Tuesday, November 28, 2017

சீராய்வு மனு என்றால் என்ன?

சீராய்வு மனு என்றால் என்ன?

           கீழமை நீதிமன்றமொன்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாததாலோ, முறைகேடாக பயன்படுத்தியதாலோ விளைந்த குறையை போக்கும் வகையில், பரிகாரம் அளிப்பதற்கென வழக்கை மீண்டும் ஆய்வு செய்தல் “சீராய்வு” எனப்படும்.

             The act of examining any judgment, Order or Proceeding in order to remove any defect and grant relief against irregular or improper exercise or non-exercise of jurisdiction by a lower court.

                                                                                                                    (see  sec.115, CPC)

சீரார்வு மனுவை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றம், அதற்கு இணையான நீதிமன்றம், மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மட்டுமே உண்டு.

           கீழமை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, உத்தரவின் நகல் வழங்கப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். சீராய்வு மனுவை தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால் காலதாமதத்தை மன்னித்திட மனுதாக்கல் செய்ய வேண்டும். காலதாமதம் மன்னிக்கப்பட்ட பின்னரே சீராய்வு மனுவிற்கு எண் கொடுக்கப்படும்.

                 நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும்போது, அதனுடன் அதன் நகல், வக்காலத், படிக்குறிப்பு, பொது அறிவிப்புப் படிவங்கள், கீழமை நீதிமன்ற ஆணையின் நகல் ஆகியவற்றை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும்.

                 சீராய்வு மனுவை அவசரத்தன்மையுடனும் தாக்கல் செய்யலாம். அதன் பொருட்டு அவசரத்தன்மை மனு மற்றும் அபிடவிட்டை தாக்கல் செய்தல் வேண்டும்.

             சீராய்வு மனுவில் எதிர்மனுதாரர் முன்னிலையாகிடும்போது எதிர்வுரை தாக்கல் செய்தல் வேண்டும். எதிர்வுரையில் முத்திரைவில்லை ஒட்ட வேண்டியதில்லை. எதிர்வுரையின் ஒவ்வொரு பக்கத்திலும் மற்றும் உண்மை வரைவின் (Verification) மேலும், கீழும் எதிர்மனுதாரர் கையொப்பம் இடுதல் வேண்டும். வழக்கறிஞர் உரிய இடத்தில் கையொப்பம் இடுதல் வேண்டும்.

                            சீராய்வு மனுத் தாக்கல் செய்யும்போது தடையாணை கோரி, மனு மற்றும் அபிடவிட் தாக்கல் செய்யலாம். மனுவில் நீதிமன்ற வில்லை ஒட்டுதல் வேண்டும்.

                      தடையாணை கோரி மனுத்தாக்கல் செய்யும்போது கேவியட் மனு நிலுவையில் இருந்தால் அதனைத் தடையாணை மனுவில் குறிப்பிட்டு, சீராய்வு மனுதாரரின் வழக்கறிஞர் கையொப்பம் இடுதல் வேண்டும். கேவியட் மனு இல்லையென்றாலும், கேவியட் மனு நிலுவையில் இல்லை என்று குறிப்பிட்டு சீராய்வு மனுதாரரின் வழக்கறிஞர் கையொப்பமிடுதல் வேண்டும்.

                   மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுவை சாதாரணமாகக் கொடுத்தாலும், அவசரத்தன்மையானதாகக் கொடுத்தாலும் செரசஸ்தாரிடம் கொடுத்தால் போதுமானதாகும். மாவட்ட வருவாய் அலுவலரிடம் தாக்கல் செய்யும் சீராய்வு மனுவை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.


நன்றி : சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம், M.A, B.L.,

No comments:

Post a Comment