Wednesday, November 29, 2017

செக் ரிட்டர்ன்… வழக்கு தொடருவதில் புதிய சட்டத் திருத்தம்!

                செக் ரிட்டர்ன்… வழக்கு தொடருவதில் புதிய சட்டத் திருத்தம்!

                                           பணம் தரவேண்டிய ஒருவர் உங்களுக்குக் காசோலை தருகிறார். ஆனால், அந்தக் காசோலையில் பணம் இல்லை என்று திரும்ப வருகிறது. செக் தந்தவர் மீது வழக்குத் தொடர வேண்டும். அந்த வழக்கை எங்குத் தொடர வேண்டும் என்பதில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் அரசு திருத்தத்தைக் கொண்டுவரவுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தைப் பார்க்கும்முன், ஏற்கெனவே என்ன மாதிரியான நடைமுறை உள்ளது என்று பார்ப்போம்

                                  பணத்தை மொத்தமாக எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்வதற்குப் பதிலாகப் பணத்துக்கு நிகரான ஒரு ஆவணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் ஒழுங்குமுறையின்றி இருந்து வந்தது. அதனை நெறிமுறைப்படுத்த மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பணத்துக்கு மாற்று ஆவணமாக ஒருவர் பிராமிஸரி நோட், பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச், காசோலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று கூறியது.இந்தச் சட்டம் சிவில் சட்டமாக இருந்தது.அதாவது இந்தச் சட்டத்தை மீறீனால், சிவில் வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.

                       காசோலை மூலமான பரிவர்த்தனையை அதிகப்படுத்த வும், நம்பகத்தன்மையை ஊக்கு விக்கவும் இந்தச் சட்டத்தில் 1988-ல் திருத்தம் கொண்டுவரப் பட்டது. அதன்படி பணமில்லா மல் காசோலை திரும்பினால் சட்டப்படிக் குற்றம் என்றும், அதன்மேல் குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் திருத்தப்பட்டது. அதன் அடிப் படையில் நாடு முழுவதும் மிக அதிகமான காசோலை மோசடி வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன.
ஆனால், காலப்போக்கில் குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 30 சதவிகிதத்துக்கும் மேலான வழக்குகள் காசோலை மோசடி வழக்குகளாக இருந்தன. இதற்காக 2002-ல் வழக்குகளை விரைவாக முடிக்க அரசு சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது.அதன்படி காசோலை மோசடி குற்றத்துக்கான சிறை தண்டனையை 1 வருடத்தில் இருந்து 2 வருடமாக உயர்த்தியது.

           இப்படி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டாலும், காசோலை மோசடி வழக்கை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என்பதில் சரியான விளக்கம் சட்டத்தில் இல்லை. அதனால் நீதிமன்ற தீர்ப்புகள்தான் வழிகாட்டியாக இருந்தன.அதன்படி பிரிவு 138-க்குக் கீழான காசோலை மோசடி வழக்கை கீழ்க்கண்ட ஏதாவது ஒரு இடத்துக்கு உட்பட்ட நீதிமன்றத் தில் தாக்கல் செய்து கொள்ளலாம். குறிப்பிட்டு இந்த நீதிமன்றத்தில் மட்டும்தான் வழக்குத் தொடர வேண்டும் என உறுதியான நிலை இல்லை.

1. காசோலை பெறுபவர் /புகார்தாரர் இருக்கும் இடம்
 2. காசோலை வழங்கியவர்/குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் இடம் 3. காசோலை வழங்கிய வங்கி உள்ள இடம் 
4. காசோலையை பணமாக்க செலுத்தப்பட்ட வங்கி இருக்கும் இடம்.

இதற்கேற்ப இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள ஒரு தனியார் வங்கி, ஒரு வாடிக்கை யாளரிடம் இருந்து கடனுக்காகப் பெற்ற காசோலைகளில் பணம் இல்லை என திரும்ப வந்தது. அந்த வங்கியின் தலைமை இடமான மும்பையிலும், மேலும் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் வழக்குத் தொடர்ந்தது. ஒரே நபர் மீது ஒரே பரிவர்த்தனைக்காக மூன்று வெவ்வெறு இடங்களில் ஒரே நிறுவனம் வழங்குத் தொடர்ந்தது பழிவாங்கும் விஷயமாக அமைந்தது.
இதனையெல்லாம் சரி செய்யும் விதத்தில் 2014-ல் மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு இதற்குத் தீர்வு கண்டு,

                          காசோலை எந்த வங்கியில் இருந்து வழங்கப்பட்டதோ அந்த வங்கி அமைந்துள்ள நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத் தில் வழக்குத் தொடரலாம் எனக் கூறியது. இதனால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த பல லட்சம் வழக்குகள் ஒரு நீதிமன்றத்திலிருந்து வேறு நீதி மன்றங்களுக்கு நாடு முழுவதும் மாற்றப்பட்டது. பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை.
இந்த தீர்ப்பு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் சிரமம் தருவதாக அமைந்ததால் அவர்கள் மத்திய அரசை அணுகி தங்கள் சிரமத்தை முன் வைத்தார்கள். அதன் காரணமாக தற்போது அரசு இந்தச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது. இனி காசோலை பெற்றவர்/புகார்தாரர், தான் காசோலையைச் செலுத்தும் வங்கிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கைத் தொடரலாம்.

                                மேலும், ஒரே பரிவர்த்தனையில் ஒருவர் வழங்கிய பல காசோலைகள், அனைத்தும் திரும்பி இருந்தாலும் வெவ்வேறு இடங்களில் வழக்குப் பதிவுசெய்ய முடியாது. அனைத்து வழக்குகளும் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்ற திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது.

                          இந்தச் சட்டம் திருத்தப்படும் பட்சத்தில் உங்களுக்குக் காசோலை தந்து அதில் பண மில்லை என்று திரும்பவந்தால், நீங்கள் காசோலையைச் செலுத்திய வங்கி எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடரலாம். இதற்காக இனி நீண்ட தூரம் அலைந்து வழக்குத் தொடரும் சிரமம் தனிநபருக்கோ அல்லது வங்கிகளுக்கோ இருக்காது.

உரிமையியல் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடலாமா?

உரிமையியல் வழக்குகளில் காவல்துறையினர் தலையிடலாமா?


சொத்தின் உரிமையாளர் யார் என்று கண்டறியும் உரிமையியல் நீதிபதிக்கான பணியை காவல்துறையினர் செய்யக்கூடாது. ஒரு காவல்துறை அதிகாரி நீதிபதியை போன்று செயல்பட முடியாது. எனவே உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையினர் தலையிடக்கூடாது.

மதுரை உயர்நீதிமன்றம்

CRL. OP. NO - 17302/2014, DT - 12.11.2014

A. சிக்கந்தர் Vs காவல்துறை அதிகாரிகள், மதுரை

2015-1-MLJ-CRL-5

மணவாழ்வு மீட்புரிமை சட்டம்:

மணவாழ்வு மீட்புரிமை சட்டம்:

கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும்போது, அப்பிரிவை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது.
மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.
மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணைய
ைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும். சிறப்புத் திருமணச்சட்டத்தின் பிரிவு 22, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 9, இந்திய கிறிஸ்தவர்களுக்கான திருமண முறிவுச்சட்டம் ஆகியவை மணவாழ்வை மீட்பதற்கும், தாம்பத்திய வாழ்வை பெறுவதற்குமான உரிமைகளை வலியுறுத்துகின்றன.

இந்த சட்டங்களின் கீழ், பிரிந்து சென்ற வாழ்க்கைத்துணையுடன் மீண்டும் இணைந்து வாழவிரும்பும் ஒரு நபர் உரிய தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில், இதற்கான மனுவை பதிவு செய்ய வேண்டும்.

அந்த மனுவுடன் திருமணம் நடந்ததற்கான சான்றுகள், சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், குழந்தைகள் இருந்தால் அக்குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள், பிரிவு ஏற்படுவதற்கான காரணங்கள் (தெரிந்திருந்தால்), மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் ஆகியவற்றை குறித்து தெளிவான வாக்குமூலங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இவற்றைப் பரிசீலித்து பார்க்கும் நீதிமன்றம், பிரிந்து வாழும் எதிர்தரப்பினருக்கு இந்த வழக்கு குறித்து தகவல் தெரிவித்து, அவர்களுடைய தரப்பை எடுத்துக் கூறுமாறு அழைப்பாணை (Summon) விடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட நாளில் எதிர்தரப்பினர் அந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பை எடுத்துக்கூற உரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

               மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அந்த காரணங்கள் ஏற்கத் தகுந்ததாக இருந்தால், உரிய முறையில் மணவிலக்கு பெறுவதற்கான ஆலோசனையுடன் அந்த வழக்கு தீர்க்கப்படும்.

              அதற்கான காரணங்களை உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும். பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை எதிர் தரப்பினர் உரிய முறையில் நிரூபிக்காவிட்டால், அவர் கூறும் காரணங்கள் ஏற்கத் தகுந்தது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு, மனுதாரருடன் இணைந்து வாழுமாறு எதிர்தரப்பினருக்கு உத்தரவு வழங்கி வழக்கு தீர்க்கப்படும்.

                                     சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் தம்பதிகள் இருவரும் மீண்டும் தங்கள் நிலையை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் எதிர்காலம் கருதி உரிய முடிவு மேற்கொள்ளவும் இந்த சட்டம் பயன்படுகிறது.

கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!


கையெழுத்துக்களை மெய்ப்பிக்கும் முறைகள்!

இன்று பல வழக்குகளுக்கு கையெழுத்துக்கள்தான் மூல காரணமாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

➤  இது கையெழுத்தே இல்லை.

➤  இது என்னோட கையெழுத்து இல்லை.

➤  இது அவருடைய கையெழுத்து இல்லை

➤  இது  யாரோட கையெழுத்து என்று தெரியவில்லை.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுகிறது. பிறர்  கையெழுத்தை நாம் எழுதுவதும் கையெழுத்து போடத் தெரிந்த ஒருவர் கையெழுத்து போட வேண்டிய இடத்தில், தன்னுடைய கையெழுத்தைப் போடாமல், தனது பெயரை தானே எழுதினாலும் அவை தண்டணைக்குரிய குற்றம் ஆகும்.

இந்த போலியான கையெழுத்துக்கள் எப்படி மெய்ப்பிக்கப்படுகிறது?

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இருந்தால்...?

1) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இருக்கின்றார் என்றால்,  நேரடியாக அழைத்து விசாரணை அதிகாரி அவரை விசாரிக்கலாம். அவர் அதை தன்னுடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

கையெழுத்துக்கு உரியவர் உயிரோடு இல்லை என்றால்...?

2) ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை என்றால், அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை அதிகாரி  விசாரிக்கலாம்.  அவர்கள் அதை இறந்தவருடைய கையெழுத்து இல்லை என்று கூறும் பட்சத்தில் அதனை பொய் கையெழுத்து என்று முடிவு செய்யலாம்.

 கையெழுத்துக்கு உரியவரும், சாட்சியும் உயிரோடு இல்லை என்றால்...?

3)  ஒரு ஆவணத்தில் ஒருவரின் கையெழுத்து உள்ளது. அந்த நபர் உயிருடன் இல்லை மேலும்  அவரது கையெழுத்தை அறிந்த உறவினர்கள், நண்பர்கள் அல்லது உடன் பணி புரிந்தவர்கள் என்று யாருமே இல்லை அல்லது உயிருடன் இல்லை என்றால், அந்தக் கையெழுத்துக்குரிய ஆவணத்தையும், கையெழுத்துப் போட்டவரது வேறு ஒரு பழைய ஆவணத்தையும் Forensic field என்று சொல்லப்படக்கூடிய தடயவியல் துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி ஒப்பிட்டுப் பார்த்து, அவர்கள் தரக்கூடிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் அந்தக் கையெழுத்து பொய்யானதா? உண்மையானதா? என்று விசாரணை அதிகாரி முடிவு செய்ய வேண்டும்.

Tamilnadu Forensic Sciences Department and Lab. 

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவி வழங்க வேண்டுமா?

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவி வழங்க வேண்டுமா?


தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b)  ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த விதி 49(2) கீழே தரப்பட்டுள்ளது.

49(2) துணை விதி 3-ல் கூறப்பட்டுள்ளதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ஒரு அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் 1(a) ஓராண்டு காலத்திற்கு குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது அவருடைய பணிக் காலத்தில் எந்தவொரு நேரத்திலும் இறக்க நேரிடுதல்

(b)  பணி ஓய்வுக்கு பிறகு அவர் இறக்கும் நாளில் ஓய்வூதியம் பெற்றுவருவாரேயானால், இறந்த போனவரின் குடும்பத்தினர் அந்த குடும்ப ஓய்வூதியத்தை எப்படி பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவரை அரசு ஊழியராக பணி நியமன செய்வதற்கு முன்பு உரிய மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு அவர் பணியில் சேர்வதற்கு தகுதி என்று அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்து ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக அந்த அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

எனவே மேற்கண்ட விதியின்படி ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை " தமிழ்நாடு அரசு Vs M. தெய்வசிகாமணி (2009-3-MLJ-1) மற்றும் உச்சநீதிமன்றம் S. K. துவா Vs ஹரியானா மாநில அரசு (AIR-2008-SC-1077) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழங்கியுள்ளது.

W. P. NO - 12437/2007, dt - 3.12.2014

Radha Bai and Another Vs The Secretary, Tamilnadu

2015-1-MLJ-819

அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்

ஒரு பெண்ணிற்கு திருமணமாகாமல் குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தை பிறப்பதற்கு காரணமான நபர் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?


உச்சநீதிமன்றம் " தரம் டியோ யாதவ் Vs உத்திர பிரதேச அரசு (2014-4-SCALE-730)" என்ற வழக்கில் DNA TEST அறிக்கை மிகவும் நம்பகமான ஒன்று என்றும், அதன் சிறப்பு என்னவென்றால் அதனை வைத்து ஒரு தனிப்பட்ட நபர் மற்றும் அவருடைய இரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களான தாயார், தந்தை, சகோதரன் போன்றவர்களை அடையாளம் காண முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் DNA TEST குறித்து விரிவாக விளக்கியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் " கம்டி தேவி Vs ஒஷிராம் (2001-5-SCC-311)" என்ற வழக்கில் DNA TEST அறிக்கை அறிவியல் ரீதியாக மிகவும் துல்லியமானது. ஆனால் அதனடிப்படையில் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 112 ல் உறுதியாக கூறப்பட்டுள்ளதிலிருந்து விடுபடுவதற்கு DNA TEST அறிக்கையின் முடிவு மட்டும் போதுமானதல்ல. ஒரு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்ந்திருந்த காலத்தில் அந்த மனைவி கருவுற்றிருந்த நிலையில், DNA பரிசோதனையில் அந்த குழந்தை அந்த கணவருக்கு பிறக்கவில்லை என்று தெரிய வந்தாலும் பிரிவு 112 ல் கூறப்பட்டுள்ளதை மறுத்துரைக்க வேண்டியது கணவரின் கடமையாகும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அண்மையில் உச்சநீதிமன்றம் " நந்த்லால் வசுதியோ பெட்வாக் Vs லதா நந்த்லால் பெட்வாக் (2014-2-SCC-576)" என்ற வழக்கில் DNA பரிசோதனை அறிக்கை மிகவும் துல்லியமானது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே DNA பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு தந்தை என்று கருதப்படும் நபர் அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CR. Revision. No - 483/2012, DT - 19.8.2014

துவாரகா ஹல்பா Vs சாவித்திரி பாய் மற்றுமொருவர்

2015-1-DMC-824

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?

ஒரு சொத்து குறித்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை விற்பனை செய்தால் அது செல்லுமா?

அவ்வாறு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அந்த சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை பெற்றவருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய முடியுமா?

ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த வழக்கு சொத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் உ. வி. மு. ச கட்டளை 21,விதி 97 ன் கீழ் அல்லது கட்டளை 21,விதி 98 மற்றும் 102 ன் கீழ் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியாது.

உ. வி. மு. ச கட்டளை 21 விதி 102 ஆனது உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, உரிமை மாற்றம் பெற்றவர் இந்த பிரிவின் கீழ் எந்த பரிகாரமும் கோர முடியாது என்று கூறுகிறது.

N. S. S. நாராயண சர்மா மற்றும் பலர் Vs M/s கோல்டு ஸ்டோன் எக்ஸ்போர்ட்ஸ் பி. லிட் (2001-4-CTC-755) மற்றும் பானுமதி (எ) கருணையம்மாள் Vs A. P. அர்த்தநாரி மற்றும் பலர் (2002-5-CTC-483) மற்றும் உச்சநீதிமன்றம் "உஷா சிம்கா Vs டைனாராம் (2008-7-SCC-144)" ஆகிய வழக்குகளில், ஒரு அசல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு, அதில் தீரப்பாணையும் வழங்கப்பட்டிருந்தால், அந்த வழக்கு சொத்து குறித்து ஏதேனும் உரிமை மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் அதன் அடிப்படையில் ஒரு தடங்கல் விண்ணப்பத்தை அந்த சொத்தை வாங்கியவர்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு தடையை உ. வி. மு. ச கட்டளை 21,விதி 102 ஏற்படுத்தும் என்று தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.

எனவே வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கினால் அது அந்த தீர்ப்பை பொறுத்து கட்டுப்படுத்தப்படும் என்றும், வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை கிரையம் வாங்கிய ஒருவர் தீர்ப்பை எதிர்த்து மனுத்தாக்கல் ஏதும் செய்ய முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

C. M  S. A. (MD). No - 12/2014

Dt - 27.1.2015

செல்லத்துரை மற்றுமொருவர் Vs ஆவுடையப்ப கோனார் மற்றும் பலர்

2015-1-TLNJ-970