Sunday, November 26, 2017

*இந்து ஒருவர் கிறிஸ்து மதம் மாறினால்*




*கிறிஸ்தவர்களுக்கான பாகப்பிரிவினை*

     இந்திய கிறிஸ்தவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு மூதாதையர் வழிச் சொத்து (Ancestral Property) என்றோ,கூட்டு குடும்ப சொத்து (Joint Family Property) என்றோ இல்லை.

     இந்து கூட்டு குடும்பத்தில் இருப்பதை போல கிறிஸ்தவர்களில் கர்த்தா (Kartha) என்ற அந்தஸ்து யாருக்கும் இல்லை. அதுபோல தத்தெடுப்பு (Adoption) என்பதும் கிறிஸ்தவ சட்டத்தில் இல்லை.

     முதல் மனைவி உயிரோடிருக்கும் போது இரண்டாவது மனைவி (Second Wife) என்பதை கிறிஸ்தவ சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. முதல் மனைவி இறந்த பின்னரோ அல்லது முதல் மனைவியிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்ற பின்னரோ தான் ஒரு கிறிஸ்தவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும்.

     திருமணத்தின் போது ஒரு கிறிஸ்தவ பெண் தனது பெற்றோர் இடமிருந்து சீதனம் பெற்றுக் கொள்வதை இந்திய வாரிசுரிமை சட்டம் தடை செய்யவில்லை. ஒரு கிறிஸ்தவ பெண் சீதனம் பெற்றுக் கொள்வதால் அவளுக்கு அவளது பெற்றோரின் வழியில் இருந்து கிடைக்கும் சொத்தை அந்த சீதனம் எந்த விதத்திலும் பாதிக்காது.

     *ஒரு கிறிஸ்தவ மகனின் சொத்தில் ஒரு இந்து தந்தைக்கும், ஓரு கிறிஸ்தவ சகோதரனின் சொத்தில் இந்து சகோதரனுக்கும், சகோதரிக்கும் பங்கு உள்ளது.*

     வளர்ப்பு தாயை (Stepmother) இந்து வாரிசுரிமை சட்டம் தாயாக ஏற்றுக் கொள்வதில்லை.

(1) இந்தியாவை தாயகமாக கொண்டவர்கள்

(2) கலப்பில்லாததும், உண்மையிலேயே ஆசியா கண்டத்தை (unmixed Asiatic descent) சேர்ந்தவர்களாகவும் உள்ளவர்கள்

(3) கிறிஸ்தவ மதத்தின் ஏதாவது ஒரு பிரிவை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள், ஆகியோர்கள் இந்திய கிறிஸ்தவர்கள் ஆவார்கள்.

     ஆங்கிலோ இந்தியர்கள் (Anglo Indian) இந்திய கிறிஸ்தவர்கள் ஆக மாட்டார்கள். ஒரு இந்து தனது மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி அவர் இறக்கும் வரை கிறிஸ்தவ மதக் கொள்கைகளை தழுவி வாழ்ந்திருந்தாலோ அல்லது ஒருவரின் மூதாதையர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி அம் மூதாதையரின் வாரிசும் அவர் இறக்கும் வரை கிறிஸ்தவ மதக் கொள்கைகளை ஏற்று வாழ்ந்திருந்தாலோ அவ்வாறானவர்களின் சொத்துகளில் ஏற்படும் பிரச்சினைகள் இந்திய வாரிசுரிமை சட்டப்படிதான்(Indian Succession Act, 1925)தீர்மானிக்கப்படும்.

     இந்திய வாரிசுரிமை சட்டம் 29 முதல் 49 வரையிலான பிரிவுகள் உயில், கொடை போன்ற ஆவணங்களை எழுதி வைக்காமல் இறந்து போன ஒரு இந்திய கிறிஸ்தவருக்கு (ஆண்/பெண்) உரிமையான சொத்துக்கள் எவ்வாறு பாகம் பிரிக்கப்படுகிறது என்பது பற்றி கூறுகிறது. இந்திய கிறிஸ்தவர் ஒருவர் உயில், கொடை போன்ற ஆவணங்களை எழுதி வைக்காமல் இறந்திருந்தாலோ அல்லது அந்த ஆவணங்களை எழுதி வைத்துவிட்டு இறந்திருந்தாலோ அவரது சொத்து குறித்து பிரச்சினை ஏற்பட்டால் அது இந்திய வாரிசுரிமை சட்டப்படிதான் தீர்க்கப்படும் என்று பிரிவு 29 கூறுகிறது.

     *ஒரு இந்து, கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி அவர் இறக்கும் வரை கிறிஸ்தவ மதத்தையே தழுவி வாழ்ந்து வந்திருந்தால் அவரது சொத்துக்களை குறித்த பிரச்சினை ஏதாவது ஏற்பட்டால் அது இந்திய வாரிசுரிமை சட்டப்படிதான் தீர்மானிக்கப்படும்.*

     *அவ்வாறில்லாமல் அப்பிரச்சினையை இந்து வாரிசுரிமை சட்டப்படி (Hindu Succession Act 1956) தீர்மானிக்க முடியாது.*

     ஒரு இந்திய கிறிஸ்தவர் தனது மதத்தை துறந்து இந்து மதத்திற்கு மதம் மாறி ஒரு இந்து பெண்ணை இந்து மதச் சடங்குகளின் (rites) படியும், இந்து மத வழக்கங்களின் (customs) படியும், இந்து திருமணச் சட்டம் 1956ன் படியும் திருமணம் செய்திருந்தால் அவரது சொத்து குறித்த பிரச்சினைகள் இந்து வாரிசுரிமை சட்டம் 1956ன் படி தீர்க்கப்படும்.

     மாறாக இந்திய வாரிசுரிமை சட்டப்படி தீர்க்கப்படாது. இந்து கூட்டு குடும்பத்தின் கூட்டுரிமையாளர்களில் ஒருவர் (Coporcener) கிறிஸ்தவராக மதம் மாறி விட்டால் அவர் அந்த இந்து கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்து கூட்டுரிமையாளராக இருக்க முடியாது.

     *இந்து ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி மீண்டும் அவர் இந்து மதத்திற்கே திரும்பி இந்துவானால், இந்து கூட்டுக் குடும்ப சொத்தில் அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய அன்று அவருக்கு அச்சொத்தில் என்ன பாகம் இருந்ததோ அந்த பாகத்தை அவர் அடைவார்.*

     இந்திய கிறிஸ்தவர் ஒருவர் தனது சொத்துக்கள் குறித்து உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போனால் அவரின் சொத்து இந்திய வாரிசுரிமை சட்டப்படி பிரிக்கப்படும். இந்திய கிறிஸ்தவர் ஒருவர் தான் எழுதிய உயிலில், அவ்வுயிலின் நிறைவேற்றாளரை (Executor) மட்டும் குறிப்பிட்டு கூறிவிட்டு அவரது சொத்துக்களை பகிர்ந்தளிப்பது (distribution) பற்றி எதுவும் கூறவில்லை எனில் அது முழுமை அடையாத உயிலாகும்.

     இந்திய கிறிஸ்தவர் ஒருவர் தனது முறையில்லா செயல்களுக்காக (illegal purposes) அவரது சொத்துக்கள் குறித்து ஒரு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார் என்றால் அது முறையில்லா செயலுக்கான உயில் எனப்படும். மேலேகூறிய விதமாக ஒருவருக்கு சொத்துக்கள் இருந்தும் அவைகள் குறித்து அவர் எழுதி வைத்துள்ள உயிலை நடைமுறைப்படுத்த இயலாவிட்டால் (not Enforceable) அவர், அவரது சொத்துக்களை குறித்து உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போய்விட்டதாக கருத வேண்டும் என பிரிவு 30 கூறுகிறது.

     இரண்டாம் அத்தியாயம் பார்ஸியர்களுக்கு பொருந்தாது என்று பிரிவு 31 கூறுகிறது. உயில்,கொடை போன்ற ஆவணங்களின்றி ஒருவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்கள் அவருடைய மனைவி அல்லது கணவர் அல்லது குருதி வழி உறவினர் (kindred) இவர்களுக்கு எப்படி பிரிக்கப்படும் என பிரிவு 32 கூறுகிறது.

     இறந்து போன கணவருக்கு மனைவி (விதவை) யும், நேர் வழித் தோன்றல்களும் இருந்தால் அல்லது விதவையும், குருதி வழி உறவினரும் இருந்தால் அல்லது விதவை இருந்து குருதி வழி உறவினர் இல்லாவிட்டால் அவரது சொத்துக்கள் எவ்வாறு பிரிக்கப்படும் என பிரிவு 33 கூறுகிறது.

     இறந்து போன கணவருக்கு அவரது மனைவியும், அவரது நேர் வழி தோன்றல்களான குழந்தைகளும் (Lineal descendants) இருந்தால், இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு 1/3 பாகமும், குழந்தைகளுக்கு 2/3 பாகமும் கிடைக்கும். இறந்து போன கணவருக்கு அவருடைய குழந்தைகள் இல்லாமல் இருக்கும் போது அவரது மனைவி 1/2 பாகத்தையும், மீதி உள்ள 1/2 பாகத்தை அவரது குருதி வழி உறவினரும் அடைவார்கள்.

     இறந்து போன கணவருக்கு அவரது குழந்தைகளோ அல்லது குருதி வழி உறவினரோ இல்லாமல் இருந்து, அவரது மனைவி மட்டும் உயிருடன் இருந்தால் அந்த மனைவி முழு சொத்தையும் அடைவார்.

     *இறுதியாக இந்து தந்தைக்கு பிறந்து பின் இந்து மதத்தை வெறுத்து நீங்கள் இன்று கிறிஸ்துவ மதத்தை ஏற்று மதம் மாறிய பின்பு இந்து தந்தையின் சொத்தில் உமக்கு உரிமை இல்லை*


No comments:

Post a Comment