஞ்சமே.அந்த பொது ஊழியர் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ லஞ்சம் பெற்றால் அவரும் அவருக்கு லஞ்சம் வழங்குபவர்களும் குற்றவாளிகள்.பொது ஊழியர் தனது வருமான வழிவகைகளுக்குப் பொருந்தாத விதத்தில் சொத்துக்களைக் சேர்த்தலும் சட்டத்தின் படி குற்றம் என வரையறுக்கப் பட்டிருக்கிறது.

தண்டனை

லஞ்ச ஊழலை சட்டத்தின்படி தவறு இழைத்த ஒரு நபருக்குத் குறைந்த பட்சம் ஆறு மாதம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

ஊழல் ஆணையம்

ஊழலை ஒழிப்பதற்கு இந்திய அரசுமத்திய விழிப்புணர்வு ஆணையத்தைஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு குழுவும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள். தமிழகத்தில் இந்த அமைப்பு இயக்குநர் சென்னை மல்லிகை மாளிகையில் செயப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல்பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஊழல் குறித்து புகார் செய்யும் விதம்

ஊழல் குறித்து புகார் செய்யும் போது புகார்தாரர் தனது பெயரையும், முகவரியையும் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182 -இன் படி தண்டனைக்குரியது. பெயரில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

                        இன்ஷூரன்ஸ் பாலிசி! யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். 

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். 

                            மதிப்பெண் பட்டியல்! யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்? 

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. 

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

                                ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். 

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை 

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.

                            டிரைவிங் லைசென்ஸ்!  யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

                            பான் கார்டு! யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

                            பங்குச் சந்தை ஆவணம்! யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். 

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

                                கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

                                  டெபிட் கார்டு! யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?   ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

                                    மனைப் பட்டா! யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?   ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். 

                                   பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?  ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

                                      கிரெடிட் கார்டு!யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.  

ஒருவரை கொலை செய்வதாக வெறும் வார்த்தைகளால் மிரட்டினால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) & 506(2) ன் கீழ் வழக்கு தொடர முடியுமா?

***********************************************************************
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506(i) ன் கீழான குற்றத்தை பொறுத்து மதுரை உயர்நீதிமன்றம் " சீனிவாசன் Vs சார்பு ஆய்வாளர் (2009-4-MLJ-CRL-1118)" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு பத்தி 11 ல் பின்வருமாறு கூறியுள்ளது.

ஒருவருக்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கம் இருந்தால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ல் கூறப்பட்டுள்ளவை பொருந்தும். ஒருவருக்கு அபாயம் ஏற்படுத்த வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெறுமனே வெறும் வார்த்தைகளை பயன்படுத்துவது போதுமானதல்ல. ஒருவர் மற்றொருவரின் உடலுக்கு, புகழுக்கு அல்லது சொத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்பட்டார் என்பதை எடுத்துக் காட்டினால் மட்டுமே இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச் செயல் நிகழ்ந்துள்ளதாக கருதப்படும்.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " இராஜன் Vs காவல்துறை ஆய்வாளர் (2008-2-MWN-CRL-258)" என்ற வழக்கில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் பத்தி 10 - ல்

" இதே போன்ற சங்கதிகள் கொண்ட " உஷாபாலா Vs பஞ்சாப் மாநில அரசு (2002-2-CCC-320-P&H)" என்ற வழக்கில், பஞ்சாப் உயர்நீதிமன்றம் இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்ற நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

வெறுமனே மிரட்டுவதால் இ. த. ச பிரிவு 506-ன் கீழான குற்றச்சாட்டிற்கான முகாந்திரம் இந்த மனுதாரருக்கு எதிராக உள்ளதாக கருத முடியாது. எனவே இந்த மனுதாரருக்கு எதிராக எந்த வழக்கும் உருவாகவில்லை.

எனவே 15.7.1999 ஆம் தேதி இ. த. ச பிரிவுகள் 406 மற்றும் 498(A) ன் கீழ் பாட்டியாலா, சாதர் காவல் நிலையத்தில் குற்ற எண் 313 என்கிற எண்ணில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் நிகழ்நிலை புகார்தாரரை மிரட்டியதாக மட்டுமே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது  அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று காவல்துறையினரின் பாதுகாப்பு அவரால் கோரப்படவில்லை. எனவே இ. த. ச பிரிவு 506(ii) ன் கீழான குற்றச்சாட்டும் நிலைக்கதக்கதல்ல என்கிற முடிவிற்கு இந்த நீதிமன்றம் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரை உயர்நீதிமன்றம் " கிருஷ்யா டைல்ஸ் & போர்டடரிஸ் (மெட்ராஸ் பி. லிட்) Vs காவல்துறை ஆய்வாளர் (2006-2-CTC-642)" என்ற வழக்கில், 1 முதல் 3 வரையான எதிரிகள் தன்னை கொன்று விடுவதாக மிரட்டினார்கள் என்கிற குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக கூறப்படும் அந்த கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளது.

இதேபோன்றதொரு தீர்ப்பு " D. சுப்பிரமணியன் சுவாமி Vs C. புஷ்பராஜ் (1998-1-CTC-300)" என்ற வழக்கிலும் கூறப்பட்டுள்ளது.

எனவே ஒருவரை கொலை செய்து விடுவதாக வெறும் வார்த்தைகளால் மட்டும் திட்டியதற்காக அவர் மீது இ. த. ச பிரிவுகள் 506(i) மற்றும் 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர முடியாது எனவும் அவ்வாறு தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 18665/2014, DT - 21.4.2015

S. Selvakumar Vs Inspector of police, AWPS, Keelakkarai, Ramanathapuram District

2015-2-MWN-CRL-195

Friday, February 9, 2018

பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழையா?

பத்திரப்பதிவு செய்யும்போது பலரும், பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களைச் சரிவர படிக்கமாட்டார்கள்.வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்தும் முழுமையாகப் படிக்காமல் விட்டுவிடுவார்கள். பத்திரப்பதிவு அலுவலம் சென்று, ஆவணத்தைப் பதிவு செய்து வந்த பிறகு, அதில் பிழை இருப்பதைக் கண்டுபிடிப்பார்கள். ஆவணங்களில் பிழை இருந்தால், பத்திரப்பதிவுக்குப் பிறகு சரி செய்ய முடியுமா?

பத்திரப்பதிவு என்பது வீடோ, மனையோ நமக்குச் சொந்தம் என்பதைக் காட்டும் ஆவணம். அந்த ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எந்தப் பிழையும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.

தட்டச்சு செய்யும்போதோ பிழை ஏற்படுவது சகஜமே. இப்படிப் பத்திரப்பதிவு ஆவணத்தில் பிழை இருந்து, அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின்னாளில் பெரும் பிரச்சினையாகிவிடும். பெயர், தந்தை பெயர், விலாசம், மனையின் விவரங்கள், தொகை போன்ற ஏதாவது விவரம் தவறாக இருந்தால்., பிற்காலத்தில் சொத்தை விற்கும்போதோ, பெயர் மாற்றம் செய்யும்போதோ பெரும் சிக்கலாகிவிடும். சிறு பிழையைக் காரணம் காட்டி சொத்து நமக்கு உரியது அல்ல என்று பேசும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிடும்.

எனவே பத்திரப்பதிவுக்காக ஆவணங்களைத் தயார் செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தை கண்ணில் எண்ணெண்யை விட்டுப் படிக்க வேண்டும். சிறியதாக ஒரு தவறும் இல்லையென்றால் மட்டுமே சரியான ஆவணமாக இருக்கும். ஒரு வேளை பதிவு செய்த பிறகு ஆவணங்களில் தவறு இருந்தால் என்ன செய்வது? அதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எந்தப் பிழையாக இருந்தாலும் அதைச் சரி செய்துவிட முடியும்.

பிழை திருத்தும் ஆவணம் மூலமே பிழைகளைச் சரி செய்ய முடியும். அப்படிப் பிழைகளைத் திருத்தும் ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும். பெயர், விலாசம் போன்றவற்றில் கவனக் குறைவால் ஏற்படும் பிழைகளைத் திருத்தி பதிவு செய்யும்போது அதற்காகக் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்.

சிலர் தாய் பத்திரத்தில் உள்ள சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிட்டுவிடுவார்கள். சர்வே எண்ணை தவறாக குறிப்பிட்டிருந்தாலும் பிரச்சினையில்லை. மனையின் நான்கு எல்லைகள், பரப்பளவு, அமைவிடம் போன்ற தகவல்கள் தாய்ப் பத்திரத்தில் இருப்பதுபோலவே இருந்தால், பிழை திருத்த ரூ. 300 வரை செலவாகக்கூடும்.

எல்லாம் சரி, மனைக்கான அரசு வழிகாட்டி மதிப்பைத் தவறாகக் குறிப்பிட்டால் பிழையைத் திருத்த முடியுமா? இந்தப் பிழை சில ஆண்டுகள் கழித்து தெரிய வந்தால் அலைய நேரிடும். இடைப்பட்ட ஆண்டுகளுக்குள் அரசு வழிகாட்டி மதிப்பு மாறியிருக்கும்.

அந்தப் பிழையைத் திருத்தும்பட்சத்தில் வித்தியாசத் தொகைக்கு முத்திரைத் தீர்வைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த சொல்லக்கூடும். கூடுதல் முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தாமல் இருக்க மேலதிகாரிகள் வரை முறையீடு செய்ய வேண்டியிருக்கும். எனவே தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

இப்படிச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, பத்திரப்பதிவு ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு முன்பே, எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது. வழக்கறிஞர் மூலமும் ஒருமுறை படித்துக்கொள்வதும் எதிர்காலத்தில் சிக்கலைத் தவிர்க்க உதவும்.