Sunday, November 26, 2017

கணவர் தனது சொத்தில் ஒரு பகுதியை இளவர் குழந்தைக்கு எழுதி கொடுத்த பின்னரும் இளவர் குழந்தையோடு வாழ்ந்து வரும் மனைவி தனக்கு ஜீவனாம்சம் கேட்டு கணவரின் சொத்தின் மீது நீதிமன்றத்தின் மூலம் பொருட்பிணை(Charge)  ஏற்படுத்த முடியுமா?


3ம் நபருக்கு சொத்திலுள்ள ஜீவனாம்ச உரிமை குறித்து சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of property Act) பிரிவு 39 ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி மனைவி ஜீவனாம்ச உரிமையை பெறுவதற்காக கணவருக்கு சொந்தமான சொத்தின் மீது பொருட்பிணையை ஏற்படுத்தலாம்.

"பந்தா மாணிக்கம் Vs பந்தா வெங்காயம்மாள் (AIR-1957-AP-710) " என்ற வழக்கில் கணவன் அல்லது தந்தைக்கு தன்னுடைய மனைவி அல்லது சிறு குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட கடமையாகும். அந்த கடமையை செய்யத் தவறும் பட்சத்தில் அவரை சிறைக்குத் தான் அனுப்பியாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு தனியாக சொத்து இருந்தாலும், அவரையும் இளவர் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியது அவர் ஆற்ற வேண்டிய கடமையாகும் என்றும், எனவே மனைவி ஜீவனாம்ச உரிமையை பெறுவதற்காக கணவருக்கு சொந்தமான சொத்தின் மீது பொருட்பிணையை ஏற்படுத்துவது நியாயமான ஒன்று என்று தீர்ப்பு கூறியுள்ளது.

ஒரு பெண்ணிற்கு திருமணமான பிறகு கணவனின் சொத்தில் மனைவி என்கிற அந்தஸ்தில் கணவனின் சொத்தில் அவருக்குள்ள உரிமையை மறுக்க முடியாது. எனவே கணவன் தன்னுடைய கடமையை செய்யத் தவறும் போது அவருக்கு சுய சம்பாத்தியத்தின் மூலமாகவோ, பரம்பரையாகவோ வந்த சொத்தின் மீது ஒரு பொருட்பிணையை (Charge) நீதிமன்றம் ஏற்படுத்த இயலும். எனவே கணவனுக்கு சொந்தமான சொத்திலிருந்து வரும் வருமானத்தில் மனைவி தன்னுடைய ஜீவனாம்ச உரிமையை கோர முடியும்.

மேற்கண்ட "பந்தா மாணிக்கம்" தீர்ப்பை ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு "சந்திரம்மா Vs M. வெங்கடரெட்டி (AIR-1958-AP-396)" என்ற வழக்கில் ஆமோதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், பெண்களுக்கான தனிப்பட்ட ஜீவனாம்ச உரிமைகள் குறித்து நீதிமன்றத்தில் தீர்ப்புகள் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் 1946 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் 19 ன்படி (Act 19 of 1946) பெண்கள் மற்றும் இளவர் குழந்தைகளுக்குரிய ஜீவனாம்ச உரிமை சட்ட வடிவமாக மாற்றப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் "துளசம்மா Vs சேஷா ரெட்டி (AIR-1977-SC-1944)"  என்ற வழக்கில், கணவன் உயிரோடு இருக்கும் பொழுது தன்னுடைய மனைவியை காப்பாற்றுவது அவருடைய கடமையாகும். அவ்வாறு காப்பாற்றாத நிலையில் அவருடைய சொத்தின் மீது பொருட்பிணையை ஏற்படுத்தலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இந்து பெண்களுக்கு உள்ள ஜீவனாம்ச உரிமை என்பது ஒரு சாதாரணமான விஷயமாகவோ, மாய தோற்றமளிக்கக்கூடிய கோரிக்கையாகவோ கருத முடியாது. அவர்களுக்கு உள்ள உரிமை பரிதாபத்தின் அடிப்படையில் ஏற்பட்டதல்ல. சட்டத்தின் அடிப்படையில் கணவன், மனைவி என்கிற உறவின் அடிப்படையில் ஏற்பட்டது. இந்த உரிமையானது யஜ்ஜன வல்கயா (Yajna Valkaya) காலம் முதல் மனு (Manu) காலம் வரை நடைமுறையில் இருந்துள்ளது. ஒரு சொத்தின் மீது ஒரு பெண்ணிற்கு உள்ள வாழ்க்கை பொருளுதவி உரிமை குறித்து நீதிமன்றம் ஒரு பொருட்பிணையை ஏற்படுத்தினால் அது சட்டப்படி செயல்படுத்தக்கூடிய ஒன்றாக மாறிவிடும்.

"இராகவன் Vs நாகம்மாள் (AIR-1979-MADRAS-200) " என்ற வழக்கில், மனைவி தனக்குள்ள வாழ்க்கை பொருளுதவி உரிமையை பெற கணவனின் சொத்தின் மீது பொருட்பிணையை, இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்( Hindu Adoption and maintenance Act 1956) பிரிவு 28 ன் கீழ் மனுதாக்கல் செய்வதா? அல்லது சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 39 ன் கீழ் மனுதாக்கல் செய்வதா? என்ற வினா எழுந்தது. அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கணவனின் சொத்தில் தனக்குள்ள உரிமையை பெற சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 39 ன் கீழ் தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என "லட்சுமன் ராமசந்திரா Vs சத்தியபாமா (1877-ILR-2-BOM-494),ஜமுனா Vs மைக்கேல் ஷாஹ் (1878-ILR-2-ALL-315),நர்மதா Vs மஹீதோ நாராயண் (1880-ILR-5-BOM-99) மற்றும் லட்சுமி தேவி அம்மா Vs நாகம்மா (AIR-1925-MADRAS-757) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி இந்து சட்டப்படி மனைவி தனது ஜீவனாம்ச உரிமையை பெறுவதற்காக கணவருக்கு சொந்தமான சொத்தின் மீது பொருட்பிணையை ஏற்படுத்தலாம் என தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஒரு மனைவி ஜீவனாம்சம் பெறுவதற்காக, கணவரின் சொத்தின் மீது பொருட்பிணையை ஏற்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

S. A. NO - 111/2006

A. K. Vijayakumar Vs Manimegalai

(2012-1-MWN-CIVIL-359)

No comments:

Post a Comment