Wednesday, December 20, 2017

ஏழ்மை நிலையர் (Indigent Person) என்பவர் யார்? நீதிமன்ற கட்டணம் செலுத்த முடியாதவரா? அல்லது சொத்து இல்லாதவரா?

உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 33 விதி 1 ல் ஏழ்மையான நபர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதேபோல் கட்டளை 44 ல் ஏழ்மையான நபர்களால் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 33 விதி 1 ன்படி பார்த்தால் வழக்கு சொத்தை தவிர வேறு சொத்து எதுவும் இல்லாதவராகவும் ரூ. 1000/- க்கு மிகாத சொத்துக்கு உரிமையாளராக இல்லாத நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய நபர்களுக்கு நீதிமன்ற கட்டணம் கட்டுவதிலிருந்து விலக்கு அளிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால் அவ்வாறு விலக்கு அளிக்கும் முன்பாக மேற்சொன்னவற்றோடு விலக்கு கோரும் நபரின் வேலை குறித்த தன்மை, அவருடைய வருமானம் (ஓய்வூதியத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்), வில்லங்கமில்லாத சொத்துக்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் ஆகியோரிடமிருந்து பெறும் பண உதவிகள் ஆகியவற்றையும் நீதிமன்றம் பரிசீலித்து நீதிமன்ற கட்டணம் செலுத்துவதிலிருந்து ஒரு நபருக்கு ஏழ்மை நிலையை காரணம் காட்டி விலக்கு அளிக்க வேண்டும்.

எனவே ஓய்வூதியம் பெற்று வரும் ஒரு நபர் தான் ஏழ்மை நிலையர் என்று கூறி நீதிமன்ற கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற முடியாது. அதேபோல் தனது குழந்தைகள் தனக்கு பணம் ஏதும் கொடுப்பதில்லை என்பதையும், வங்கி கணக்கு புத்தகங்களையும் நீதிமன்றத்தில் விலக்கு கோரும் நபர் ஆஜர்படுத்தி நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Civil Appeal Nos - 5493 with 5494/2011
(Arising out of SLP Nos - 9544 with 23472/2009)
மத்தாய் M. பைக்கெடி Vs K. அந்தோணி
AIR-2011-SC-3221

No comments:

Post a Comment