Wednesday, November 29, 2017

ஒரு முன் ஜாமீனையோ அல்லது ஜாமீனையோ ரத்து செய்வதற்கு

ஒரு முன் ஜாமீனையோ அல்லது ஜாமீனையோ ரத்து செய்வதற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் அந்த காரணத்தை நிரூபிக்கும் விதமாக ஆதாரங்களும் இருக்க வேண்டும். ஜாமீன் / முன்ஜாமீன் வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ல் கூறப்பட்டுள்ளவற்றோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஜாமீன் / முன்ஜாமீன் வழங்குவதன் மூலம் ஒரு நபரின் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் அழித்தல் / நீக்குதல் என்கிற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. அந்த சட்டத்தில் கைது செய்வதற்கான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே கு. வி. மு. ச பிரிவு 41ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளையும், அந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 41(A) ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளையும் நீதிமன்றம் தன்னுடைய கவனத்தில் கொள்ள வேண்டும்.

கைது என்பது உரிமையியல் சுதந்திரத்திற்கு எதிரானது ஆகும். கைது செய்வதை யாரும் விரும்பமாட்டார்கள். கைது செய்யப்படுவதால் ஒருவருக்கு எந்த பெருமையும் ஏற்படாது. அதனால்தான் தனி மனித சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மிகவும் மதிப்பு வாய்ந்த தனி மனித சுதந்திரத்தை ஒரு நபரிடமிருந்து பறிக்கும் பொழுது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

ஒரு குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி புலன் விசாரணையில் குறுக்கிடுகிறார் அல்லது ஏற்கனவே செய்தது போல் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் அல்லது வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயல்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆனால் மட்டுமே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். ஆனாலும் அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

ஒருவர் மோசடி செயல்களில் ஈடுபட்டு ஜாமீன் அல்லது முன்ஜாமீன் உத்தரவுகளை பெறுவது மிகவும் மோசமான செயலாகும். இந்த மாதிரி செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடக்கூடாது. அது வழக்கறிஞர்கள் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடும்.

எனவே ஒருவரின் ஜாமீன் அல்லது முன்ஜாமீனை திரும்பப் பெறும்போது நீதிமன்றங்கள் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. OP. NO - 5984/2015, DT - 11.3.2016

சவானி கோபர் பி. லிட் Vs ஆய்வாளர், மாவட்ட குற்றப்பிரிவு, வேலூர் மாவட்டம் மற்றும் பலர்

(2016-2-MWN-CRL-154)

No comments:

Post a Comment